Published:Updated:

வேளாண் சட்டங்கள்: `குழு அமைக்கலாம்; ஆனால் நிறுத்திவைக்கக் கூடாது!’ - மத்திய அரசு வாதம்

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்திய தலைமை நீதிபதி (CJI) பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தியதற்கு எதிரான மனுக்களை விசாரித்தது.

மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய மூன்று வேளாண் மசோதாக்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த நவம்பர் 26-ம் தேதி தொடங்கி 50 நாள்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

கடும் குளிரிலும் நடந்துவரும், விவசாயிகளின் தொடர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்த நிலையில், இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. `வேளாண் சட்டங்களை அரசு திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்’ என்று விவசாயிகளும் உறுதியாக இருக்கிறார்கள். போராட்ட களத்திலிருக்கும் விவசாயிகளுக்கு நாடு முழுவதிலுமிருந்து ஆதரவு பெருகிவருகிறது. மத்திய அரசின் இந்தச் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்திய தலைமை நீதிபதி (CJI) ஷரத் அரவிந்த் பாப்டே (Sharad Arvind Bobde) தலைமையில் ஏ.எஸ்.போபண்ணா (A.S.Bopanna) மற்றும் வி.ராமசுப்பிரமணியன் (V.Ramasubramanian) அடங்கிய மூன்று நீதிபதிகள்கொண்ட அமர்வு, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்தியதற்கு எதிராக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் ஆர்.ஜே.டி-யின் மனோஜ் கே ஜா ஆகியோர் தாக்கல் செய்த மனு உட்பட பல்வேறு மனுக்களை விசாரித்தது.

அப்போது, வேளாண் சட்டங்களை நிறுத்துவது குறித்து ஓர் அறிக்கையை வெளியிடுமாறு மத்திய அரசை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்யவில்லையென்றால், நீதிமன்றம் நிபுணர்கள்கொண்ட குழு அமைத்து, வேளாண் சட்டங்கள் குறித்துத் தீர்வுகாண வேண்டி வரும் என்றும் எச்சரித்திருக்கிறது.

`வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கிறீர்களா... நாங்கள் நிறுத்தவா?' - அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

தலைமை நீதிபதி பாப்டே, ``பிரச்னையில் இணக்கமான தீர்வை எங்களால் கொண்டு வர முடியுமா என்பதைப் பார்ப்பதே நோக்கம். நீங்கள் (மத்திய அரசு) ஏன் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கக் கூடாது? உங்களுக்குப் பொறுப்புணர்வு இருந்தால், 'நாங்கள் எங்கள் சட்டங்களைச் செயல்படுத்த மாட்டோம்' என்று நீங்கள் கூறலாம். இல்லையென்றால், நாங்கள் அதிகாரிகளின் குழுவை நியமிக்கிறோம். அந்தக் குழுவின் விவாதம் முடிந்து தீர்வு எட்டும் வரை சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்துங்கள்" என்று கூறியிருக்கிறார்.

மேலும், வழக்கு விசாரணையின்போது,``விவசாயிகள் போராட்டத்தின் நிலைமை மோசமாக இருக்கிறது. இதை அரசு கையாளும்விதம் ஏமாற்றமளிக்கிறது. போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். முதியவர்களும் பெண்களும், போராட்ட களத்தில் இருக்கிறார்கள். வேளாண் சட்டம் எந்த வகையில் சிறந்தது என்பது குறித்து ஒரு மனுகூட தாக்கல் செய்யப்படவில்லை. மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே என்ன மாதிரியான பேச்சுவார்த்தை நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்திருக்கிறது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

மேலும்,``சட்டத்தை அமல்படுத்துவதை எங்களால் தடை செய்ய முடியும். சட்டங்களை நிறுத்திவைக்க அரசு தயாராக இருந்தால், விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு எந்தவிதமான ஆக்கபூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?" என்று மத்திய அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இறுதியாக,``போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், நாம் அனைவருமே பொறுப்பு. போராட்ட களத்தில் ரத்தக்கறை படிவதை நாங்கள் விரும்பவில்லை. சட்டத்தை நிறுத்திவைக்க மத்திய அரசு விரும்பாவிட்டால், நாங்கள் சட்டத்தை நிறுத்தி வைப்போம்" என்று தலைமை நீதிபதி பாப்டே காட்டமாகத் தெரிவித்தார்.

விவசாயிகள்
விவசாயிகள்

மத்திய அரசு தரப்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல், ``உச்ச நீதிமன்றம் தேவைப்பட்டால் குழு அமைக்கலாம். ஆனால், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கக் கூடாது. இந்தச் சட்டங்கள் ஜூன் 2020-ல் உத்தரவு மூலம் நடைமுறைக்கு வந்தன. அதன் பிறகு, 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மண்டியில் பொருள்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நீதிமன்றம் இந்தச் சட்டங்களை செயல்படுத்துவதை நிறுத்தினால், அவர்கள் பெரும் இழப்பைச் சந்திப்பார்கள்” என்றார். மேலும் கடந்தகால வழக்குகள் சிலவற்றையும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகள் போராட்டத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருப்பது விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர் போராட்டத்துக்குத் தீர்வு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு