Published:Updated:

உத்தரகாண்ட்: `நடுத்தெருவில் 4,000 குடும்பங்கள்... கொதித்த உச்ச நீதிமன்றம்' - நடந்தது என்ன?!

உச்ச நீதிமன்றம்

உத்தரகாண்ட், ஹல்த்வானி பகுதியில் 4,000 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவிட்ட அந்த மாநில உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 50,000 போராட்டக்காரர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருக்கிறார்கள்.

உத்தரகாண்ட்: `நடுத்தெருவில் 4,000 குடும்பங்கள்... கொதித்த உச்ச நீதிமன்றம்' - நடந்தது என்ன?!

உத்தரகாண்ட், ஹல்த்வானி பகுதியில் 4,000 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவிட்ட அந்த மாநில உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 50,000 போராட்டக்காரர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

உயர் நீதிமன்றத்தில் வழக்கு:

உத்தரகாண்டில் ஹல்த்வானி நகரில் கபூர் பஸ்தி, தோலக் பஸ்தி, இந்திரா நகர், பான்புல்புரா ஆகிய பகுதிகள் இருக்கின்றன. இங்கு 4,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்துவருகின்றன. மக்கள்தொகை 50,000-க்கும் மேல் இருக்கிறது. மேலும் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், வங்கி, மசூதிகள், கோயில்கள் இருக்கின்றன. இந்த நிலையில் இந்த நிலம் ரயில்வேக்குச் சொந்தமானது என்றும், 29 ஏக்கர் அளவுக்கு ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்தே மக்கள் தங்கள் வீடுகளை இங்கு கட்டியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம்
உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம்

எனவே இப்பகுதியிலிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கடந்த 2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்துவந்த நீதிமன்றம் கடந்த டிசம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், "2023 ஜனவரி 9-ம் தேதிக்குள் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர்களை அந்தப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், துணை ராணுவப் படையைப் பயன்படுத்தியும் அகற்றலாம்" என்று தெரிவித்தது.

இதையடுத்து இந்த மாதம் 9-ம் தேதிக்குள் இடத்தை காலிசெய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அப்பகுதியில் நீண்ட நாள்களாக வசித்துவந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீதிகளில் இறங்கிப் போராட ஆரம்பித்தனர். குறிப்பாக ஊர்வலங்கள், பிரார்த்தனைகள் போன்றவற்றில் ஈடுபட்டனர். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

மனிதாபிமானம் தொடர்புடைய விஷயம்:

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ``50 ஆயிரம் மக்களை இரவோடு இரவாக அகற்ற முடியாது. இது மனிதாபிமானம் தொடர்புடைய விஷயம். துணை ராணுவப்படையைப் பயன்படுத்தி அந்த மக்களை அகற்ற வேண்டும் என்று கூறுவது சரியல்ல. இந்த விவகாரத்தில் நடைமுறைக்கு ஏற்ற தீர்வு உருவாக்கப்பட வேண்டும்” என்று கூறி, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்ற அமர்வு தடைவிதித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

10-க்கு 10 அறையில் வசிப்பு:

இது குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறுகையில், "இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் இஸ்லாமியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு ஏழைகளே அதிகம். 10-க்கு 10 அறைகளில் வசித்துவருகிறோம். ஓர் அறையில் சில பாத்திரங்களும் மறுபுறம் விறகு அடுப்பும், கூரை என்ற பெயரில் பிளாஸ்டிக் தாள்களும், கதவாகத் தேய்ந்துபோன திரைச்சீலைகளும் இருக்கின்றன.

நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் இங்கு வாழ்ந்தோம். நான் இங்குதான் பிறந்தேன். என் குழந்தைகள் இங்குதான் பிறந்தார்கள். அவர்களின் குழந்தைகள் இங்கு பிறந்தனர். இவர்கள் எங்கள் வீடுகளை எடுத்துச் சென்றால் நாங்கள் எங்கே போவோம்... நீங்கள் எங்களை வெளியேற்றினால், மீள்குடியேற இடமொன்றை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம். ஆனால், அவர்கள் உடனடியாக காலிசெய்யச் சொல்கிறார்கள்” என்று கூறினர்.

கால்நடை
கால்நடை
pixabay

90 ஆண்டுகள் குத்தகை:

இந்த வழக்கை ஆரம்பம் முதல் கண்காணித்துவருபவர்கள், "ஹல்த்வானி ஸ்டேஷனை நெருங்கும் ரயில் பாதையை ஒட்டி இந்தப் பகுதி பரவியிருக்கிறது. ஆரம்பத்தில் மலைகளில் கால்நடை மேய்ப்பவர்களுக்குக் குளிர்காலத் தங்குமிடமாக இருந்தது, பின்னர் வர்த்தக மையமாக மாறியது. வெல்லம், உருளைக்கிழங்கு, மரம், சுண்ணாம்பு போன்றவற்றின் பெரிய சந்தையாக இது உருவானது. ஹல்த்வானியை ஒட்டியுள்ள ரோஹில்கண்ட் பகுதியிலிருந்து ஏராளமானோர் வேலை தேடி இங்கு வந்தனர்.

ஆங்கிலேய அரசு இவர்களுக்கு 90 ஆண்டுகள் குத்தகைக்கு நிலம் கொடுத்து இங்கு குடியமர்த்தியது. ஸ்டேஷனுக்கு அருகிலுள்ள இந்தப் பகுதி அப்போது பன்பூல்புரா என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியை காலிசெய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் மனுவுக்கும், நேரடியாக ஆக்கிரமிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 1998-ம் ஆண்டில், ஹல்த்வானி மற்றும் ரயில் நிலையத்துக்கு அருகில் ஓடும் கோலா நதியில் பாலம் கட்டுவதற்கு அரசு ஒப்புதல் அளித்தது.

வெல்லம்
வெல்லம்

இடிந்த பாலம்:

பாலம் 2004-ல் கட்டி முடிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, தொடர்மழையின்போது பாலம் இடிந்து விழுந்தது. பாலம் இடிந்ததற்கு அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, 2012-ல், சமூக ஆர்வலர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். ரயில்வே நிலத்தில் பாலம் கட்டப்பட்டதால், நீதிமன்ற உத்தரவின்பேரில் ரயில்வேதுறையும் வழக்கில் இணைக்கப்பட்டது. இதை விசாரிக்க நீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது.

பாஜக
பாஜக

குழு தனது அறிக்கையில், "பாலம் இடிந்து விழுந்ததற்கு மோசமான வடிவமைப்பு, சாதாரண கட்டுமானம் மற்றும் சட்டவிரோத சுரங்கம் ஆகியவை காரணம்" என்று கூறியிருக்கிறது. மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில், கோலா நதியில் சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டியதற்கு, 29 ஏக்கர் நிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் காரணம் என்று ரயில்வே கூறியிருக்கிறது.

பொதுமக்களுக்கு நோட்டீஸ்:

இந்த பிரமாணப் பத்திரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், 29 ஏக்கர் ரயில்வே நிலத்திலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றுமாறு மாநில அரசுக்கு 2016-ல் உத்தரவு பிறப்பித்தது. பாலம் கட்டப்பட்ட பொதுப்பணித்துறை, குறைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இந்த விஷயத்தை சட்டவிரோத சுரங்கத்தின் பக்கம் திருப்பினர்.

இதனால் அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 2017-ம் ஆண்டு மக்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். இதன் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அளித்து, இடத்தை காலிசெய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

ஆனால் இந்த வழக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. 2022-ல், உயர் நீதிமன்றம், கோலா பாலத்தின் வழக்கை தள்ளுபடி செய்யும்போது, ​​ஆக்கிரமிப்பு விவகாரத்தில் புதிய பொதுநல மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்புக்கு எதிராகப் புதிய பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் ஹல்த்வானியில் இருக்கும் ரயில்வேதுறையின் அனைத்து நிலங்களையும் விடுவிக்க உத்தரவிட்டிருக்கிறது” என்றனர்.