Published:Updated:

`நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறக்கூடாது?' - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்த நீட் தேர்வை மத்திய அரசு ஏன் திரும்பப் பெறக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

மருத்துவக் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களை முறையாக நிரப்ப உத்தரவிடக் கோரி, தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த முறை வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் உள்ள நீட் பயிற்சி மையங்கள் குறித்த அறிக்கையை தமிழக அரசிடம் நீதியரசர்கள் கேட்டிருந்தனர். இதுதொடர்பான அறிக்கையை தமிழக அரசு தாக்கல்செய்தது. அந்த அறிக்கையில், ``நீட் தேர்வு மூலமாகத் தேர்ச்சிபெற்ற மாணவர்களில், தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சிபெற்றவர்களே அதிகம் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களும் அரசு பயிற்சி மையங்களில் பயின்றவர்களும் குறைவு” என்று கூறப்பட்டுள்ளது.

நீட்
நீட்

இதற்கு நீதிபதிகள் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. ``நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட பின், தனியார் பயிற்சி மையங்கள் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றன. தனியார் பயிற்சி மையங்கள் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஏழை மாணவர்கள் எப்படி இவற்றில் சேர்ந்து பயிற்சிபெற முடியும். அவர்களின் மருத்துவக் கனவுகள் என்னாவது? ஏழை மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முந்தைய அரசுகள் கொண்டுவந்த திட்டங்களைப் புதிதாகப் பதவியேற்கும் அரசுகள் திரும்பப் பெறுவதுண்டு. அதேபோல், முந்தைய காங்கிரஸ் - தி.மு.க அரசு கொண்டுவந்த நீட் தேர்வை மத்திய அரசு ஏன் திரும்பப் பெறக்கூடாது?'' எனக் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.