Published:Updated:

டெல்லி கலவரம்... உயர் நீதிமன்ற விசாரணை: முழு விவரம்

டெல்லி உயர் நீதிமன்றம்

26-ம் தேதி காலை முரளிதர் தலைமையிலான அமர்வு முன்பு மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்தர் தொடுத்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி உயர் நீதிமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

Published:Updated:

டெல்லி கலவரம்... உயர் நீதிமன்ற விசாரணை: முழு விவரம்

26-ம் தேதி காலை முரளிதர் தலைமையிலான அமர்வு முன்பு மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்தர் தொடுத்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி உயர் நீதிமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

டெல்லி உயர் நீதிமன்றம்

பா.ஜ.க-வைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, டெல்லியில் நடைபெற்ற சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவான கூட்டம் ஒன்றில் பேசுகிறார். அப்போது மூத்த காவல்துறை அதிகாரிகளும் உடன் இருக்கின்றனர். அதில் டெல்லியில் நடைபெற்றுவரும் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டத்தை காவல்துறை மூன்று நாள்களில் அகற்ற வேண்டும் எனப் பேசியிருக்கிறார். சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பா.ஜ.க தலைவர்கள் இப்படி நேரடியாக அச்சுறுத்தல் கொடுப்பது முதல்முறையல்ல.

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆக்ராவில் இருந்தபோதே வடக்கு டெல்லியில் வன்முறை வெடிக்க ஆரம்பித்தது. டெல்லியில் நடந்த வன்முறையில், தற்போது வரை 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. வன்முறையாளர்களால் மசூதி ஒன்று தாக்கப்படும் காட்சிகளும், காவல்துறையால் சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்படும் காட்சிகளும் இணையத்தில் வைரலாகின.

ஜாமியா தொடங்கி சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களில் நிகழ்த்தப்பட்ட வன்முறை தொடர்பாக எழுந்த வழக்குகளை நீதித்துறை மிகவும் மெத்தனமாகவே கையாண்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு விதிவிலக்காக, நீதிபதி முரளிதர் தலைமையிலான டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு, வன்முறை தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்தது. 25-ம் தேதி நள்ளிரவில், வன்முறையில் காயம் அடைந்தவர்களுக்கான மருத்துவ உதவிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

26-ம் தேதி காலை முரளிதர் தலைமையிலான அமர்வு முன்பு மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்தர் தொடுத்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி உயர் நீதிமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

நீதிபதி முரளிதர்
நீதிபதி முரளிதர்

மத்திய அரசு சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தாவும், டெல்லி அரசு சார்பாக ராகுல் மெஹ்ராவும், ஷர்ஷ் மந்தர் சார்பாக கோலின் கொன்ஸ்லேவ்ஸ்ம் ஆஜராகி வாதாடினர். இந்த வழக்கில், வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய பா.ஜ.க தலைவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

அப்போது வாதாடிய துஷர் மேத்தா, இதேபோன்றதொரு வழக்கு தலைமை நீதிபதி அமர்வின் முன்பு பட்டியலிடப்பட்டுள்ளது அதனால், இதை அவசரமாக விசாரிக்கவேண்டியதில்லை என வாதிட்டார். டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கூடாது என்றும் மத்திய அரசு பதிலளிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.

``இந்த வழக்கு, இன்னும் 16 மணி நேரம் காத்திருக்க முடியாதா?'' என துஷர் மேத்தா கேள்வியெழுப்பினார். குற்றவாளிகள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவேண்டியது அவசியமானது இல்லையா என நீதிபதிகள் பதில் கேள்வியெழுப்பினர்.

வெளியில் சூழ்நிலை உகந்ததாக இல்லையென்றும், இந்த வழக்கை அவசரமாக விசாரித்தாக வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வன்முறையைத் தூண்டும் விதமாக பா.ஜ.க தலைவர்கள் பேசிய வீடியோக்கள் உள்ளதே, அவற்றின்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

துஷர் மேத்தா
துஷர் மேத்தா

அந்த வீடியோக்கள் எதையும் பார்க்கவில்லை என துஷர் மேத்தா பதிலளித்தார். ``காவல் நிலையத்தில் அத்தனை தொலைக்காட்சிகள் இருக்கையில், இந்த வீடியோக்களைப் பார்க்கவில்லை என காவல்துறை பதிலளிப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறையின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது” என்றார் முரளிதர்.

பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ரா, போராட்டங்கள் தொடர்பாகப் பேசிய வீடியோ நீதிமன்றத்திலே திரையிடப்பட்டது. இதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, எப்போது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என காவல்துறையினரிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த துஷர் மேத்தா, காவல்துறை நன்கு ஆராய்ந்த பின் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

அதேபோல், பா.ஜ.க எம்.பி அனுராக் தாகூர், பர்வேஷ் வர்மா மற்றும் அபய் வர்மா ஆகியோர் போராட்டங்கள் தொடர்பாகப் பேசிய வீடியோக்களும் நீதிமன்றத்தில் திரையிடப்பட்டன. ``தேசத் துரோகிகளை துப்பாக்கியால் சுடுங்கள்” என்று பேசியதை சுட்டிக்காட்டி, ``ஏன் இவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய காவல்துறை தாமதிக்கிறது'' என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

’பா.ஜ.க தலைவர்கள், மக்களை வெளிப்படையாக ஆயுதத்தைக் கையிலெடுக்கத் தூண்டுகின்றனர். அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் இவ்வாறு வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுவது, அரசே வன்முறையை ஆதரிக்கிறதோ என்கிற கேள்வி எழுகிறது. சூழ்நிலை இவ்வளவு தீவிரமாக இருக்க, டெல்லி காவல் துறையோ மௌனம் காக்கிறது’ என கோலின் கொன்ஸ்லேவ்ஸ் வாதிட்டார்.

பாஜக தலைவர்கள்
பாஜக தலைவர்கள்

இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து, துஷர் மேத்தா காவல்துறையைக் களங்கப்படுத்தாதீர்கள் என்று வாதிட்டார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய நீதிபதி முரளிதர், ``உயிர்களைப் பாதுகாக்கவேண்டியது நீதிமன்றத்தின் கடமை. நீதிமன்றத்தின் ஆதங்கத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இதே கோஷங்கள் அனைத்து வீடியோக்களிலும் எழுப்பப்படுகின்றன. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், மக்களுக்கு தவறான செய்தி சொல்லப்படுகிறது. இந்தப் பேச்சுகள் வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருக்கிறது என்று தெரிந்தும் காவல்துறை ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்கிற கேள்வி நாடு முழுவதும் எழுப்பப்படுகிறது.”

``ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், அவர்களுடைய கடமையை தவறாது செய்ய உரிய உத்தரவு வழங்கவேண்டியது நீதிமன்றத்தின் கடமை. வெறுப்புப் பேச்சுகள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது தாமதமானால், நிலைமை மேலும் மோசமடையவே செய்யும். டெல்லியில் மீண்டும் ஒரு 1984-ம் ஆண்டு போன்ற சம்பவம் (சீக்கியர்களுக்கு எதிரான படுகொலை) நிகழ இந்த நீதிமன்றம் அனுமதிக்காது. காவல்துறை விரைந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை, பகுதிகளை மூத்த அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் சென்று பார்வையிட வேண்டும்” என்றார்.

நீதிபதி முரளிதர்
நீதிபதி முரளிதர்

பணியிட மாற்றம்:

உச்சநீதிமன்ற கொலிஜியம், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் நீதிபதி முரளிதரை பஞ்சாப் உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற பரிந்துரைத்திருந்தது. இதற்கு பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவே முரளிதரை பஞ்சாபிற்கு பணியிடம் மாற்றி மத்திய அரசு அறிவித்தது, கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது. மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், முரளிதரின் ஒப்புதல் பெற்றுதான் பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பணியிட மாற்ற உத்தரவு வந்ததற்குப் பிறகு, நேற்று (27.02.2020) காலை தன்னுடைய அமர்வில் பேசிய நீதிபதி முரளிதர், ``நேற்றைய வழக்குதான் இந்த நீதிமன்றத்தில் என்னுடைய கடைசிப்பணி” என்று கூறி விடைபெற்றார்.``நீங்கள் எங்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்” என்று வழக்கறிஞர்கள் முரளிதரைப் புகழ்ந்தனர்.