புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாசிக் (PASIC - Pondicherry Agro Service and Industries Corporation Limited) தரமான விதைகளையும், மானிய விலையில் உரங்களையும் விவசாயிகளுக்கு அளித்துவந்தது. இந்த நிறுவனம் 2007-ம் ஆண்டு வரை லாபத்தில் இயங்கிவந்தது. அதன் பிறகு அரசின் அனைத்துச் சார்பு நிலையங்களுக்கும் சேர்மன்கள் நியமிக்கப்பட்டனர். அரசியல் பின்புலத்துடன் பதவியில் அமர்ந்த சேர்மன்கள், எந்தவித கட்டுப்பாடும், தயக்கமுமின்றி தேவைக்கு அதிகமான ஆட்களைக் கொள்ளைப்புறமாக பணியமர்த்தினார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 100 பேர் இருந்தாலே போதும் என்ற இடத்தில் 300 பேர் நியமிக்கப்பட்டனர். அதனால் லாபத்தில் இயங்கிவந்த அரசு சார்பு நிறுவனங்கள் அனைத்தும் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தன. அதில் ஒன்றுதான் பாசிக் நிறுவனம்.

நஷ்டத்துக்குத் தள்ளப்பட்ட பாசிக் நிறுவனத்தால் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியவில்லை. 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரங்கசாமி பாசிக் நிறுவனத்தைக் காப்பாற்ற மதுபானங்கள் விற்கும் உரிமையைக் கொடுத்தார். விவசாயத்துக்கும் விவசாயிகளுக்காகவும் தொடங்கப்பட்ட நிறுவனம் மதுபானங்களை விற்கத் தொடங்கியது. ஆனால் அதிலும் ஒருசில ஊழியர்கள் தங்கள் கைவரிசையைக் காட்ட, மதுபான வியாபாரம் எடுபடவில்லை. அதற்கடுத்து காய்கறி விற்பனைக்குச் சென்று அங்கேயும் ஷட்டரைப் போட்டது. இப்படியான காரணங்களால் பாசிக் ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்தது. அதனால் அந்நிறுவனத்தில் வேலை செய்த 48 ஊழியர்கள் கடந்த 2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதனடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்று ஜூலை 14, 2020-ம் ஆண்டு தீர்ப்பளித்தது சென்னை உயர் நீதிமன்றம். அதன் பிறகு பாசிக் நிறுவனத்தால் நிலுவையிலிருந்த சம்பளத்தை வழங்க முடியவில்லை.
இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த 48 பேரில் எட்டுப் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அந்த எட்டுப் பேரும் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காத புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வனி குமார், துறையின் செயலர் ரவிபிரகாஷ், வேளாண் இயக்குநர் பாலகாந்தி மற்றும் பாசிக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சிவசண்முகம் ஆகியோர்மீது 2021, நவம்பர் 9-ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு நவம்பர் மாதம் 12-ம் தேதி நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், துறைச் செயலர் ரவிபிரகாஷ், வேளாண் இயக்குநர் பாலகாந்தி , பாசிக் மேலாண் இயக்குநர் சிவசண்முகம் ஆகியோர் டிசம்பர் 10-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று, 10-ம் தேதி நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது வேளாண் இயக்கநர் பாலகாந்தி, பாசிக் மேலாண் இயக்குநர் சிவசண்முகம் ஆகியோர் மட்டுமே நேரில் ஆஜராகியிருந்தனர். தலைமைச் செயலர் அஸ்வனி குமாரும், துறைச் செயலர் ரவிபிரகாஷும் ஆஜராகவில்லை. அதனால் நேரில் ஆஜராகாத தலைமைச் செயலர் அஸ்வனி குமார், துறைச் செயலர் ரவிபிரகாஷ் ஆகியோர் நேரில் ஆஜராக வாரன்ட் பிறப்பித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.