ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள், தனியார் வணிக வளாகங்கள், கடைகள், தொழிற்சாலைகளில் தூய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு 1982-ல் அரசாணை பிறப்பித்திருக்கிறது.

இந்த அரசாணையை அமல்படுத்த தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இருப்பினும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற அரசாணை முறையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலாளர்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜெயசந்திரன், சுவாமிநாதன் அமர்வில் விசாரணைக்குவந்தது. அப்போது அரசு வழக்கறிஞர், ``அரசு அலுவலகங்களில் பெயர் பலகை அரசாணை அடிப்படையில் தமிழில் வைக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் அரசாணை அடிப்படையில் தமிழ், ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்படுவதில்லை. அரசாணையைப் பின்பற்றாத தனியார் நிறுவனங்கள்மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், "தமிழ் வளர்ச்சிக்கு அனைத்துத் துறையினரும் உண்மையாகவும், கடுமையாகவும் உழைக்க வேண்டும். சட்டக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பாடப்புத்தகங்கள் தமிழில் வழங்க வேண்டும். தற்போது திராவிட மாடல் என்கிறார்கள். அதில் மாடல் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் வார்த்தை என்ன? அதை ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்த வேண்டும். முழுமையாகத் தமிழில் பயன்படுத்தலாமே.
அரசாணை அடிப்படையில் தமிழ், ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகை வைக்கும் நிறுவனங்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை பிப். 16க்கு ஒத்திவைக்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "பேச்சு வழக்கில் மாடல் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. படிக்காதவர்கள்கூட பல ஆங்கில வார்த்தைகளைப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு சென்ட்ரலுக்குச் செல்கிறேன் என்று சொல்கிறார்கள். யாரும் பேருந்து வந்துவிட்டதா என்று கேட்பதில்லை. பஸ் வந்துருச்சா என்று கேட்பதைப் பார்க்க முடிகிறது.
ஆனால், எழுதும்போது பேருந்து என்று எழுதுகிறோம். எனவே, கம்யூனிகேஷன்தான் முக்கியமே தவிர மொழி முக்கியம் அல்ல. பதிவுசெய்யும்போது மாடல் என்பதற்குப் பதிலாக மாதிரி என்று பதிவுசெய்யலாம். எல்லோருக்குமான ஆட்சி முறையை குறிப்பதுதான் திராவிட மாடல் என்று தெரிவிக்கிறார்கள். நீதிமன்றம் சொன்னது நல்ல நோக்கம்தான். பேச்சுவழக்கில் இருப்பதை நாம் உடனடியாக மாற்ற முடியாது. காலப்போக்கில் சரியாகிவிடும்" என்றார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ``திராவிட மாடல் என்பதில் திராவிடம் என்பது தமிழ். மாடல் என்பது ஆங்கிலம். இருமொழிக் கொள்கை என்பதை உணர்த்தும் வகையில்தான் திராவிட மாடல் என இருக்கிறது. நீதிமன்றம் எதை கேட்க வேண்டுமோ அதைத் தவிர பிற அனைத்தையும் கேட்கிறது. குஜராத் மாடல் என்பதை அவர்கள் குஜராத்தியில்தானே சொல்லியிருக்க வேண்டும். அதையெல்லாம் கேள்வி கேட்கவில்லை. பெயர் பலகைகளைத் தமிழில் வைப்பதற்கான வழக்கில் திராவிட மாடல் குறித்த கேள்வி ஏன் வருகிறது?" என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "மாடல் என்பதைத் தமிழில் தெரிவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். தமிழுக்காக உயிரையே கொடுப்போம் என்கிறீர்கள். பிறகு ஏன் ஆங்கிலத்தில் இருக்கிறது. இந்த நேரம் முதல்வர் மாடலுக்கு என்ன என்று தமிழில் தெரிவித்திருக்க வேண்டாமா?" என்றார்.