Published:Updated:

பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதிக்கிறதா மத்திய அரசு?

பேரறிவாளன்

‘பேரறிவாளன் விடுதலை பற்றி மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால், அவரை நாங்களே விடுதலை செய்வோம்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதிக்கிறதா மத்திய அரசு?

‘பேரறிவாளன் விடுதலை பற்றி மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால், அவரை நாங்களே விடுதலை செய்வோம்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Published:Updated:
பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் சிறைத் தண்டனை அனுபவித்துவருகின்றனர். கடந்த 32 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பேரறிவாளன் மனு மீது மே 4-ம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.என்.நட்ராஜ் ஆஜரானார். ‘ஒரு வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம்... அந்த வழக்கை ஏன் முடித்துவைக்கக் கூடாது?’ என்று சொலிசிட்டர் ஜெனரலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும், ‘இந்த விவகாரத்தில் அனைத்துத் தீர்ப்புகளையும் ஆராய்ந்து பார்க்கும்போது, அமைச்சரவை முடிவெடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்கவேண்டிய அவசியமே இல்லை. இது நீதிமன்றம் முடிவெடுக்கவேண்டிய விவகாரம். ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டவர்’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மே 4 நடைபெற்ற விசாரணையின்போதும், கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போதும், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறை குறித்து சரமாரியான கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். ``இது, 2014-ம் ஆண்டிலிருந்தே ஊசலாட்டம் நிறைந்த ஒரு விவகாரமாக மாறிவிட்டது. ஏழு பேரில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைத்து 2014-ல் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தது. தீர்ப்பு வந்த நான்கு நாள்களில் மத்திய அரசுக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதினார். அதில், `பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யப்போகிறேன்’ என்று கூறிய ஜெயலலிதா, `உங்கள் பதிலை மூன்று நாள்களில் சொல்லுங்கள்’ என்று கூறியிருந்தார். அப்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. உடனே காங்கிரஸ் அரசு நீதிமன்றத்துக்குப் போனது. அப்போதிலிருந்து, இது சி.பி.ஐ விசாரித்த வழக்கு என்ற காரணத்தைச் சொல்லி, இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டுவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகு, தன்னை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ‘பன்னோக்கு விசாரணைக்குழுவின் விசாரணை முடியும் வரை என்னை வெளியே விட வேண்டும்’ என்று அவர் கோரிக்கை வைத்தார். அதையடுத்து, பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதெல்லாம் பேரறிவாளன் விவகாரத்தில் நடந்தவை.

ப்ரியன்
ப்ரியன்

இந்த விவகாரம் 2018-ல் புதிய வடிவம் பெற்றது. விடுதலை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது. அதையடுத்து, பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்த தீர்மானம்தான், ஆளுநரிடமிருந்து குடியரசுத் தலைவருக்கும், குடியரசுத் தலைவரிடமிருந்து ஆளுநருக்கும் பந்தாடப்படுகிறது.

இந்த வழக்கில், ஒரு தரப்பாக ஆளுநர் இல்லையென்றாலும், ஆளுநரை உச்ச நீதிமன்றம் மிகவும் கடுமையாகக் கேட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பவேண்டிய காரணமென்ன என்று கேட்டிருக்கிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசால் விசாரிக்கப்பட்ட வழக்குகள் அனைத்திலும் கருணை மனுவைப் பரிசீலிக்க மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும் என்று ஒரு விஷயம் இருந்தது.

ஆனால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைவிட அரசியல் சட்டம் பெரியது என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறிவிட்டது. எனவே, பிரிவு 161-ன்படி பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது. ஆனால், தேவையில்லாமல் கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சரியில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஒரு குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

ராஜீவ் காந்தி படுகொலை ஒரு பயங்கரவாதச் செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இலலை. அதேநேரத்தில், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்தால், பயங்கரவாதத்துக்கு எதிரானவர்கள் என்கிற பா.ஜ.க-வின் இமேஜ் பாதிக்கப்படும். எனவே, விடுதலை செய்வது என்கிற முடிவை எடுப்பதற்குத் தயங்கும் மத்திய அரசு, நீதிமன்றமே விடுதலை செய்துவிட்டால் நல்லது என்று நினைக்கிறது. எனவே, இந்த விவகாரத்தை இழுத்துக்கொண்டே போகிறார்கள். இப்போது, அதன் கடைசி கட்டத்துக்கு இப்பிரச்னை வந்திருக்கிறது.

தற்போது, ‘ஆளுநர் கடமையைச் செய்யத் தவறிவிட்டார். குடியரசுத் தலைவர் எடுக்கும் எந்த முடிவும் உச்ச நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தாது’ என்று கூறியிருக்கும் நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் நாங்களே ஒரு முடிவை எடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

பேரறிவாளனை நீதிமன்றம் விடுதலை செய்தால், நீதிமன்றம் சொன்னதால் விடுதலை செய்கிறோம் என்று சொல்லி மத்திய அரசு தப்பித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில், பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துவிடுமா என்ற கேள்விக்கு உறுதியான பதிலை இப்போது சொல்லிவிட முடியாது.

நீதிபதிகள் பல கருத்துகளைப் பேசுவார்கள். ஆனால், உத்தரவைப் பிறப்பிக்கும்போது மத்திய அரசின் நிலைப்பாட்டையும் கொஞ்சம் யோசிப்பார்கள். அல்லது, அதிக நீதிபதிகள்கொண்ட அமர்வை அமைக்க வேண்டும் என்றுகூடச் சொல்வார்கள்.

ராம்நாத் கோவிந்த்
ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கட்டும். ஆனால், அதற்குள் போகாமல் பேரறிவாளனை விடுதலை செய்வதில் உச்ச நீதிமன்றம் உறுதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால், உச்ச நீதிமன்றம் இதுவரை சொன்ன கருத்துகள் அனைத்தும் ஒரு பரபரப்புக்காகச் சொல்லப்பட்டதாகவே கருதப்படும்” என்றார் ப்ரியன்.

இந்த வழக்கு, வரும் 10-ம் தேதி, அதாவது நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போதும், உச்ச நீதிமன்றத்தின் பொறுமையை மத்திய அரசு சோதிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism