Published:Updated:

40 நாள் விசாரணை... 144 தடை உத்தரவு... என்ன நடக்கும் அயோத்தி வழக்கில்?

எழுபது ஆண்டுக்கால பாபர் மசூதி - ராமஜென்ம பூமி வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தினசரி விசாரணை என்ற அடிப்படையில் 40 நாள்கள் விசாரிக்கப்பட்டு, தற்போது தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

பாபர் மசூதி - ராமஜென்மபூமி வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படவிருப்பதால், உ.பி மாநிலத்தில் நாளுக்கு நாள் பதற்றம் கூடிவருகிறது. அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய பகுதியில் தீபாவளித் திருநாளில் அகல்விளக்குகள் ஏற்றப்படும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள அறிவிப்பு, பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

அயோத்தியில், 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்தப் பகுதி, 2.77 ஏக்கர் பரப்பளவுகொண்டது. பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தின் மையப்பகுதியில்தான் ராமர் பிறந்தார் என்று இந்து அமைப்புகள் நம்பிக்கையின் அடிப்படையில் கூறுகின்றன. ஆனால், `பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் தொழுகை நடத்திவந்த பள்ளிவாசல் அது’ என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு

அந்த நிலத்துக்கு உரிமை கோரி, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம்லீலா ஆகிய மூன்று அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அந்த 2.77 நிலத்தை இந்த மூன்று அமைப்புகளும் சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அந்த வழக்கை விசாரித்தது. முன்னாள் நீதிபதி கலிபுல்லா, வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் கொண்ட சமரசக் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. அந்தக் குழு, மூன்று தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அது பலனளிக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை தினசரி விசாரணை என்ற அடிப்படையில் விசாரிக்கப்போவதாக உச்ச நீதிமன்றம் கூறியது. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கி 40 நாள்கள் விசாரணை நடைபெற்றது. அக்டோபர் 16-ம் தேதி விசாரணை நிறைவு பெற்றது. அன்றைய தினம் நடைபெற்ற விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கு ஆதாரமாக சில வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய புத்தகங்களை இந்து மகா சபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங் மேற்கோள் காட்டினார். அது தொடர்பான வரைபட நகல் ஒன்று முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கும் வழங்கப்பட்டது. `இதை வைத்து நான் என்ன செய்வது’ என்று அரசியல் சாசன அமர்விடம் ராஜீவ் தவான் கேட்டார். அந்த வரைபட நகலை நீங்கள் கிழிக்கலாம் என்று நீதிபதிகள் கிண்டலாகக் கூறினர். உடனே, அந்த வரைபட நகலை ராஜீவ் தவான் கிழித்துவிட்டார். அது, நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் வருவாய்த்துறை ஆவணங்கள் உட்பட ஏராளமான ஆவணங்கள் முஸ்லிம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ராமர் அந்த இடத்தில்தான் பிறந்தார் என்பது தங்களின் நம்பிக்கை என்று வாதங்களை எடுத்துவைத்த இந்துக்கள் தரப்பு, அயோத்தியில் இந்திய தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த கல்தூண்களை, அந்த இடத்தில் முன்பு கோயில் இருந்ததற்கான ஆதாரமாகக் குறிப்பிட்டது.

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்போம் என்று கூறும் முஸ்லிம்கள் தரப்பு, மத உணர்வுகளின் அடிப்படையில் அல்லாமல் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், அந்த இடத்தில் கோயில் இருந்ததற்கான ஆதாரமாக, அங்கு தொல்லியல் துறையால் கண்டெடுக்கப்பட்ட கல்தூண்களை ஆதாரமாகக் கொண்டும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று இந்துக்கள் தரப்பு எதிர்பார்க்கிறது.

நவம்பர் 17-ம் தேதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணியிலிருந்து ஓய்வுபெறவிருக்கிறார். நவம்பர் 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. முந்தைய நாள் சனிக்கிழமை. இரண்டு நாள்கள் விடுமுறை என்பதால், நவம்பர் 15-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாபர் மசூதி அமைந்திருந்த ஒட்டுமொத்த இடத்தைப் பங்கு போடாமல், முழுமையாகத் தங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது முஸ்லிம், இந்து ஆகிய இரு தரப்பினரின் வாதமாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஆனால், ஒரு தரப்பினருக்கே ஒட்டுமொத்த நிலத்தையும் கொடுத்துவிட வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால், அந்த இடத்தில் எல்லோருக்கும் பொதுவான முறையில் ஒரு நூலகத்தையோ, மருத்துவமனையையோ ஏற்படுத்திவிடலாம் என்கிற யோசனையையும் சிலர் முன்வைக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறதோ!

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு