Published:Updated:

`13 ஆண்டுகளுக்குப் பிறகு கொலீஜியம் குழுவில் பெண் நீதிபதி!'- யார் இந்த `தமிழர்' பானுமதி?

நீதிபதி பானுமதி
நீதிபதி பானுமதி ( twitter )

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரூர் கீழ் நீதிமன்றங்களில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய சமயங்களில், வழக்குகளை ஆராய்ந்து பானுமதி தீர்ப்பு வழங்கிய விதம் நீதித்துறையின் கவனத்தைக் கவர்ந்தது.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும் கொலீஜியம் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் உச்சநீதிமன்ற நீதிபதியுமான ஆர்.பானுமதி இடம்பெற்றுள்ளார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு கொலீஜியம் குழுவில் இடம்பிடிக்கும் பெண் நீதிபதி பானுமதிதான். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் சமீபத்தில் பணி ஓய்வுபெற்றார். இதையடுத்து கொலீஜியம் குழுவின் உறுப்பினர் பதவி ஒன்று காலியானது. இந்த இடத்துக்கு தற்போது பானுமதி நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதி பானுமதி
நீதிபதி பானுமதி
vikatan

தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ரோகிண்டன் பாலி நாரிமன், ஆர்.பானுமதி ஆகிய ஐந்து பேர் கொண்ட கொலீஜியம் அமர்வே இனி உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.

`ஆர்.டி.ஐ.-க்குள் தலைமை நீதிபதி அலுவலகம்!’ 12 வருடம் போராடிச் சாதித்த `சபாஷ்’ அகர்வால்

யார் இந்த பானுமதி?

தர்மபுரி மாவட்டத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் பானுமதி. சட்டம் படித்து, 1981-ம் ஆண்டு வழக்கறிஞர் தொழிலில் அடியெடுத்து வைத்தவர். நீதிமன்றம் வரும் வழக்குகளில் பெண் வழக்கறிஞர்கள் கிரிமினல் வழக்குகளின் பக்கம் பெரிதும் ஆர்வம் காட்டுவது இல்லை. அதை மாற்றி, கிரிமினல் வழக்குகளையும் எடுத்து நடத்தி, தன்னுடைய முத்திரையைப் பதித்தவர் பானுமதி. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரூர் கீழ் நீதிமன்றங்களில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய சமயங்களில், வழக்குகளை ஆராய்ந்து பானுமதி தீர்ப்பு வழங்கிய விதம் நீதித்துறையின் கவனத்தைக் கவர்ந்தது.

நீதிபதி பானுமதி
நீதிபதி பானுமதி
twitter

இதையடுத்து 1988-ம் ஆண்டு, அதாவது வழக்கறிஞராகப் பதிவுசெய்த ஏழே ஆண்டுகளில் மாவட்ட நீதிபதி பதவி உயர்வைப் பெற்றார். கிருஷ்ணகிரி, சேலம், கோவை, வேலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி என தமிழகத்தின் அனைத்து திசைகளிலும், மாவட்ட நீதிபதியாக பானுமதி பணியாற்றினார். அந்த அனுபவம்தான் ஒவ்வொரு வட்டாரம் சார்ந்த மக்களின் பழக்கவழக்கம், பண்பாடு, அதில் எழும் சிக்கல்கள், அவை வழக்குகளாக மாறும் விதம் ஆகியவற்றை பானுமதிக்கு அடையாளம் காட்டியது. இந்தக் காலகட்டம்தான், அவர் வாழ்க்கையில் இன்று அடைந்திருக்கும் உயர்வுக்குக் காரணம்.

`தலைமை நீதிபதி கோகாய் முதல் நீதிபதி அப்துல் நசீர் வரை..!'- அயோத்தி வழக்கின் அரசியல்சாசன அமர்வு

புதுக்கோட்டை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பானுமதி பணியாற்றியபோதுதான், சாமியார் பிரேமானந்தாவுக்கு தண்டனை கொடுக்கப்பட்டதில் அதிகம் பேசப்பட்டார். 2003-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பானுமதி பதவி உயர்வு பெற்றார். ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், சேவல்கட்டு, கிடா சண்டை என அனைத்துக்கும் ஒட்டுமொத்தமாகத் தடைவிதித்து உத்தரவிட்டார்.

நீதிபதி பானுமதி
நீதிபதி பானுமதி
twitter

2009-ம் ஆண்டு உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸார் இடையே நடைபெற்ற மோதல் வழக்கு, நித்தியானந்தா, மதுரை ஆதினத்தின் இளைய வாரிசாக நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு, சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறைத் தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றி அறிவித்தது என பல்வேறு முக்கிய வழக்குகளில் திறம்பட தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி பானுமதி. சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து பதவி உயர்வுபெற்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சென்றார் பானுமதி. அங்கிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற உயர்ந்த பீடத்தை எட்டியவர் தற்போது கொலீஜியம் குழுவிலும் முத்திரை பதிக்கக் காத்திருக்கிறார்.

வாழ்த்துகள் மேடம்!

`இந்தத் தருணத்தில் உன் மகனும் இருக்க வேண்டும்!’-  பதவிப்பிரமாண நிகழ்வில் நெகிழ வைத்த நீதிபதி #Video
பின் செல்ல