Published:Updated:

`தாக்கரே தலைமையிலான சிவசேனா சொத்துகளை, ஷிண்டே அணிக்கு மாற்ற உத்தரவிட முடியாது!' - சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்

`உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சொத்துகளை, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு மாற்ற வேண்டும்' என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.

Published:Updated:

`தாக்கரே தலைமையிலான சிவசேனா சொத்துகளை, ஷிண்டே அணிக்கு மாற்ற உத்தரவிட முடியாது!' - சுப்ரீம் கோர்ட்

`உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சொத்துகளை, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு மாற்ற வேண்டும்' என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.

சுப்ரீம் கோர்ட்

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியைத் தேர்தல் கமிஷன் உண்மையான சிவசேனாவாக அங்கீகரித்தது. அதோடு கட்சியின் பெயர், சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு வழங்கியது. யாருடைய அணி உண்மையான சிவசேனா என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலிருந்த நிலையில், தேர்தல் கமிஷன் அவசரமாக இந்த விவகாரத்தில் முடிவெடித்து, ஷிண்டே அணிக்கு கட்சியின் சின்னத்தையும், பெயரையும் ஒதுக்கி உத்தரவிட்டது. ஏக்நாத் ஷிண்டே அணியில் சிவசேனாவைச் சேர்ந்த அதிகப்படியான எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் இருக்கின்றனர். அதைக் காரணம்காட்டி ஏக்நாத் ஷிண்டே அணிக்கு கட்சியின் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் கமிஷன் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

உத்தவ் - ஷிண்டே
உத்தவ் - ஷிண்டே

இந்த நிலையில், `உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருக்கும் சொத்துகளை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு மாற்ற மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஆசிஷ் கிரி என்ற வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சந்திரசூட், நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனுத்தாக்கல் செய்த வழக்கறிஞரைப் பார்த்து, ``நீங்கள் யார்... இது எந்த மாதிரியான மனு... இதில் உங்களுக்கு என்ன பங்கு இருக்கிறது?" என்று கேட்டனர்.

உடனே வழக்கறிஞர் கிரி, ``ஏற்கெனவே உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணிகலுக்கிடையிலான பிரச்னைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. எனவேதான் இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறேன். எனவே, சிவசேனா (உத்தவ்)வின் சொத்துகளை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு மாற்ற மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி, நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்

ஏற்கெனவே ஏக்நாத் ஷிண்டே அணிக்குத் தாவிய 16 எம்.எல்.-க்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று கோரி உத்தவ் தாக்கரே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனுமீதான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் முடிந்துவிட்டது. எனவே, எந்நேரமும் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.