கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு, ‘ஐடி ஹப்’-ஆக உருவெடுத்து, அசுர வளர்ச்சியைக் கண்டு இன்று நாட்டின், ‘சிலிக்கான் வேலி’ என்றும், ‘எலெக்ட்ரானிக் சிட்டி’ எனவும் அழைக்கப்படுகிறது. முன்பு பெங்களூரில், 850-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. நகரம் வளர வளரக் கட்டட ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, பல ஏரிகள் இருந்த இடமே தெரியாமல் மாயமாகி, இன்று அடுக்குமாடிக் குடியிருப்புகளாகக் காட்சியளிக்கின்றன. அரசும் சில ஏரிகளை மூடி, பஸ் ஸ்டாண்ட் மற்றும் அரசு அலுவலகங்களைக் கட்டியிருக்கின்றன.
பெங்களூர் எலெக்ட்ரானிக் சிட்டி, பொம்மசந்திரா, பெல்லந்துார் என நகரின் பல இடங்களில் ஏரிகளுக்கு அருகே, அதிக நச்சுத்தன்மையுள்ள கழிவுநீரை வெளியிடும் வகையிலான ‘சிவப்பு’ பிரிவு கம்பெனிகள் அதிகம் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழவுநீர் சுத்திகரிப்புச் செய்யப்படாமல், பெல்லந்துார், சந்தபுரா, வர்துார் உட்பட நகர் முழுதுமுள்ள ஏரிகளில் அப்படியே கலக்கப்படுவதால் நீர் கடுமையாக மாசடைந்துவருகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருக்கிறது.

ரூ.500 கோடி அபராதம்!
இந்த நிலையில், 2017-ல் சந்தபுரா ஏரி கடுமையாக மாசடைந்திருப்பதாக, தேசிய பசுமை தீர்ப்பாயைத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஏரியைச் சீரமைத்து, பாதுகாப்பதோடு ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கர்நாடக அரசுக்குக் காலக்கெடு விதித்து உத்தரவிட்டது. காலக்கெடு முடிந்தும், கர்நாடக அரசு ஏரியைக் காக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை மீறியதற்காகவும், காலக்கெடுவுக்குள் ஏரியைக் காக்கத் தவறியதற்காகவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் இரண்டு மாதங்களுக்கு முன்பு கர்நாடக அரசுக்கு 500 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. நாடு முழுவதிலும் இந்தத் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. தீர்ப்பை எதிர்த்து கடந்த வாரம் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது.

கடந்த, 3-ம் தேதி மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை பெஞ்ச் நீதிபதிகள், ‘‘ஏரிகளைப் பாதுகாப்பதில் கர்நாடக அரசு தோல்வியடைந்திருக்கிறது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் அமல்படுத்தாமல், மாநில அரசு பயமின்றி அலட்சியமாகச் செயல்படுகிறது. இதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அபராதத் தொகையை விரைவில் செலுத்த வேண்டும்’’ எனக் காட்டமாகத் தனது கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.
500 கோடி ரூபாய் அபராதம், கர்நாடக அரசின் மனு தள்ளுபடி என ஏரிகளின் பாதுகாப்பை வலியுறுத்த, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த இரண்டு நிலைப்பாட்டையும் சூழல் ஆர்வலர்கள் கொண்டாடிவருகின்றனர்.