Published:Updated:

திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கு: `டி.என்.ஏ மாதிரி ஒத்துப்போகிறது’ - தமிழக அரசு மேல்முறையீடு

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு சார்பில் இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 2019-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் அவரது வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மூக்கு மற்றும் கழுத்தில் மின்வயர் மூலம் மின்சாரம் பாய்ச்சி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வடமதுரை காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தது. இந்தநிலையில், சிறுமியின் வீட்டுக்கு எதிர்வீட்டில் வசித்துவந்த கிருபாநந்தம் என்பவன் கைதுசெய்யப்பட்டான். அவனது வீட்டிலிருந்து ரத்தக்கரை படிந்த சட்டை கைப்பற்றப்பட்டது. சட்டையிலிருந்த ரத்தம், சிறுமின் ரத்தம்தான் என டி.என்.ஏ சோதனை மூலம் உறுதி செய்தது காவல்துறை.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலம் வந்த சிறுமியின் உறவினர்கள்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலம் வந்த சிறுமியின் உறவினர்கள்

இந்தநிலையில், வழக்கு விசாரணை, திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்துவந்தது. 35 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். டி.என்.ஏ பரிசோதனை ஆதாரம் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது காவல்துறை. கடந்த செப்டம்பர் 29-ம் தேதி வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி புருஷோத்தமன், `போதிய ஆதாரம் இல்லாததால், குற்றம்சாட்டப்பட்ட கிருபானந்தத்தை விடுதலை செய்கிறேன்’ எனத் தீர்ப்பளித்தார். இதைக் கேட்ட சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் நீதிமன்ற வளாகத்தில், தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, சிறுமியின் தந்தை முடி திருத்தும் தொழிலாளி என்பதால், இந்த விவகாரத்தை கையில் எடுத்த தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம், தமிழகம் முழுவதுமுள்ள சலூன் கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அன்றைய தினமே, ``சிறுமி வழக்கை அரசே மேல்முறையீடு செய்யும்” எனக் கூறினார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அதன்படி, இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

`கரன்ட் ஷாக் கொடுத்துக் கொன்றேன்' - திண்டுக்கல் அருகே எதிர்வீட்டுப் பையனால் உயிரிழந்த 12 வயது சிறுமி!
`கரன்ட் ஷாக் கொடுத்துக் கொன்றேன்' - திண்டுக்கல் அருகே எதிர்வீட்டுப் பையனால் உயிரிழந்த 12 வயது சிறுமி!

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ``கிருபானந்தன் ஆடைகளிலிருந்த ரத்த டி.என்.ஏ மாதிரியும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ரத்த மாதிரி டி.என்.ஏ-வும் சோதனை முடிவின் அடிப்படையில் ஒத்துப்போகின்றன. இதன் அடிப்படையில், கீழமை நீதிமன்றம் விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், கிருபானந்தம் வெளியே இருப்பதால், இந்த வழக்கின் விசாரணை பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, வழக்கு விசாரணை முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மனு மீதான விசாரணை நீதிபதிகள் கல்யாணசுந்தரம் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது குறித்து கிருபானந்தம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு