Published:Updated:

கொடநாடு பங்களாவில் கொள்ளை எதற்காக நடந்தது?- குற்றப்பதிவில் போலீஸ் அதிர்ச்சித் தகவல்

ரா.சதீஸ்குமார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடநாடு பங்களாவில் ரூ.200 கோடி பணம் இருப்பதாகக் கருதி, கொள்ளைச் சம்பவம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Kodanad Estate
Kodanad Estate

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா, கோத்தகிரி அருகேயுள்ள கொடநாட்டில் உள்ளது. கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதில், காவலாளி ஓம் பகதூர் (50) கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக சயான், கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சமி மற்றும் பிஜின் குட்டி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

Kodanadu Estate
Kodanadu Estate

கோத்தகிரி நீதிமன்றத்திலிருந்து இந்த வழக்கு, ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஜாமீனில் இருந்த சயான் மற்றும் வளையார் மனோஜ் ஆகியோர், இச்சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர். இதனால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசு சார்பில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரது ஜாமீனை ரத்துசெய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்று, இருவரது ஜாமீன் மனுவையும் ஊட்டி நீதிமன்றம் ரத்துசெய்தது. சயான், வாளையார் மனோஜ் ஆகியோரைக் கைது செய்த போலீஸார், அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதில், சயான் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மற்ற 8 பேரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை, கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கொடநாடு வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி வடமலை முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

Kodanadu Estate
Kodanadu Estate

குற்றம் சாட்டப்பட்ட 10 பேரும் ஆஜராகினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நேற்று போலீஸார் குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது ஆதாயக் கொலை, கூட்டுக்கொள்ளை, உட்பட 13 குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்தனர். இதில், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ரூ.200 கோடி பணம் இருப்பதாகக் கருதி கொள்ளைச் சம்பவம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. ஆனால் சயான், வளையார் மனோஜ் உட்பட 10 பேரும், அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து சான் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கூறுகையில், “கொடநாடு பங்களாவில் ரூ.200 கோடி பணத்தை கொள்ளையடிக்கச் சென்றதாக போலீஸார் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர். அப்படியானால், பங்களாவில் ரூ.200 கோடி ரொக்கம் இருந்ததை போலீஸார் ஒப்புக்கொள்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இது உண்மையெனில், இவ்வளவு பணம் எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும்” என்றார்.

District Session Court
District Session Court

இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பால நந்தகுமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பதில் ஏதும் அளிக்காமல் சென்றுவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், அடுத்த மாதம் 13-ம் தேதி பதிலளிக்க வேண்டும் எனக் கூறி, விசாரணையை செப்டம்பர் 13-ம் தேதிக்கு நீதிபதி வடமலை ஒத்திவைத்தார்.