Published:Updated:

"இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லையா?"- `தாண்டவ்' பிரச்னை உணர்த்தும் பாடம் என்ன?

தாண்டவ்

'தாண்டவ்' இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் மன்னிப்புக் கடிதம் அளித்திருக்கிறார். அதன் பின்னர், சர்ச்சைக் காட்சிகளென சொல்லப்பட்ட எல்லாமே நீக்கப்பட்டும் விட்டன. ஆனால்...

"இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லையா?"- `தாண்டவ்' பிரச்னை உணர்த்தும் பாடம் என்ன?

'தாண்டவ்' இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் மன்னிப்புக் கடிதம் அளித்திருக்கிறார். அதன் பின்னர், சர்ச்சைக் காட்சிகளென சொல்லப்பட்ட எல்லாமே நீக்கப்பட்டும் விட்டன. ஆனால்...

Published:Updated:
தாண்டவ்
அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியான 'தாண்டவ்' தொடர், மத ரீதியில் மக்களைப் புண்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டி பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் அமேசான் ப்ரைம் வீடியோவின் தலைவரான அபர்ணா புரோஹித், முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதற்கு முன்பாக அவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் தர மறுத்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபருக்கு முன் ஜாமீன் தரவோ, மறுக்கவோ ஒரு நீதிமன்றத்துக்கு முழு அதிகாரம் உண்டு. ஆனால், அதற்கு நீதிபதி சித்தார்த் தனது தீர்ப்பில் வெளியிட்டிருக்கும் கருத்துகள்தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

அமேசான் ப்ரைம் வீடியோவின் தலைவர் அபர்ணா புரோஹித்
அமேசான் ப்ரைம் வீடியோவின் தலைவர் அபர்ணா புரோஹித்

''நாட்டின் பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் பொறுப்பற்று நடந்து கொண்டிருக்கிறார் அபர்ணா. குற்றமும் பாரபட்சமும் இழைத்துவிட்டு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஆட்சேபணைக்குரிய ஒரு படத்தை ஒளிபரப்பிவிட்டு, 'இது கற்பனைக் கதை' என பொறுப்புத் துறப்பு அறிவிப்பு செய்தால், அது சரியாகிவிடுமா?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்திய சினிமாக்கள் (Ram Teri Ganga Maili, Satyam Shivam Sundram, P.K., Oh My God போன்றவை) கடவுள்களைக் கீழ்த்தரமாக விமர்சித்துவருவது தொடர்கதையாகி வருகிறது. 'தாண்டவ்' என்னும் பெயரே சிவனைத் தொடர்புபடுத்தி வைக்கப்பட்டதுதான். வரலாற்று புராண இதிகாசங்களையும் (பத்மாவத்), பெரும்பான்மையினரின் மதத்தை வைத்துப் பணம் பார்ப்பதும் (Goliyon Ki Rasleela Ram Leela) இங்கு இத்தகைய படைப்பாளிகளின் வாடிக்கையாகிவிட்டது.
குஜராத்தில் இருந்து வந்த முனாவர் ஃபாரூகி என்னும் ஸ்டாண்ட் அப் காமெடியன் சமீபத்தில் இப்படியாகத்தான் காமெடி என்கிற பெயரில் இந்துக் கடவுள்களை கேலி செய்தார். பெரும்பான்மை மதத்தின் நம்பிக்கைகளை கேலி செய்து அவர்களைப் புண்படுத்துவது ஒருபுறம் என்றால், ஆதிக்க சாதிகளுக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும் இடையேயான வெளியை இத்தகைய சினிமாக்கள் அதிகரிக்கின்றன. சினிமாக்கள் ஒற்றுமையைப் பறை சாற்ற வேண்டும்.

முனாவர் ஃபாரூகி
முனாவர் ஃபாரூகி

இதுமாதிரியான குற்ற செயல்களில் ஈடுபடும்போது, அதற்கு ஆதரவாக போராடும் மக்கள், 'இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை' என்பது போன்றதொரு மாயையை உருவாக்குகிறார்கள். 'இந்தியா வாழத் தகுதியற்ற தேசம்' என்பது போன்ற பிம்பத்தை உலகம் முழுக்க ஏற்படுத்துகிறார்கள். மேற்கத்திய உலகில் இருக்கும் சினிமா கலைஞர்கள் ஏசுவையோ, இஸ்லாமிய இறைதூதரையோ விமர்சிப்பதில்லை. இந்தியாவில்தான் இந்தி படைப்பாளிகள் தொடர்ந்து இந்துக் கடவுள்களை விமர்சித்து வருகிறார்கள். இவர்களைக் கைது செய்தால், அதையும் விளம்பரப்படுத்துகிறார்கள். சினிமாக்களில் நக்கலடித்து வந்தவர்கள், தற்போது காமெடி ஷோவரை நீண்டிருக்கிறார்கள். இந்தியாவின் பாரம்பர்யமிக்க சகிப்புத்தன்மையை இவர்கள் சுயலாபத்துக்காகப் பயன்படுத்திவருகிறார்கள்.
இவர்களை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால், இந்தியாவின் மத நல்லிணத்திற்கு தீங்கு விளைவித்துவிடுவார்கள். இந்தியாவின் சமூக, கலாசார முறைகள் தெரியாத இளைய தலைமுறை, சினிமாக்களைப் பார்த்து இதுதான் உண்மை என நினைத்துவிட வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறி, முன் ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளார்.

'தாண்டவ்' இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் மன்னிப்புக் கடிதம் அளித்திருக்கிறார். அதன் பின்னர், சர்ச்சைக் காட்சிகளென சொல்லப்பட்ட எல்லாமே நீக்கப்பட்டும் விட்டன. ஆனாலும், நீதிபதி தன் தீர்ப்பில், "மன்னிப்புக் கடிதம் தருவதாலோயோ, சர்ச்சைக்குரிய காட்சிகளை ஒளிபரப்புக்குப் பின்னர் நீக்கிவிடுவதாலேயோ தவறு இல்லையென்றாகிவிடாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உண்மையில், அயல்மொழி சினிமாக்கள் அளவுக்கு இந்திய படைப்பாளிகள் மத ரீதியிலான விமர்சனங்களை மேற்கொள்கிறார்களா என்றால் 'இல்லை' என்பதுதான் உண்மை. டான் பிரவுனின் எழுத்தில் உருவான 'தி டா வின்சி கோடு' திரைப்படம் உலகெங்கிலும் வெளியானாலும், தமிழகத்தில் மைனாரிட்டிகளின் மனம் பாதிக்கப்படும் என அப்போதைய முதல்வர் கருணாநிதி அந்தப் படத்துக்கு தடை விதித்திருந்தார். இந்திய சென்சார் போர்டில் ஒரு படம் தாண்டுவதென்பதே பெரும்பாடு. சென்சாரைத் தாண்டியும் பல சினிமாக்கள், அரசியல் கட்சிகளால் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

தி டா வின்சி கோடு திரைப்படம்
தி டா வின்சி கோடு திரைப்படம்

ஜீ5 ஓடிடியில் ஒளிபரப்பாகவே வேண்டிய ஒரு தொடர், டிரெய்லர் வெளியீட்டுடன் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் நடைபெறும் சென்சார் பிரச்னைகளால், தன் படத்தை இங்கு திரையிட விரும்பவில்லை என சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தார் மூத்த அமெரிக்க இயக்குநரான வுட்டி ஆலன். ஆங்கில திரைப்படங்களோ, ஸ்டாண்ட் அப் காமெடிகளோ மதம் சார்ந்து செய்யும் காமெடிகள் பலவும், நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவை. அங்கிருக்கும் மக்கள் அவற்றை வெறுமனே நகைச்சுவைத் துணுக்காக மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். 'ஏசுவையோ, இஸ்லாமிய தூதரையோ நக்கல் செய்ய முடியுமா' என்பதெல்லாம் வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளில் வைக்கப்படும் வாதங்கள். இது நீதிமன்ற அறையிலும் எதிரொலிப்பது கவலைக்குரியது. உண்மையில், முனாவர் போன்ற இஸ்லாமிய ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் தங்களின் மதம் சார்ந்து நக்கல் செய்தவைதான் அதிகம்.

அடுத்த குற்றச்சாட்டான ஆதிக்க சாதிகளுக்கு, தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குமான இடைவெளியை சினிமாக்கள் அதிகரிப்பதாகச் சொல்லப்படும் பிரச்னைக்கு வருவோம். இன்றளவிலும், ஆதிக்க சாதிகளின் பெயர் பின்னூட்டங்களுடன்தான் பெருவாரியான சினிமாக்கள் வருகின்றன. படங்களின் தலைப்புகளிலும், ஆதிக்க சாதிகளின் பெருமைகளைப் பேசிய, பேசும் படங்கள் அதிகம். அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை முன்வைக்கும் சினிமாக்களை வெளிவருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சினிமாக்களில் நடிக்கும் நாயகர்கள்கூட, தங்களின் இமேஜ் பாதிக்காமல் இருக்க, மீண்டும் ஆதிக்க சாதிய படங்களில் நடித்துள்ளனர் என்பதுதான் இங்கிருக்கும் வரலாறு.

'இத்தகைய சினிமாக்களால் உண்டாகாத இடைவெளியா, தற்போது இந்த நியூ ஜென் படைப்புகளால் உண்டாகிவிடும்' என்னும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.
குனால் கம்ரா, அர்னாப் கோஸ்வாமி
குனால் கம்ரா, அர்னாப் கோஸ்வாமி

உண்மையில் இந்தியாவில் நசுக்கப்படும் பலவற்றுள் முதன்மையானது கருத்துச் சுதந்திரம். கடந்தாண்டு இண்டிகோ ஏர்லைன்ஸில் காமெடியன் குனால் கம்ராவும், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியும் ஒன்றாகப் பயணம் செய்தனர். அப்போது, அர்னாபிடம் குனால் கம்ரா சீட்டை விட்டு எழுந்து சென்று பேச முயன்றதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இண்டிகோ நிறுவனம், 'குனால் கம்ரா ஆறு மாதங்களுக்கு இண்டிகோ விமானங்களில் பயணம் செய்ய முடியாது' என அறிவித்தது. விமானப் போக்குரவத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 'மற்ற நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வேண்டும்' என ட்வீட் செய்தார். அடுத்தடுத்து நான்கு நிறுவனங்கள் அவருக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்தனர். 'குனால் கம்ரா லெவல் 1 குற்றம்கூட புரியவில்லை' என பின்னர் விளக்கமளித்தார், அன்று விமானத்தை ஓட்டிய ரோஹித். ஆனாலும், எதுவும் மாறவில்லை.

"எந்தவித ஆதாரம் இல்லாமல்கூட இங்கு யாரையும் கைது செய்யலாம். இந்த சிஸ்டம் அப்படியாக மாறியிருக்கிறது. இங்கு இருப்பதாகச் சொல்லப்படும் சிவப்புக் கோட்டை நீங்கள் தாண்டினீர்களா, இல்லையா என்பதெல்லாம் இங்கு பிரச்னையில்லை. ஏனெனில் இங்கு புதிது புதிதாக கோடுகள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. உங்கள் எண்ணங்களுக்காகக்கூட நீங்கள் இனி கைது செய்யப்படலாம்!"
ஸ்டாண்ட் அப் காமெடியன் வருண் க்ரோவர்

நீதிபதி இந்தத் தீர்ப்பில் கூறிய முனாவர் ஃபாரூகின் வழக்கும் இப்படியானதுதான். யூடியூபில் ஐந்து லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பெற்றிருக்கும் முனாவருக்கு இந்த ஆண்டு வழக்கம் போல் இல்லை. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசவிருந்த முனாவர், மத அடிப்படைவாதிகள் சிலரால் தடுத்து நிறுத்தப்படுகிறார். 2020 ஏப்ரலில் அவர் பேசியதாக சொல்லப்படும் ஒரு ஜோக் சர்ச்சையாக்கப்படுகிறது. "நான் அந்த ஜோக்கை சொல்லவில்லை, வீடியோ பதிவும் தற்போது இல்லை" என்று சொன்னாலும், அந்த நிகழ்ச்சியிலிருந்து அடிப்படைவாதிகளால் அவர் வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து ஏற்கெனவே வழக்கு இருப்பதாக முனாவர் சொல்லியும், ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. அடுத்தடுத்து நிகழ்ந்தவை இன்னும் சோகம். இந்து ராக்சக் அமைப்பைச் சேர்ந்த அக்லாவ்யா லக்‌ஷந் சிங் கௌர் என்பவர்தான் முனாவரை அந்த இடத்திலிருந்து வெளியே தள்ளியது. இந்தூர் பா.ஜ.க மேயரின் மகன் அவர். அடுத்தடுத்து முனாவர் மீது வழக்குகள் பதியப்பட்டன. முனாவரின் கூட்டாளிகள் என நான்கு பேரைக் கைது செய்தது காவல்துறை. இந்த வழக்குக்கான முகாந்திரம் என்பது, அக்லாவ்யா வாய்வழியாகச் சொன்னது மட்டும்தான். எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனாலும், 37 நாள்கள் சிறையில் தள்ளப்பட்டார் முனாவர்.

அலி அப்பாஸ் ஜாஃபர்
அலி அப்பாஸ் ஜாஃபர்

'தாண்டவ்' இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் மீது ஆறு மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஓர் இடத்தில் அவர் தப்பித்தால், இன்னொரு மாநிலம் அவரைக் கைது செய்துவிடும். இந்தியா முழுக்க காமெடியன்களுக்கும், படைப்பாளிகளுக்கும் இதுதான் நிலைமை. 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' டைப் படைப்புகள்தான் இந்தியாவின் எதிர்காலமாக இருக்க வேண்டுமா என்பது ஆளும் அரசின் கைகளிலும், நீதித்துறையின் கைகளிலும்தான் இருக்கிறது. 'இதுதான் சூழல்' என அதை ஏற்றுக்கொண்டு நெருக்கடியில் வாழும் துர்பாக்கிய நிலைக்குப் படைப்பாளிகளை தேசம் தள்ளப்பட்டுள்ளது. சின்ன வழக்குகள் மூலம்கூட இங்கு ஒருவரின் வாழ்க்கையை சர்வ நாசமாக்க முடியும். தேச துரோக வழக்குகள் மூலம் ஒருவரை நிர்மூலமாக்கமுடியும். சிறுபான்மையினராக இருந்துவிட்டால் இன்னும் சுலபம்.

இப்படியானதொரு சூழலிலும், சமூக அவலங்களை கண்டிக்கும், அரசை, கடவுள்களைக் கேள்வி கேட்கும் படைப்புகள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன; இருக்கும்.
இந்தச் சூழலுக்குப் பொருத்தமான டாப்ஸியின் ட்விட் ஏனோ நினைவுக்கு வருகிறது.

டாப்ஸி
டாப்ஸி
"ஒரு ட்விட் உங்களின் ஒற்றுமையைக் குலைக்குமெனில், ஒரு ஜோக் உங்களின் நம்பிக்கையை சிதறடிக்குமெனில், ஒரு நிகழ்ச்சி உங்களின் மத நம்பிக்கைகளை சுக்குநூறாக்குமெனில், உங்கள் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமே அன்றி, மற்றவர்களுக்குப் பாடமெடுக்கக் கிளம்பாதீர்கள்."
டாப்ஸி