Published:Updated:

உ.பி: பா.ஜ.க முன்னாள் அமைச்சர் மீதான பாலியல் வழக்கைத் திரும்பப் பெற்ற மாணவி! - நீதிமன்றம் கண்டிப்பு

சின்மயானந்த்
சின்மயானந்த்

பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சின்மயானந்துக்கு எதிரான பாலியல் வழக்கைத் திரும்பப் பெறுவதாக சட்டக் கல்லூரி மாணவி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ அருகேயுள்ள ஷாஜஹான்பூரில் பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சின்மயானந்தின் அறக்கட்டளையின் கீழ் சட்டக் கல்லூரி ஒன்று செயல்பட்டுவருகிறது. அதில் படித்துவந்த 24 வயது கல்லூரி மாணவி ஒருவர், தனது கல்லூரி நிர்வாகத்தில் உயர் பொறுப்புகளில் செயல்பட்டுவரும் சிலர் தன்னைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவதாகக் கூறி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை, காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

சின்மயானந்த்
சின்மயானந்த்

அதில், சட்டக் கல்லூரி இயக்குநரும், பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருமான சின்மயானந்த் மீதும் அந்தப் பெண் குற்றம்சாட்டியிருந்தார். சின்மயானந்த், தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும், இதேபோலக் கல்லூரியில் படிக்கும் மற்ற சில பெண்களையும் மிரட்டி அவர் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இளம்பெண்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியதாக கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 20-ம் தேதி சின்மயானந்தை லக்னோ போலீஸார் கைதுசெய்தனர்.

இந்த வழக்கில், ஜாமீன்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினார் சின்மயானந்த். அந்தப் பெண், தன்னிடமிருந்து பணம் பறிப்பதற்காகவே தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாக சின்மயானந்த் தரப்பில் கூறப்பட்டது. விசாரணக்குப் பின்னர் சின்மயானந்துக்கு கடந்த பிப்ரவரி 3-ம் தேதி ஜாமீன் வழங்கி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

` மூக்குக்கண்ணாடியில் ரகசிய கேமரா; அதிகாலை அழைப்பு!' - சின்மயானந்த் விவகாரத்தில் குமுறிய மாணவி

இந்தநிலையில், வழக்கு விசாரணைக்காக லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் அந்த இளம்பெண் நேற்று ஆஜரானார். சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.கே.ராய் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிலர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே சின்மயானந்த் மீது தாம் குற்றம்சாட்டியதாகவும், அதைத் தற்போது திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் இளம்பெண் தரப்பில் கூறப்பட்டது. மேலும், வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் எனவும் இளம்பெண் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

 சின்மயானந்த்
சின்மயானந்த்

அப்போது, நீதிமன்றத்தில் பொய் வழக்கு தொடர்ந்ததற்காகவும், பொய்யான கருத்துகளை எடுத்துரைத்ததற்காகவும் அந்தப் பெண்ணின் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 340-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். உத்தரப்பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை, புகார் கூறிய இளம்பெண் திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு