விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ-வாக இருந்தவர் எம்.சண்முக உடையார். அவருடைய மகன் எஸ்.சிவானந்தம். விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் இவர்களுக்குச் சொந்தமான 6.75 ஏக்கர் நிலம் 1991-ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத் துறையின் சார்பில் கையகப்படுத்தப்பட்டது. அந்த இடத்துக்காகக் குறைந்தபட்ச விலையை மட்டுமே சிவானந்தத்திடம் கொடுத்திருக்கிறது வீட்டு வசதி வாரியம்.

அந்தத் தொகை மிகவும் குறைவு என்பதால் விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் சிவானந்தம் வழக்கு தொடர்ந்திருக்கிறார். பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், 2018-ம் ஆண்டு வழக்கை விசாரித்த விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தின் நீதிபதி மோனிகா, `சிவானந்தம் என்பவருக்குச் சொந்தமான இடத்துக்கான தொகை 39,36,59,337 ரூபாயை சிவானந்தத்திடம் வழங்கக் கோரி உத்தரவிட்டிருந்தார். அந்தத் தொகையை பெறுவதற்காக இவர் தொடர்ந்து வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகளை அணுகி வந்திருக்கிறார். இருப்பினும் தனக்கு வழங்க வேண்டிய தொகையைத் தராமல் அரசு அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்ததால், 'உரிய தொகையை பெற்றுத் தரும்படி' விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் 2020-ம் ஆண்டு மேல்முறையீடு செய்துள்ளார் சிவானந்தம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன்,
'சிவானந்தத்துக்கு உரிய தொகையை வழங்க வேண்டும். அப்படி இல்லையெனில், ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கார்கள் உட்பட அனைத்து அசையா சொத்துகளையும், விழுப்புரம் வீட்டு வசதி வாரிய பிரிவின் நிர்வாக அதிகாரி மற்றும் செயற்பொறியாளர் அலுவலகத்திலுள்ள அனைத்து அசையும் சொத்துகளையும் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என கடந்த 24.03.2021 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில் தேர்தல் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் (06.04.2021) சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதோடு சேர்த்து, வீட்டு வசதி வாரியம் தொகையைத் திருப்பித் தருவதற்கான காலக்கெடுவும் அண்மையில் முடிவடைந்துள்ளது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் (07.04.2021) காலை ஜப்தி செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு ஆணையின் நகல் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார் சிவானந்தம். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அந்தச் சமயம் அங்கு இல்லாத காரணத்தால்ல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகனிடம் நீதிமன்ற உத்தரவு ஆணையை அளித்தனர். `அந்த இடத்துக்கான முழுத் தொகையை கொடுத்து வடுகிறோம். இதற்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்' என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதை எழுத்து மூலமாக அளிக்கும்படி கேட்டுக்கொண்ட நீதிமன்ற ஊழியர்கள், இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை 02.06.2021 அன்று நடைபெறவிருப்பதால், உரிய தொகையை அந்தத் தேதிக்குள் தரும்படி அவகாசம் வழங்கிச் சென்றிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.