அ.தி.மு.க-வில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதன் காரணமாக, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தானும் வேட்பாளரை நிறுத்தப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறிவருகிறார். மறுபக்கம் ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கு, தான் கையெழுத்திட்ட படிவத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாகக் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிவருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம், தான் கையொப்பமிட்ட படிவத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இதன் காரணமாக அ.தி.மு.க தரப்பிலிருந்து வேட்பாளரும் இதுவரை அறிவிக்கப்படவில்லை, இரட்டை இலைச் சின்னம் யாருக்குக் கிடைக்கும் என்பதும் தெளிவாகவில்லை. இத்தகைய நெருக்கடியில், ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், எடப்பாடியின் கோரிக்கை மனு உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில், எடப்பாடி பழனிசாமியின் மனு மீது காலதாமதம் செய்யாமல் உடனடியாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதேசமயம், எடப்பாடி பழனிசாமியின் மனு மீது எதிர்தரப்பினர் இன்னும் மூன்று நாள்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான அடுத்த விசாரணை வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் அளிக்கும் பதில் மூலம் யாருக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும் என்பதற்கும், அ.தி.மு.க சார்பில் யார் வேட்பாளரை நிறுத்துவார்கள் என்பதற்கும் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.