Published:Updated:

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்ற விவகாரம்: மறு ஆய்வு கோரும் வழக்கறிஞர்கள்! -நடப்பது என்ன?

சென்னை உயர் நீதிமன்ற  தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகக் கடந்த ஜனவரி மாதம், 4-ம் தேதி சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டார். இவர் அதற்கு முன்பு, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாகப் பணியாற்றிவந்தார். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியின் பதிவிக்காலம் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜிக்கு பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம்
சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம்

வரும் 2023-ம் ஆண்டு, நவம்பர் மாதம் வரை சஞ்ஜிப் பானர்ஜியின் பணிக்காலம் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், 16-ம் தேதி உச்ச நீதிமன்றக் கொலிஜியம் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஐந்து நீதிபதிகள்கொண்ட உச்ச நீதிமன்ற கொலிஜியம், சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரை செய்திருக்கிறது. மேலும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஷ்வர் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் கொலிஜியம் பரிந்துரை செய்திருக்கிறது.

புதிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் நீதிபதி முனீஷ்வர் பண்டாரி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். கடந்த 2019-ம் ஆண்டு, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இவர், மூத்த நீதிபதியாகப் பணியாற்றிவருகிறார். மேலும், இவரின் பணிக்காலம் வரும் 2022-ம் ஆண்டு, 12-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பணியிடமாற்றத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 237 பேர் கொலிஜியத்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

கடந்த 2018-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில்ரமாணி பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த 2019-ம் ஆண்டு, விஜயா கமலேஷை மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றி, உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டது. இந்தியாவின் மூத்த தலைமை நீதிபதிகளில் ஒருவரான விஜயா கமலேஷ், தன்னை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியதை மறுபரிசீலனை செய்யுமாறு உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்குக் கோரிக்கை வைத்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜயா கமலேஷின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்வதாகக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பிவைத்தார். இவரை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி வழக்கறிஞர்கள் அவருக்கு ஆதரவாக ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்பும் செய்திருந்தனர். இந்த நிலையில் அவரின் ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இந்தச் சம்பவம் நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நீதிபதி  விஜயா கமலேஷ் தஹில்ரமாணி
நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமாணி

தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அதே போன்ற மற்றொரு சம்பவம் நடந்துகொண்டிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருக்கிறது. இந்தப் பரிந்துரையைக் குடியரசுத் தலைவர் பரிசீலனை செய்து விரைவில் பணியிடமாற்ற உத்தரவைப் பிறப்பிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருப்பவரை, நான்கு நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்ற பிறகு நடைபெற்ற வரவேற்பு விழாவில் பேசிய அவர், ``இந்தியாவிலேயே மொழியின் பெயரைக்கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். திருவள்ளுவரின் மண்ணுக்கு வந்திருப்பது பெருமையை அளிக்கிறது. தமிழகத்தை என்னுடைய மற்றொரு தாய்வீடாகக் கருதுகிறேன். தொன்மையான மொழியாம் தமிழை இன்னும் கோடிக்கணக்கானோர் செருக்கோடும் பெருமையோடும் பேசிவருகிறார்கள்" என்றார்.

நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி
நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

தொடர்ந்து பேசியவர், ``பாரம்பர்யம், இசை, இலக்கியம், நடனம், கலாசாரம் என்று அனைத்திலும் தனித்தன்மையோடு சிறந்து விளங்கும் தமிழ்நாடு என்னுடைய மாநிலம். பாரம்பர்யம்மிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலிருந்து, மற்றொரு பாரம்பர்யம்மிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்திருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பின்றி நீதி பரிபாலனம் சாத்தியமில்லை. முதலில் நான் ஒரு நீதிபதியாகப் பணியாற்றுவேன். பிறகுதான் தலைமை நீதிபதி. இந்த மாநிலத்தில் நான் ஒரு சேவகன்" என்று பேசினார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி வழங்கிய சில தீர்ப்புகள், உத்தரவுகள், கேள்விகளைப் பின்வருமாறு பார்க்கலாம். கிஷோர் வைக்யனிக் புரோத்சாஹன் யோஜனா (Kishore Vaigyanik Protsahan Yojana Exam) தேர்வு அனைத்து மொழிகளிலும் நடைபெற வேண்டும் என்பது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, எம்.துரைசாமி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. ``அறிவியல் ஆர்வம் அதிகமுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கிலம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. கிராமப்புற மாணவர்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை. இந்தி, ஆங்கிலம் தவிர, பிறமொழிகளில் ஏன் தேர்வு நடத்தக் கூடாது. அனைத்து மாநில மொழிகளிலும் தேர்வு நடைபெற வேண்டும். இந்தியைப் புறவாசல் வழியாக நுழைக்க முற்படுகிறீர்களா?" என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் அனைத்து மொழிகளிலும் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்யத் தமிழக அரசு நியமித்த குழுவை ரத்து செய்யக் கோரி பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில்,  ``நீட் தேர்வு முறையாகக் கண்காணிக்கப்படுகிறது. தமிழக அரசு குழு நியமிக்கவேண்டிய அவசியமில்லை. இந்தக் குழு மாநில அரசின் அதிகார வரம்பு மீறிய செயல். குழு அமைக்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ``அரசுப் பள்ளி மாணவர்கள், சமூக, பொருளாதாரரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதென்று கூற முடியாது. மாநில அரசின் வரம்பை மீறியதாக அறிவிப்பாணை இல்லை" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கட்டாய ஹெல்மெட் டு டிக்டாக் தடை... நீதிபதி கிருபாகரன் `மக்கள் நீதிபதி' என்று கொண்டாடப்படுவது ஏன்?!

மேலும், `` தேர்தல் ஆணையத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் நடவடிக்கைதான், தமிழகத்தில் இரண்டாவது அலை பரவக் காரணமாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது ஏன் கொலை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக் கூடாது" என்றும், ``நீலகிரியில் டி23 புலியை உயிருடன் பிடிக்க வேண்டும்",   ``ஸ்டெர்லைட் ஆலை வழக்கில், மக்களைக் கொன்றுவிட்டு அதற்கு இழப்பீடாகப் பணம் வழங்கினால் அரசின் கடமை முடிந்துவிட்டதா? மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தர வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி உத்தரவுகளையும், சரமாரி கேள்விகளையும் எழுப்பியிருக்கிறார் நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே சஞ்ஜிப் பானர்ஜி மாற்றப்படுவது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம். ``தலைமை நீதிபதி, எந்தப் பாகுபாடும் இல்லாமல் துணிச்சலாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 75 நீதிபதிகளைக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து வெறும் நான்கு நீதிபதிகள் மட்டுமே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றம் போன்ற சார்ட்டடு நீதிமன்றங்களில் பணியாற்றும் தலைமை நீதிபதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள்.  இவரின் பணியிடமாற்றம் தண்டனையாகத்தான் பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை தற்போது வேகமெடுத்திருப்பதும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆட்சி குறித்துப் பாராட்டு தெரிவித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். கண்டிப்பாக இதில் மத்திய அரசின் தலையீடு இருக்கும்" என்றார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு