Election bannerElection banner
Published:Updated:

டெல்லி: `மத்திய அரசு ஆராய வேண்டும்; போராட்டத்தால் பிரச்னைகள் தீராது!’ - உச்ச நீதிமன்றம் கருத்து

 உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

வழக்கு விசாரணை முடியும் வரை, விவசாயச் சட்டங்களை அமல்படுத்த, எந்த நிர்வாகரீதியான நடவடிக்கையும் எடுக்காது என்று மத்திய அரசு உறுதி அளிக்குமா?

தலைநகர் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது கடந்த 23 நாள்களாகப் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு எதிராகவும், போராட்டக்காரர்களை அகற்றக் கோரியும் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்கு குறித்த விசாரணையைத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ``இந்தப் போராட்டம் தேசிய அளவிலான பிரச்னையாக மாறக்கூடும். எனவே, இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் காண, தேசிய அளவிலான குழு அமைக்கலாம்’’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். மேலும், இந்தக் குழுவில், விவசாயச் சங்க பிரதிநிதிகள், அரசு மற்றும் பிற சங்கப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்றும் கூறினார்கள். விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கில், மத்திய அரசு மற்றும் டெல்லி, ஹரியானா மாநில அரசுகள் நாளைக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதோடு, இந்த வழக்கில் விவசாய அமைப்புகளையும் இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கினர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் , ``விவசாயிகள் போராடிவருவது அவர்களின் உரிமை. அதில் தலையிட முடியாது. அதேவேளையில், ஒரு போராட்டம் எந்த தனிநபர் வாழ்க்கையையும் பாதிக்கக் கூடாது. நாங்களும் இந்தியர்கள்தான். விவசாயிகளான உங்களின் துயரங்களை நாங்கள் நன்கு அறிவோம். உங்களின் நிலைக்காக நாங்கள் அனுதாபப்படுகிறோம். நீங்கள் உங்களின் போராட்டப் பாதையை மாற்றியமைக்க வேண்டும். இந்த வழக்கில் நீங்கள் வாதாட முடியும் என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். இந்தப் போராட்டத்தின் முறையை மாற்றி, மற்ற குடிமகன்களின் உரிமையைப் பாதுகாக்க எண்ணுகிறோம்" எனத் தெரிவித்தனர்.

வேளாண் சட்டங்களை நிறுத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு ஆராய வேண்டும். மேலும், வழக்கு விசாரணை முடியும்வரை, விவசாயச் சட்டங்களை அமல்படுத்த, எந்த நிர்வாகரீதியான நடவடிக்கையும் எடுக்காது என்று மத்திய அரசு உறுதி அளிக்குமா?
உச்ச நீதிமன்றம்
விவசாயச் சட்டங்களை நிறுத்திவைத்தால், விவசாயிகள் பேச்சு வார்த்தை நடத்த வர மாட்டார்கள்
அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் (அரசு வழக்கறிஞர்)

தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி பாப்டே, ``டெல்லி சாலைகளைத் தடுப்பதால், நகரத்திலுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வந்து சேர்வதில் சிக்கல் ஏற்படும். மக்கள் பசியால் வாடும் நிலை உருவாகக்கூடும். சாலைகளில் அமர்ந்து போராடுவது பிரச்னைகளைத் தீர்க்காது. பேச்சுவார்த்தை மூலமாகத்தான் உங்களின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும்” என்றதோடு, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்திருக்கிறார்கள்.

டெல்லி: தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்... குவியும் ஆதரவும் எதிர்ப்பும்!

இதற்கிடையே மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது விசாரணை நடத்தப்போவதில்லை. தற்போது, விவசாயிகளின் போராட்டம் குறித்து மட்டுமே விசாரணை நடத்தி முடிவெடுக்கப்படும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், இன்று டெல்லி சட்டமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்த டெல்லி அரசு, விவசாயிகளின் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்திருக்கிறது. அப்போது, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வேளாண் சட்ட மசோதாவைக் கிழித்தெறிந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு