குளித்துவிட்டு வீட்டுக்குள் சிலர் துண்டைக் கட்டிக்கொண்டு உலவுவது வழக்கம். அது சில நேரங்களில் சிக்கலில் முடிந்துவிடுகிறது. மும்பை டோங்கிரி பகுதியைச் சேர்ந்த 50 வயது நபர் தனது வீட்டில் குளித்துவிட்டு துண்டைக் கட்டிக்கொண்டிருந்ததைக் காரணம் காட்டி, போலீஸில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. 50 வயது நபர் தனது வீட்டுக் கதவை திறந்துவைத்திருந்தார். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமி வீட்டுக்குள் வந்தார். 50 வயது நபர் வீட்டில் குளிக்கத் தயாராகிக்கொண்டிருந்தார். பாத்ரூமுக்குச் சென்று குளித்துவிட்டு, துண்டைக் கட்டிக்கொண்டு பாத்ரூமைவிட்டு வெளியில் வந்தார்.

அவர் துண்டைக் கட்டிக்கொண்டு சிறுமி முன்பு நின்றதைப் பார்த்த சிறுமியின் தாயார், தன் மகளிடம் பாலியல்ரீதியாக நடந்துகொண்டதாகக் கூறி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் உடனே போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து 50 வயது நபரைக் கைதுசெய்தனர். இது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குழந்தையின் தாய் ஆஜராகி, ``அந்த நபரின் வீட்டுக் கதவு திறந்திருந்தது. அப்போது துண்டைக் கட்டிக்கொண்டு நின்ற அவர், தனது துண்டை விலக்கி, தன் அந்தரங்க உறுப்பை குழந்தைக்குக் காட்டினார். அதோடு குழந்தையின் கழுத்தில் குற்றவாளியின் கை இருந்தது" என்று வாக்குமூலம் அளித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தி குமார், ``குற்றம்சாட்டப்பட்டவர் குளித்துவிட்டு துண்டு கட்டிக்கொண்டு பாத்ரூமைவிட்டு வெளியில் வந்திருக்கிறார். இதில் குற்றவாளிக்கு எந்தவித பாலியல் உள்நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை.
அவரது சொந்த வீட்டுக்குள்தான் துண்டைக் கட்டிக்கொண்டு நின்றிருக்கிறார். குழந்தையிடம் விசாரிக்கப்பட்டதில் குற்றவாளி அந்தரங்க உறுப்பைக் காட்டியதற்கான அறிகுறிகள் இல்லை. குழந்தையின் தாய் சொன்னபடி, மூன்று செயல்களையும் ஒரே நேரத்தில் குற்றவாளியால் செய்திருக்க முடியாது.
குற்றத்தை நிரூபிக்க வேறு எந்தச் சாட்சியமும் இல்லை. குழந்தை குற்றவாளியின் வீட்டில் 10 நிமிடங்கள்தான் இருந்திருக்கிறாள். அதோடு இரண்டு வீட்டினருக்கும் இடையே நல்ல தொடர்பு இருந்திருக்கிறது.

அடிக்கடி குழந்தை அந்த நபரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தியிருக்கிறார். எனவே, குற்றம்சாட்டப்படும் நபர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்" என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டும் பெண்ணின் வீட்டுக்கும், குற்றம்சாட்டப்பட்ட நபரின் வீட்டுக்கும் ஒரே குடிநீர் பைப் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் தங்களுக்கிடையே பிரச்னை இருந்துவருவதாகவும், அதன் காரணமாகவே அந்தப் பெண் இத்தகைய பொய்க் குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் அந்த நபர் தெரிவித்திருக்கிறார்.