Published:Updated:

`தண்டனைக் கைதிகளுக்கும் பரோல் வழங்க வேண்டும்!' - தமிழக அரசின் மீதான குற்றச்சாட்டு என்ன?

தமிழக அரசு - தலைமைச் செயலகம்
தமிழக அரசு - தலைமைச் செயலகம்

கொரோனா நெருக்கடியை எதிர்கொள்வதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு அரசு சொல்லும் பதில் என்ன?

கொரோனா நெருக்கடி உலகை அசைத்துப் பார்த்திருக்கிறது. சமூகத்தில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகளை பட்டவர்த்தனம் ஆக்கியிருக்கிறது கொரோனா. கொரோனாவை எதிர்கொள்ள உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதில் ஒன்று, நிரம்பி வழியும் சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகள், உடல் நலம் குன்றிய கைதிகள், நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்தவர்களை விடுதலை செய்து சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதே.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பெரும்பாலான நாடுகள் தங்களின் சிறைகளின் கொள்ளவை விடவும் அதிகமான கைதிகளைக் கொண்டுள்ளன. இந்தியா தன் சிறைக் கொள்ளவை விடவும் 15% அதிகமான கைதிகளைக் கொண்டுள்ளது. அதாவது 100 கைதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 115 கைதிகள் உள்ளனர். மேலும், இந்திய சிறைகளில் மூன்றில் இருவர் விசாரணைக் கைதிகள். இதனால் சிறைகள் நிரம்பி வழிவதோடு, உள்கட்டமைப்புகளும் வசதிகளும் போதுமானதாக இல்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், சிறையில் யாருக்காவது கொரோனா தொற்று பரவினால் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் சிறைக்கு பார்வையாளர்களை அனுமதிப்பது ரத்து செய்யப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்திய உச்சநீதிமன்றமும் இது தொடர்பான வழக்கில் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள சிறைத்துறை தயாராக இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. சிறைகளின் அடர்த்தியைக் குறைக்க கைதிகளுக்கு பரோல் வழங்கி விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இதற்காக ஒவ்வொரு மாநிலமும் ஓர் உயர்மட்ட குழுவொன்றை அமைத்து கைதிகளின் பட்டியலை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழக அரசும் தமிழ்நாடு சட்டப்பணிகள் குழு சேர்மன் வினித் கோத்தாரி, உள்துறைச் செயலாளர் பிரபாகரன், சிறைத்துறை டி.ஜி.பி சினில்குமார் சிங் ஆகியோரை உள்ளடக்கிய உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்தது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

அதன்படி தற்போதுவரை தமிழகத்தில் விசாரணைக் கைதிகள் 4,547 பேர் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதில் நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர், அரசியல் கைதிகள் மற்றும் சில சிறுபான்மையினச் சிறைக்கைதிகளுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுத்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எழுவர் விடுதலைக்காக தமிழக அரசு தீர்மானம் இயற்றியும், சிறுபான்மையின கைதிகள் சிலரின் விடுதலைக்காக நீதிமன்ற உத்தரவு பெற்றும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு தமிழக அரசின் மீது தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. தற்போது பரோல் வழங்குவதில் அதே நிலை தொடர்வதாக தெரிவிக்கின்றனர்.

மீம்ஸ் க்ரியேட்டர்களுடன் போட்டிபோடும் காவல்துறை... ட்ரோன் வீடியோக்கள் தனிமனித உரிமையைப் பாதிக்கிறதா?

இதுபற்றி நம்மிடம் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுதின், "அண்ணா நூற்றாண்டின்போதும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டின் போதும் நீண்ட காலம் சிறையில் உள்ள கைதிகள் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர். அப்போதும் விடுதலை செய்யத் தகுதியான முஸ்லிம் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. இதை எதிர்த்து சிறைவாசிகள் பலர் உயர்நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி விடுதலைக்கான உத்தரவும் பெற்றனர். ஆனால், தமிழக அரசு அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அவர்களின் விடுதலையை நிறுத்திவைத்தது. தற்போது கொரோனா சமயத்தில் ஆயிரக்கணக்கான கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம் கைதிகளுக்கு பரோல் மறுக்கப்படுகிறது.

முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதின்
முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதின்

இவர்களில் பலரும் ஏற்கனவே பரோலில் நல்லமுறையில் திரும்பியுள்ளனர். ஆனாலும் இவர்களைப் பரோலில் வெளியிட அரசு மறுக்கிறது. இவர்களில் பலரும் வயது முதுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்ட பேரறிவாளன், நளினி உள்ளிட்டவர்களுக்குமே கூட பரோல் வழங்கப்படவில்லை. மேலும், முஸ்லிம் கைதிகளுக்கு நோன்பு காலங்களில் வழங்கப்படும் உணவுப் பொருள்களும் இந்த ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக முஸ்லிம் சிறைவாசிகளையும், பேரறிவாளன் உள்ளிட்டவர்களையும் பரோலில் வெளிவர அனுமதிக்க வேண்டும் எனவும் அதுவரை நோன்பு கால அதிகாலை உணவுக்கு அனுமதிக்க வேண்டும்” என்றார்.

இது தொடர்பாக வழக்கறிஞர் மனோகரன் நம்மிடம் பேசுகையில், "தமிழகத்தில் தற்போது வரை விசாரணைக் கைதிகள் மட்டுமே பிணை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர். எழுவர், முஸ்லிம் கைதிகள் மட்டுமல்லாது பல மாவோயிஸ்ட் சிறைவாசிகளும், தமிழ்த் தேசிய பின்னணி கொண்டவர்களும் நீண்ட நாள்களாக சிறைகளில் உள்ளனர். 60 வயதையும் தாண்டிவிட்ட கலா மற்றும் மகாலிங்கம் ஆகியோரும், 70 வயதைக் கடந்துவிட்ட வீரமணி என்பவரும் பல ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். பத்மா எனும் சிறைவாசி இதய நோய் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சிகிச்சை பெற்று வரும் பல கைதிகளும் சிறைகளில் இருக்கின்றனர். இவர்களில் சிலர் ஆயுத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை பரோல் நிராகரிக்க காரணமாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

வழக்கறிஞர் மனோகரன்
வழக்கறிஞர் மனோகரன்

ஆனால் ஆயுத வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு பரோல் போன்ற இடைக்கால நிவாரணங்கள் வழங்கக் கூடாது என எந்த விதியிலும் இல்லை. ஆயுத வழக்கில் தண்டிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுவிக்கப்படவில்லையா... சட்டங்கள் இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக பிரயோகிக்கப்படுகின்றன. நோய் சிகிச்சை என்கிற மருத்துவ தேவை மட்டுமல்லாது உளவியல் காரணங்களையும் பரோல் வழங்குகின்றபோது கவனத்தில் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் குடும்பத்துடன் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.

உயர்மட்டக் குழுவின் செயல்பாடுகள் தொடர்பாக தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் ராஜசேகரன் நம்மிடம் பேசுகையில், "தமிழகத்தில் தற்போது வரை சிறு குற்றங்களில் ஈடுபட்ட 4,547 விசாரணைக் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தண்டனைக் கைதிகள் யாருக்கும் புதிதாக பரோல் வழங்கப்படவில்லை. அதுபோக மாவட்ட நீதிபதிகள் தொடர்ந்து சிறைகளைக் கண்காணித்து வருகின்றனர். புதிய கைதிகளுக்கென 47 சிறப்பு சிறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே பரோலில் சென்ற 26 பேருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறைகளில் புதிதாக எந்த கைதியும் அடைக்கப்படவில்லை. தமிழக சிறைகளின் கொள்ளளவு 23,392 ஆக உள்ள நிலையில் தற்போது 12,450 கைதிகள் மட்டுமே உள்ளனர். இந்திய சராசரியைவிடவும் தமிழக சிறைகள் சிறப்பாகவே பராமரிக்கப்படுகின்றன”

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு

தண்டனைக் கைதிகளுக்குப் பரோல் வழங்கப்படவில்லை என்பது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ராஜசேகரன், "உச்சநீதிமன்றத்தின் உத்தரவிலுமே கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றே உள்ளது. விடுதலை அல்லது பரோல் வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக குறிப்பிடப்படவில்லை. மேலும் தற்போது சிறைகளின் கொள்ளளவு குறைவாகவே இருப்பதாலும், கைதிகளின் மருத்துவத் தேவைகளுக்குப் போதுமான வசதிகள் இருப்பதாலும் தண்டனைக் கைதிகளுக்கு பரோல் வழங்க வேண்டியது தொடர்பான பரிசீலனை எழவில்லை” என்றார்.

இது தொடர்பாக கருத்து பெற தமிழக உள்துறைச் செயலாளர் பிரபாகரனை தொடர்புகொண்டோம். முதலில் அழைப்பை எடுத்தவர் சிறிது நேரம் கழித்துப் பேசுவதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் பலமுறை முயன்ற பின்னும் அவருடைய இணைப்பை பெற முடியவில்லை. அவரின் தரப்பு பதில் கிடைத்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு