Published:Updated:

`ஹெல்மெட்... லத்தி... ஆக்கிரமிப்பு பிரச்னை! - போலீஸுக்கு எதிராகக் கொந்தளித்த தேனி வழக்கறிஞர்கள்

மூன்று நாள்கள் நீதிமன்றப் புறக்கணிப்பை மேற்கொள்கிறார்கள் தேனி வழக்கறிஞர்கள். இதனால், நீதிமன்றப்பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி நீதிமன்றம்
தேனி நீதிமன்றம்

இரண்டு வழக்கறிஞர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு போலீஸார் உடனே தீர்வு காணும்வரை நீதிமன்ற புறக்கணிப்பை அறிவித்துள்ளது தேனி வழக்கறிஞர்கள் சங்கம். என்ன பிரச்னை? என்ன நடந்தது என விசாரித்தோம்.

Theni Court
Theni Court

தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் திவாகர். கடந்த 9-ம் தேதி இருசக்கர வாகனத்தில் தனது சகோதரர் ஒருவருடன் கோட்டூரிலிருந்து தேனி வந்துள்ளார். அப்போது, நேரு சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார், ஹெல்மெட் போடாத திவாகரனின் சகோதரரை நிறுத்தி, இருசக்கர வாகனத்தின் சாவியைப் பறித்து, 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

அயோத்தி வழக்கில் 40 நாள்களாக நின்றபடியே வாதாடிய தமிழக வழக்கறிஞர் பராசரன் யார்?

அபராதத் தொகையைக் கட்டிய பின்னர், சாவியைக் கேட்ட திவாகரனின் சகோதரரை, நீண்ட நேரம் காக்க வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது தலையிட்ட திவாகர், தான் வழக்கறிஞர் என்றும், தாத்தாவின் திதிக்காக சென்று கொண்டிருக்கிறோம். அபராதம் கட்டிய பின்னும் காக்க வைப்பது எந்தவிதத்தில் நியாயம் எனக் கேட்டதாகத் தெரிகிறது. ``வழக்கறிஞர் என்றால் நாங்கள் நம்ப வேண்டுமா? அடையாள அட்டையை எடு?” என்று போலீஸார் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. அடையாள அட்டையை எடுத்துக்காட்டி திவாகர், தன்னை ஒருமையில் பேசியதை ஆட்சேபனை செய்துள்ளார். இதனால், கோபமடைந்த போலீஸார், லத்தியால் திவாகரின் இடது கை மற்றும் தோளில் தாக்கியுள்ளனர்.

தேனி நீதிமன்றம்
தேனி நீதிமன்றம்

இது தொடர்பாக வழக்கறிஞர் திவாகரிடம் பேசியபோது, ``ஹெல்மெட் போடவில்லை. அது தவறுதான். அதற்காக அபராதம் கட்டினோம். சாவியை எடுக்க வேண்டும் என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. அதற்கும் அமைதியாக இருந்தோம். ஆனால், எங்களை ஒருமையில் பேசியதுதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தோற்றத்தை வைத்து ஒருவரை எடை போடுவது தவறு. அப்படித்தான் என்னைப் பார்த்ததும் வழக்கறிஞர் என அங்கிருந்த போலீஸார் நம்பவில்லை. அடையாள அட்டையைக் காட்டிய பின்னும் தொடர்ந்து ஒருமையில்தான் பேசினார்கள். சரி கிளம்பலாம் என்று கிளம்பியபோதுதான் லத்தியால் அடித்தனர். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகியிருக்கும். அதைப் பார்த்தாலே தெரிந்துவிடும்” என்பதோடு முடித்துக்கொண்டார்.

திவாகர் போலீஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒருபுறம் என்றால், தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா, தனது வீட்டின் அருகே உள்ள இடத்தை அருகில் இருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து தொடர்ந்து பிரச்னை செய்வதாக போடி, தாலுகா காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். புகாரை ஏற்க மறுத்த ஆய்வாளர் தர்மர், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களால் தொடர்ந்து பிரச்னைக்கு ஆளாகும் ராஜா மற்றும் அவரது குடும்பத்தார், இந்த விவகாரத்தால் தொடர்ந்து மன உலைச்சலுக்கும், மிரட்டலுக்கும் ஆளாவதாகக் கூறப்படுகிறது.

வழக்கறிஞர்கள் போராட்டம்
வழக்கறிஞர்கள் போராட்டம்

இது தொடர்பாக வழக்கறிஞர் ராஜாவிடம் பேசினோம். ``கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்தப் பிரச்னை இருக்கிறது. எனது வீட்டின் அருகே உள்ள 21 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட இடம் எனக்குச் சொந்தமானது. ஆனால், அருகில் உள்ளவர்கள், அந்த இடத்தை முறைகேடாக அவர்களுக்குச் சொந்தம் எனப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவ்வப்போது அந்த இடத்தில் தடுப்பு அமைப்பது, தகர செட் போடுவது என தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றனர். தடுக்கச் சென்றால் என் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதைப் புகாராக, போடி தாலுகா ஆய்வாளர் தர்மரிடம் எடுத்துச் சென்றால், `தகரம்தானே போடுகிறார்கள். கட்டடமா கட்டுகிறார்கள்?’ என அலட்சியமாகப் பேசுகிறார்” என்றார்.

`அதிகாரிகள் நேர்மையுடன் இருக்க வேண்டும்'- கீழடிக்காக வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் கனிமொழி மதி!

வழக்கறிஞர்கள் திவாகர் மற்றும் ராஜா ஆகியோரது விவகாரங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றிய தேனி வழக்கறிஞர்கள் சங்கம், நேற்று, இன்று, நாளை என மூன்று நாள்கள் நீதிமன்றப் புறக்கணிப்பை மேற்கொள்கிறார்கள்.

இதுதொடர்பாக தேனி வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் முத்துராமலிங்கத்திடம் பேசியபோது, ``வழக்கறிஞர் திவாகரைத் தாக்கிய காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கறிஞர் ராஜா கொடுத்த புகார் மீது உரிய விசாரணை செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து, மூன்று நாள்கள் நீதிமன்றப் புறக்கணிப்பை அறிவித்திருக்கிறோம். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், அடுத்தகட்ட முடிவை விரைவில் அறிவிப்போம்” என்றார்.

போலீஸ்
போலீஸ்

இதுதொடர்பாக தேனி மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வியிடம் பேசியபோது, ``தவறு செய்திருந்தால் நிச்சயம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முடித்துக்கொண்டார்.

தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றம் மட்டுமல்லாமல், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய தாலுகா நீதிமன்ற வழக்கறிஞர்களும் மூன்று நாள்கள் நீதிமன்றப் புறக்கணிப்பை மேற்கொள்கிறார்கள். இதனால், நீதிமன்றப்பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.