Published:Updated:

`உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்!'- அயோத்தி வழக்கு குறித்து அன்வர் ராஜா

``இது நம்பிக்கை சார்ந்த விசயமாக இருப்பதால் தீர்ப்பின் உள்ளே சென்று சரியா தவறா என ஆராயாமல் நீண்ட நாள்களுக்குப் பின் வந்த இந்தத் தீர்ப்பை அனைவரும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்."

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு. ( விகடன் )

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடப்பதால் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அ.தி.மு.க-வின் சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்.பி-யுமான அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.

அயோத்தி தீர்ப்பு
அயோத்தி தீர்ப்பு
விகடன்

சுமார் 70 ஆண்டுக்காலம் நடந்து வந்த அயோத்தி தொடர்பான வழக்கினை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தொடர்ச்சியாக 40 நாள்கள் நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 17-ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பினை ஒத்திவைத்தது.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் என நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அயோத்தி உள்ளிட்ட பிரச்னைக்குரிய முக்கிய நகரங்களில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டது.

அயோத்தி தீர்ப்பு குறித்து அன்வர்ராஜா கருத்து.
அயோத்தி தீர்ப்பு குறித்து அன்வர்ராஜா கருத்து.
உ.பாண்டி

இதை தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பினை வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்த இந்தத் தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் அரசுக்குச் சொந்தம் எனவும் அந்த இடத்தில் ராமர் கோயிலை கட்ட மத்திய அரசு தனி அமைப்பினை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறினார். மேலும், முஸ்லிம் அமைப்பினர் ஏற்றுக்கொள்ளக் கூடிய இடத்தில் அவர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தினை வழங்க மத்திய மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுக்கும் உத்தரவு பிறபிக்கப்பட்டது.

இந்நிலையில் இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அ.தி.மு.க-வின் சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்.பி-யுமான அன்வர்ராஜா, ``தீர்ப்பை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. சட்டத்தின் ஆட்சிதான் இந்தியாவில் நிலைக்க முடியும். ஜனநாயகம் என்பதே சட்டத்தின் ஆட்சிதான். இது நம்பிக்கை சார்ந்த விசயமாக இருப்பதால் தீர்ப்பின் உள்ளே சென்று சரியா தவறா என ஆராயாமல் நீண்ட நாள்களுக்குப் பின் வந்த இந்தத் தீர்ப்பை அனைவரும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடும். முஸ்லிம்கள் தனிநபர் சட்டவாரியம் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய இருப்பதாகச் சொல்வது அவர்கள் விருப்பம். அதில் நான் கருத்து சொல்ல முடியாது'' என்றார்.

அயோத்தி தீர்ப்பு குறித்து நவாஸ்கனி கருத்து
அயோத்தி தீர்ப்பு குறித்து நவாஸ்கனி கருத்து
உ.பாண்டி

இந்தத் தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ''உச்சநீதிமன்ற தீர்ப்பு இறுதியானது. அந்தத் தீர்ப்பை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த அரசுக்கு எல்லா ஒத்துழைப்பையும் இஸ்லாமியர்கள் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும் என்பதே எங்கள் நிலை'' என்றார்.