புதுச்சேரியில் பேனர்களை வைப்பதற்கு தடைச் சட்டமும், சென்னை உயர் நீதிமன்றத்தின் நிலை ஆணையும் அமலில் இருக்கிறது. ஆனால் அதையும் மீறி புதுச்சேரிக்கு வந்திருந்த அமைச்சர் அமித் ஷாவுக்காக நகர் முழுவதும் சுமார் 2,500 பேனர்களும், ராட்சத அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் பிரதான சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 100 அடி சாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு ராட்சத வளைவு சரிந்து விழுந்ததில் 70 வயது முதாட்டிக்கு தலையில் அடிபட்டு அவருக்கு 9 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன. ``தடைச் சட்டத்தை மீறி வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்றுங்கள்” என்று சுந்தர் என்பவர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் புகாரளிக்க சென்றார். ஆனால் திடீரென அங்கே நுழைந்த பா.ஜ.க-வினர் அவரைத் தாக்கினார்கள்.

சமூக வலைதளங்களில் வெளியான அந்த வீடியோ சமூக ஆர்வலர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. அதையடுத்து காலாப்பட்டு பா.ஜ.க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரத்தின் ஆதரவாளர்கள் தன்னைத் தாக்கியதாக பெரியகடை காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் சுந்தர். சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டம் அமலில் இருப்பதாக கறார் காட்டி நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட பேனரை இரவோடு இரவாக அகற்றிய நகராட்சி நிர்வாகம், இந்த விவகாரத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை. ``தடையை மீறி வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்றாதது ஏன்?” என்று கடந்த 23-ம் தேதி ஜூ.வி சார்பில் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ``இன்றும் நாளையும் விடுமுறை. அதனால் திங்கள்கிழமை அகற்றுவோம்” என்று பதிலளித்தார். ஆனால் 27-ம் தேதி வரை அந்த பேனர்கள் அகற்றப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSதடைச் சட்டத்தையும் மீறி வைக்கப்பட்டிருந்த பேனர்களில் இடம்பெற்றிருந்த குற்றப் பின்னணியுடையவர்களின் படங்களை பார்த்து முகம் சுழித்துச் சென்றனர் பொதுமக்கள். அதேபோல அவற்றை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் மீம்களாக பதிவிட்டு பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்தனர் நெட்டிசன்கள். இந்த நிலையில்தான், புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவரான ஜெகநாதன், ``24-ம் தேதி புதுச்சேரிக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்காக தடைகளை மீறி நகர் முழுவதும் பா.ஜ.க-வினர் பேனர்களை வைத்திருக்கின்றனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வைக்கப்பட்ட பேனர்கள் குறித்து நகராட்சியிடம் புகாரளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தலைமை நீதிபதிகள் முனீஷ்வர்நாத் பண்டாரி, பரத சர்க்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிகளை மீறி புதுச்சேரியில் பேனர் கலாசாரம் அதிகரித்து வருவதாகவும், அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றும் வாதிட்டார். அதேசமயம் நகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டு சட்டவிரோத பேனர்களுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத பேனர்கள் அனைத்தையும் உடனே அகற்றுவதற்கு உத்தரவிட்டதுடன், அதற்கான செலவை பேனர் வைத்தவர்களிடமே வசூலிக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.