Published:Updated:

`மறு அறிவிப்பு வரும் வரை வேளாண் சட்டங்களுக்கு தடை!’ - அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

வேளாண் சட்டப் பிரச்னைகளைத் தீர்க்க, குழு அமைக்கும் உச்ச நீதிமன்ற முடிவுக்கு மத்திய அரசு வரவேற்பு தெரிவித்தது.

டெல்லியில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவந்த நிலையில், அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாராணை ஒன்றும் நடைபெற்றுவந்தது. இந்தநிலையில், தற்போது உச்ச நீதிமன்றம் மூன்று வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய மூன்று வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த நவம்பர் 26-ம் தேதி தொடங்கி கிட்டத்தட்ட 50 நாள்களாகத் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

கடும் குளிரிலும் நடந்துவரும், விவசாயிகளின் தொடர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையில், இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. `வேளாண் சட்டங்களை அரசு திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்’ என்று விவசாயிகளும் உறுதியாக இருக்கிறார்கள். போராட்டக் களத்திலிருக்கும் விவசாயிகளுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆதரவு பெருகிவருகிறது. மத்திய அரசின் இந்தச் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்திய தலைமை நீதிபதி (CJI) ஷரத் அரவிந்த் பாப்டே (Sharad Arvind Bobde) தலைமையில் ஏ.எஸ்.போபண்ணா (A.S.Bopanna) மற்றும் வி.ராமசுப்பிரமணியன் (V.Ramasubramanian) அடங்கிய மூன்று நீதிபதிகள்கொண்ட அமர்வு, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தியதற்கு எதிராக தி.மு.க எம்.பி திருச்சி சிவா மற்றும் ஆர்.ஜே.டி-யின் மனோஜ் கே ஜா ஆகியோர் தாக்கல் செய்த மனு உட்பட பல்வேறு மனுக்களை விசாரித்துவந்தது.

நேற்றைய விசாரணையில்போது ,``விவசாயிகள் போராட்டத்தின் நிலைமை மோசமாக இருக்கிறது. இதை அரசு கையாளும்விதம் ஏமாற்றமளிக்கிறது. போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். முதியவர்களும் பெண்களும், போராட்டக் களத்தில் இருக்கிறார்கள். வேளாண் சட்டம் எந்த வகையில் சிறந்தது என்பது குறித்து ஒரு மனுகூட தாக்கல் செய்யப்படவில்லை. மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே என்ன மாதிரியான பேச்சுவார்த்தை நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

சட்டத்தை அமல்படுத்துவதை எங்களால் தடை செய்ய முடியும். சட்டங்களை நிறுத்திவைக்க அரசு தயாராக இருந்தால், விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு எந்தவிதமான ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்திருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இன்றும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, `மூன்று வேளாண் சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க முடியுமா?’ என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியது. மேலும், `சட்டத்தை நிறுத்திவைத்து குழு அமைக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு’ எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், `குழு அமைக்கப்படுவதை விவசாய சங்கங்கள் ஏற்காது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கட்டாயம் குழு அமைப்போம். அது நீதிமன்ற அலுவல்களின் ஒரு பகுதியாகவே இருக்கும்’ எனத் தெரிவித்தது. இந்தநிலையில் வேளாண் சட்டப் பிரச்னைகளை தீர்க்க குழு அமைக்கும் உச்ச நீதிமன்ற முடிவுக்கு மத்திய அரசு வரவேற்பு தெரிவித்தது.

விசாரணையின் முடிவில் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறபித்தது. மறு உத்தரவு வரும் வரையில் இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இதனால் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு