Published:Updated:

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியின் பின்னணி என்ன?!

நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி

சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்துவந்த முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். யார் இவர்... இவரின் பின்னணி என்ன?!

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியின் பின்னணி என்ன?!

சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்துவந்த முனீஷ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். யார் இவர்... இவரின் பின்னணி என்ன?!

Published:Updated:
நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி

கடந்த ஜனவரி மாதம், 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டார். 2023-ம் ஆண்டு, நவம்பர் மாதம் சஞ்ஜிப் பானர்ஜியின் பணிக்காலம் முடிவடைகிறது. இந்தச் சூழலில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழுக் கூட்டத்தில், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி
நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி

இந்தப் பரிந்துரையை அடுத்து, நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கும், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் மாற்றி குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். சஞ்ஜிப் பானர்ஜி பணியிட மாற்றத்துக்குப் பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பணியிட மாற்றத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கொலிஜியத்துக்குக் கோரிக்கை வைத்திருந்த நிலையிலும், சஞ்ஜிப் பானர்ஜி மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யார் இந்த முனீஷ்வர்நாத் பண்டாரி!

முனீஷ்வர்நாத் பண்டாரி 1960-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 13-ம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்தார். தனது பி.காம்., எல்.எல்.பி படிப்பை முடித்த முனீஷ்வர்நாத், கடந்த 1983-ம் ஆண்டு, மே 29-ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். இவர் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில், சிவில், சேவை, தொழிலாளர், குற்றவியல், மத்திய நிர்வாக தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் அரசமைப்பு போன்ற வழக்குகளில் வாதாடியுள்ளார். இவர் ராஜஸ்தான் அரசின் வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தித் துறையின் வழக்கறிஞராகவும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார்.

நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி
நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி

முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த 2007-ம் ஆண்டு, ஜூலை 5-ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2008-ம் ஆண்டு, நவம்பர் 4-ம் தேதி, நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் 10 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய முனீஷ்வர்நாத் 2019-ம் ஆண்டு, மார்ச் 15-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் யாதவ் ஓய்வுபெற்றதையடுத்து, 2021-ம் ஆண்டு, ஜூலை 26-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை முனீஷ்வர்நாத் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்தார்.

தலைமை நீதிபதியாக மாற்றம்:

இந்த நிலையில், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர் அவரை தலைமை நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்தார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்த விழாவில் பேசிய முனீஷ்வர்நாத், ``அடித்தட்டு மக்களுக்கு நீதி சென்றடைவதை உறுதி செய்வேன். எப்போதும் அணுகக்கூடிய வகையில் நான் இருப்பேன். நான் மிகவும் நேசிக்கும் மாநிலம் தமிழகம். இந்த நீதிமன்றத்தைச் சிறப்பாக வழிநடத்த என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்" என்று பேசியிருந்தார்.

முதல்வர், ஆளுநர், நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி
முதல்வர், ஆளுநர், நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி

இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த சமயத்தில், தமிழகத்திலுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது, விதிகளைப் பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரிய வழக்கு வரை பல்வேறு சிறப்புத் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியின் பணிக்காலம் வரும் 2022-ம் ஆண்டு, செப்டம்பர் 12-ம் தேதியோடு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.