Published:Updated:

`ஜும்மா மசூதி ஒன்றும் பாகிஸ்தான் இல்லை!' - டெல்லி போலீஸை விளாசிய நீதிபதி #CAA

ஜூம்மா மஸ்ஜித்
ஜூம்மா மஸ்ஜித் ( wikimedia )

ஜும்மா மசூதி போராட்ட வழக்கில் சந்திரசேகர் ஆசாத் ஜாமின் மனு மீதான விசாரணையின்போது நீதிபதி காமினி லாவோ டெல்லி காவல்துறையைக் கடுமையாகக் கண்டித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் போராட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணைய சேவை துண்டிக்கப்பட்டன. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்ததாகக் கூறி பல இடங்களில் காவல்துறை துப்பாக்கிச்சூடும் நடத்தியது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். மேற்கு வங்கம், தமிழகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் அமைதியான வழியில் நடைபெற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டுமே வன்முறை வெடித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சந்திரசேகர் ஆசாத்
சந்திரசேகர் ஆசாத்

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், பல்வேறு வடிவங்களில் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த டிசம்பர் 21-ம் தேதி பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத், டெல்லியில் உள்ள ஜும்மா மஸ்ஜித்துக்கு வருகை புரிந்தார். அப்போது நடைபெற்ற பிரார்த்தனையில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் பேசினார் ஆசாத். ஜும்மா மசூதி வெளியில் வருகையில் ஆசாத் கையில் இந்திய அரசியலமைப்புடன் வெளியில் வந்த காட்சி இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

``இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு கருத்துரிமை கிடையாதா'' - சட்டம் சொல்வது என்ன?

அவர் ஜாமீன் மனுவை டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் இன்று விசாரித்தது. நீதிபதி காமினி லாவோ, ஆசாத்தின் ஜாமின் மனுவை விசாரித்தார். ஜாமின் மனுவை எதிர்த்த அரசுத் தரப்பு வழக்கறிஞரைக் கடுமையாகக் கண்டித்தார் நீதிபதி. மேலும் அவர், `போராட்டத்தில், தர்ணாவில் ஈடுபடுவதில் என்ன தவறு இருக்கிறது. இது அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமை' என்றார்.

`சமூக ஊடகங்கள் மூலம் ஆசாத் வன்முறையைத் தூண்டினார்' என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். அதை முற்றிலுமாக மறுத்த நீதிபதி, `இந்தப் பதிவுகளில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் எதுவும் இல்லை. ஒருவர் போராடக் கூடாது என யார் சொன்னது. நீங்கள் அரசியலமைப்பைப் படித்திருக்கிறீர்களா?"

காமினி லாவோ - திஸ் ஹசாரி
காமினி லாவோ - திஸ் ஹசாரி

`ஜும்மா மசூதி ஏதோ பாகிஸ்தானில் உள்ளதைப்போல நடந்து கொள்கிறீர்கள். நாடாளுமன்றத்தின் முன்பே போராடிய பலரும் எதிர்காலத்தில் தலைவர்களாக, அமைச்சர்களாக உருவாகியிருக்கிறார்கள். மதத் தலங்கள் முன்பாக போராடக் கூடாது என எந்தச் சட்டம் சொல்கிறது. ஆசாத் வன்முறையைத் தூண்டினார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது" என டெல்லி காவல்துறைக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினார் நீதிபதி.

இறுதியில், "காலனி ஆட்சிக்காலத்தில் வீதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது நீதிமன்றத்திலும் நீங்கள் சட்டப்போராட்டம் நடத்தலாம். நாடாளுமன்றத்தில் சொல்லப்பட வேண்டியவை சொல்லப்படாததால்தான் மக்கள் வீதிக்கு வருகிறார்கள். ஒருவரின் எதிர்ப்பை வெளிப்படுத்த முழு உரிமை உள்ளது" எனத் தெரிவித்து வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

சிறையில் இருந்த சந்திரசேகர் ஆசாத்துக்கு முறையான மருத்துவ வசதிகள் வழங்கப்படாததைக் கண்டித்து, அவற்றை வழங்க உத்தரவிட்டவரும் இதே நீதிபதிதான்.

அடுத்த கட்டுரைக்கு