Published:Updated:

`சசி தரூரைக் கைது செய்யுங்கள்!' - அவதூறு வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு

1989-ம் ஆண்டு வெளியான புத்தகத்தில் எம்.பி சசி தரூர், குறிப்பிட்ட சமூகத்துப் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக எழுதியுள்ளதாகக் கூறி திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் சந்தியா என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

எம்.பி சசி தரூர்
எம்.பி சசி தரூர்

இந்துப் பெண்களை தனது நாவலில் அவமதித்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி சசி தரூருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறது திருவனந்தபுரம் நீதிமன்றம்.

தி கிரேட் இந்தியன் நாவல்
தி கிரேட் இந்தியன் நாவல்

சசி தரூர் அவ்வப்போது பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். `தி கிரேட் இந்தியன் நாவல்’ என்கிற புத்தகத்தை மகாபாரதக் கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் மற்றும் விடுதலைக்குப் பின் 30 ஆண்டுகளை முன்வைக்கும் நையாண்டி கற்பனைப் படைப்பாக எழுதியிருந்தார். 1989-ம் ஆண்டு இந்தப் புத்தகம் வெளியானது. சசி தரூர், இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட சமூகத்துப் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக எழுதியிருப்பதாகக் கூறி திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சந்தியா என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

`தேர்தல் வெற்றி உங்களுக்கு இப்படியொரு தைரியத்தைக் கொடுத்துவிட்டதா?’ - கொதிக்கும் சசி தரூர்!

வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் நீதிமன்றம் சசி தரூரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்று தெரிகிறது. இந்த வழக்கு திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசி தரூர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் வழக்கறிஞர் என யாரும் ஆஜராகவில்லை. இதனால், வழக்கை விசாரித்து வந்த திருவனந்தபுரம் நீதிமன்றம் அவரைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.

Representational Image
Representational Image

இதுதொடர்பாக சசி தரூர் தரப்பிலோ, ``நீதிமன்றம் அனுப்பிய சம்மனில் தேதி குறிப்பிடப்படவில்லை. நேரம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விஷயத்தை எங்களது வழக்கறிஞர் நீதிமன்றத்தின் கவனதுக்குக் கொண்டு சென்றிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தேதி குறிப்பிட்டு புதிய சம்மன் அனுப்பும் என்று கூறியது. இன்று விசாரணை நடக்கும் என்கிற நிலையில் எங்களுக்கு புதிய சம்மன் எதுவும் அனுப்பப்படவில்லை. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மேல் நீதிமன்றத்துக்குச் செல்வோம்” என்று கூறியுள்ளனர். மேலும், `கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தை ஊடகங்களின் வழியாகவே அறிந்துகொண்டோம்’ என்றும் தெரிவித்துள்ளனர்.

இலக்கிய படைப்புகளுக்கு வழங்கப்படும் இந்தியாவின் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெறும் எழுத்தாளர்களில் சசி தரூரும் ஒருவர். `An Era of Darkness’ என்கிற ஆங்கில புத்தகத்துக்காக இந்த விருதை அவர் வென்றார்.