உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கரர் பரிபூரணம் அடைந்த ஷேத்திரம், கடந்த நவம்பர் மாதம் ரூ.250 கோடி செலவில் புனரமைக்கப்பட்டது. அதைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த வீடியோ காணொளி காட்சி வழியாகத் தமிழ்நாட்டில் உள்ள 16 கோயில்களில் ஒளிபரப்பப்பட்டது.

இதுதொடர்பாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், `பிரதமரின் உரை தமிழகத்தில் உள்ள 16 கோயில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்காக கோயில் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. மரபு மற்றும் மதம் சாராத நிகழ்வுகளுக்குக் கோயிலில் அனுமதியளிக்கக் கூடாது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது, மத்திய அரசின் உத்தரவின்படியே பிரதமர் நிகழ்ச்சி கோயில்களில் ஒளிபரப்பப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்தது. இது அரசியல் அல்ல, ஆன்மிக நிகழ்ச்சிதான் என்ற தமிழக அரசின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், ரங்கராஜன் நரசிமனின் மனு தள்ளுபடி செய்தனர்.
பிரதமரின் பேச்சு முழுவதும் ஆதிசங்கரர் பற்றித்தான் இருந்துள்ளது எனப் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.