Published:Updated:

`அரசின் முடிவுக்கு எதிர்ப்பு!' - மல்லையாவின் வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்

லட்சுமணன்.ஜி

``கிங் ஃபி‌ஷர் நிறுவன சொத்துகளைத் தவிர்த்து வேறு எந்த சொத்துகளையும் பறிமுதல் செய்யக் கூடாது" உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த மல்லையா.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

வங்கிக் கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கி, இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளவர் தொழிலதிபர் மல்லையா. இவர் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அதை திரும்பச் செலுத்தவில்லை. இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ம் தேதி லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

மல்லையா
மல்லையா

விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக மத்திய அரசு கூறிவருகிறது. `நிதி மோசடிகள் புரிந்துவிட்டு‌ வெளிநாடு ‌த‌ப்பிச் செல்லும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வை‌க்கும் வகையில், பொருளாதார குற்றவாளிகள் தப்பிப்பு தடுப்புச் சட்டத்தை மத்தி‌ய அரசு க‌டந்தாண்டு கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின்‌ கீழ் குற்றவாளி என அறிவிக்க‌ப்பட்ட ‌தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மீது நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்' எனவும் தெரிவித்துள்ளது. அவரை நாடு கடத்தக்கோரும் வழக்கும் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விஜய் மல்லையாவின் சொத்துகள் மற்றும் உறவினர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்குத் தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மல்லையா மனுத் தாக்கல் செய்தார்.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா

`நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் கிங் ஃபி‌ஷர் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை தவிர்த்து வேறு எந்த சொத்துகளையும் பறிமுதல் செய்யக் கூடாது. இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' என்றும் தனது மனுவில் விஜய் மல்லையா தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க வேண்டும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று முறையிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Vikatan

மல்லையா சார்பில் வழக்கறிஞர் எப்.எஸ்.நரிமன்,``இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் பழைய வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று ஆகஸ்ட் 2-ம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.