Published:Updated:

திருவண்ணாமலை ஸ்ரீசேஷாத்திரி ஆசிரமச் சொத்துக்கு ஆபத்து!

மகான் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம்
பிரீமியம் ஸ்டோரி
News
மகான் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம்

திட்டம்போட்டுச் சுருட்டினாரா சட்ட ஆலோசகர்?

ஆசிரமம் என்றாலே சர்ச்சைகள் வரிசைகட்டுகின்றன. அந்த வரிசையில் திருவண்ணாமலையில் உள்ள மகான் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமமும் சேர்ந்துள்ளது. `இந்த ஆசிரமச் சொத்துகளை, தனிநபரான முத்துக்குமாரசாமி அபகரித்துள்ளார்’ என்ற புகாரின் அடிப்படையில் அவர்மீது எஃப்.ஐ.ஆர் பதிந்தது காவல்துறை. தற்போது, சி.பி.சி.ஐ.டி விசாரணையில் வழக்கு உள்ளது. என்ன நடந்தது அங்கே?

ஆசிரமச் சொத்து அபகரிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் த.ம.பிரகாஷிடம் பேசினோம். ‘‘ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் இருக்கும் இடம் ஒரு சுடுகாடு. 1929-ம் ஆண்டு ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் முக்தியடைந்தபோது, அவரைப் பின்பற்றிவந்த சீடர்கள் அந்த இடத்தில் அவருக்கு ஒரு சமாதி எழுப்பி வழிபட்டுவந்தனர். அதன் பிறகு, அவருடைய பெயரிலேயே மடாலய கமிட்டி ஒன்றை அமைத்து, 1974-ம் ஆண்டு ஆசிரமமாகப் பதிவுசெய்து நடத்திவந்தனர். அப்போது சென்னையில் வழக்கறிஞராக இருந்த முத்துக்குமாரசாமி என்பவரை ஒரு வழக்கு சம்பந்தமாக சட்ட ஆலோசனை பெறுவதற்காக மடாலய கமிட்டியினர் சந்தித்தனர். மடாலய நிர்வாகிகளிடம் பழகிய முத்துக்குமாரசாமி, சட்ட ஆலோசகராகி, சில வேலைகளைச் செய்து கமிட்டியின் தலைவராகவும் ஆகிவிட்டார். கமிட்டி உறுப்பினர்கள் சிலர், வயது முதிர்ந்து இறந்துபோனார்கள். சிலரால் செயல்பட இயலவில்லை.

முத்துக்குமாரசாமி
முத்துக்குமாரசாமி

1981-ம் ஆண்டு புதிய உறுப்பினர்களைத் தேர்வுசெய்து, ஆசிரமத்தை நிர்வகிக்கச் சொன்னது மாவட்ட உரிமையியல் நீதிமன்றம். அந்தக் குழுவையும் முத்துக்குமாரசாமி செயல்படவிடவில்லை.

ஆசிரமம் முழுவதும் முத்துக்குமாரசாமியின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், ஆசிரமத்தின் பெயரில் வசூல்வேட்டை நடத்தினார். உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளிலிருந்தெல்லாம் லட்சக்கணக்கில் நிதி திரட்டி அவரே எடுத்துக்கொண்டார். ஆசிரமத்துக்குள் 50-க்கும் மேற்பட்ட அறைகளைக் கட்டி, வாடகைக்குவிட்டுச் சம்பாதித்துவருகிறார்.

அவருடைய மனைவி உமாதேவியை, ஸ்ரீசேஷாத்திரி சுவாமியின் சீடராக அமரச்செய்து உமாதேவி மூலம் ‘ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள்’ குறி சொல்வதாகச் சொல்லி, ஏராளமான பணம் சம்பாதித்தார். 2004-ம் ஆண்டில் உமாதேவி இறந்ததும், அவருடைய உடலை ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் முக்திபெற்ற இடத்துக்குப் பக்கத்திலேயே புதைத்து, ஆசிரமப் பணத்திலேயே சமாதிக் கோயிலும் கட்டிவிட்டார். பக்தர்கள், உமாதேவியை தற்போது கடவுளாக வணங்கிவருகின்றனர்.

உமாதேவி சமாதியும் கோயிலும்
உமாதேவி சமாதியும் கோயிலும்

பிறகு 2004-ம் ஆண்டு ஏப்ரலில், ‘ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் டிரஸ்ட்’ என்ற பெயரில் புதுச்சேரியில் அறக்கட்டளை தொடங்கி, அதன்மூலம் நன்கொடையாக வந்த பல கோடி ரூபாயையும் சுருட்டிவிட்டார். ஆசிரமத்துக்கு வந்த நன்கொடை பணம், தங்க நகைகள், நிலங்கள், பத்திரங்கள் என எதற்குமே கணக்குக் காட்டவில்லை. இப்படி 100 கோடி ரூபாய் மதிப்புடைய ஆசிரமச் சொத்துகளை தனிநபராக அபகரித்து, அவரின் மகள்களுக்கு உயில் எழுதிவைத்துவிட்டார். அதற்கான ஆதாரங்கள் முழுவதும் என்னிடம் உள்ளன’’ என்றவர், அந்த உயில் நகலையும் காட்டினார். அதில், தன் சொத்துகளில் மகள்களுக்கான பங்கைக் குறிப்பிட்டுள்ளதுடன், ‘மகான் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் லாக்கரில் உள்ள நகைகள், மற்ற நகைகள், தொகைகள் யாவும் எனக்குப் பிறகு என் மகள்கள் இருவரும் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்’ என எழுதியுள்ளார்.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் கேட்டதற்கு, ‘‘விசாரணை நடந்துவருகிறது. முத்துக்குமாரசாமியின் வங்கிக்கணக்கை தற்போது முடக்கியிருக்கிறோம்’’ என்று மட்டும் சொன்னார்கள்.

குற்றச்சாட்டுகள்குறித்து ஸ்ரீசேஷாத்திரி ஆசிரமத் தலைவர் முத்துக்குமாரசாமியிடம் கேட்டோம்.

திருவண்ணாமலை ஸ்ரீசேஷாத்திரி 
ஆசிரமச் சொத்துக்கு ஆபத்து!

‘‘மகான் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளுக்குத் தொண்டுசெய்யவே இங்கு வந்தேன். ஆசிரமம் இருக்கும் இடம், முதலில் சுடுகாடுதான். 1993-ம் ஆண்டு ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் பெயரிலேயே பட்டா வாங்கினோம். திருவண்ணாமலையைச் சுற்றியே எனக்கு 20 கோடி ரூபாய்க்குமேல் சொத்து இருக்கிறது. என் மனைவி உமாதேவியின் குடும்பம், பரம்பரையாகவே பணக்காரக் குடும்பம். அவர்களுக்கு சென்னை தண்டையார்பேட்டையில் 14 கிரவுண்டில் பெரிய வீடு இருக்கிறது. எங்களுக்கு பரம்பரைச் சொத்துகள் இருக்கும்போது, நான் ஏன் ஸ்ரீசேஷாத்திரி சுவாமி ஆசிரமச் சொத்துக்கு ஆசைப்படப்போகிறேன்?

மகான் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம்
மகான் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம்

நான் எழுதியுள்ள உயிலில் `மூன்றில் இரண்டு பங்கை என் இரண்டு மகள்களுக்கும், ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கும் கொடுத்து உதவவேண்டும்’ என்றுதான் எழுதியிருக்கிறேன். ஸ்ரீசேஷாத்திரி ஆசிரம வங்கி லாக்கரில், ஸ்ரீசேஷாத்திரி சுவாமிக்குரிய வெள்ளிக்கவசம், கிரீடங்கள் மட்டுமே இருக்கின்றன. பணம், தங்க நகைகள் எல்லாம் என்னுடையவை. கமிட்டி உறுப்பினர்கள் எல்லோருமே டாக்டர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பெரிய பதவிகளில் இருக்கின்றனர். அவர்களை மீறி, நான் எப்படி ஆசிரமச் சொத்துகளை என்னுடைய சொத்தாக மாற்றிக்கொள்ள முடியும்?

என் மனைவி உமாதேவி, ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் தீவிர பக்தை. ஸ்ரீசேஷாத்திரியே அவருக்குள் இருந்தார். அதனால்தான் அந்த அம்பாளை (உமாதேவியை) அரசு அனுமதியுடன் ஆசிரமத்துக்குள்ளேயே அடக்கம் செய்தோம். ஆசிரமத்தில் உள்ள அறைகளை, ஆசிரமப் பராமரிப்புச் செலவுகளுக்காக மிகக் குறைந்த தொகைக்கு வாடகைக்குவிடுகிறோம்’’ என்றார்.