Published:Updated:

`முட்டுக்காடு சொத்து...சிறப்பு நீதிமன்ற விசாரணை!’ - கார்த்தி சிதம்பரம் கோரிக்கை நிராகரிப்பு

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம் ( என்.ஜி.மணிகண்டன் )

இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிய மனுவும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கத் தடை கோரிய மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது.

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி மீதான வருமான வரித்துறையின் வழக்கை ரத்து செய்யவும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கத் தடை கோரியும் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும், முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான சொத்துகளை கடந்த 2015ம் ஆண்டு விற்பனை செய்துள்ளனர். இந்த விற்பனை மூலம் பெற்ற 7 கோடியே 73 லட்சத்தை வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்ததாக, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை 2018 -ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணை எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு 2019 -ம் ஆண்டில் மாற்றப்பட்டது. வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதற்கு எதிராக கார்த்தி மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த மனுவில், வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்யும்போது, தான் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை எனக் கார்த்தி குறிப்பிட்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிய மனுவும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கத் தடை கோரிய மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணையை நடத்திய நீதிபதி சுந்தர், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவியின் இரு மனுக்களையும் தள்ளுபடி செய்தார். எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கைத் தடை விதிக்கப்படாததால், இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்திலே நடக்கும் எனக் கூறப்படுகிறது.

 `சிக்கலில் சிதம்பரம்'- உருகிய கார்த்தி... டெல்லிக்கு உடனடி அழைப்பு!
அடுத்த கட்டுரைக்கு