Published:Updated:

சொல்லும் காலம் - 2: ஊரடங்கிற்கு உத்தரவிடலாமா நீதிபதிகள்?

நீதிமன்றம்
நீதிமன்றம்

நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பிக்கும்போது, அதன் விளைவுகளைப் பரிசீலிக்க வேண்டும். சிக்கலான விஷயங்களை அணுகும்போது, துறைரீதியான நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்கலாம்.

கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்குதான் தீர்வா? அந்த ஊரடங்கை அறிவிப்பதற்கு யாருக்கு அதிகாரம் உள்ளது? நீதிமன்றங்கள் இதில் தலையிட்டு ஊரடங்கை அறிவிக்கலாமா?

இப்படி முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓர் உத்தரவு. கொரோனா இரண்டாவது அலை படுமோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் ஒன்று.

இதுதொடர்பாக தானாகவே முன்வந்து பொதுநல வழக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு ஏப்ரல் 19-ம் தேதி திங்கள்கிழமை விசாரித்தது அலகாபாத் உயர் நீதிமன்றம். நீதிபதிகள் சித்தார்த்த வர்மா, அஜித்குமார் அடங்கிய அமர்வு, யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசைக் கடுமையான கேள்விகளால் துளைத்தது. ''இரண்டாவது அலையின் வீரியம் தெரிந்தும், அரசு முன்கூட்டியே திட்டமிடாதது பெரும் அவமானம்'' என நீதிபதிகள் கண்டித்தனர்.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

இதை அடுத்து அவர்கள் போட்ட உத்தரவுதான் சர்ச்சைக்குள்ளானது. 'கொரோனா பரவலைத் தடுக்க லக்னோ, பிரயாக்ராஜ், கான்பூர், வாரணாசி, கோரக்பூர் ஆகிய ஐந்து நகரங்களில் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு அறிவியுங்கள்' என மாநில அரசுக்கு உத்தரவு போட்டனர். ஆனால், 'மக்கள் உயிர்வாழ்வதைப் போலவே வாழ்வாதாரமும் முக்கியமானது. ஊரடங்கு போட்டால் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்படும்' என உ.பி அரசு மறுத்தது. நீதிபதிகள் இதை ஏற்கவில்லை.

அடுத்த நாளே உச்ச நீதிமன்றம் சென்று இந்த உத்தரவுக்குத் தடை வாங்கிவிட்டது உ.பி அரசு. 'நீதிமன்ற உத்தரவின்படி ஊரடங்கை அமல்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல' என உ.பி அரசு எடுத்து வைத்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதே ஏப்ரல் 19-ம் தேதி திங்கள்கிழமை தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இதேபோன்ற ஒரு விவகாரம் விவாதத்துக்கு வந்தது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி தெலங்கானா அரசிடம் அறிக்கைக் கேட்டிருந்தது உயர் நீதிமன்றம். அந்த அறிக்கையைப் பார்த்துவிட்டு கடும் அதிருப்தி தெரிவித்தார், தலைமை நீதிபதி ஹிமா கோலி.

''நீங்கள் கூறும் தகவல்கள் ஏமாற்றம் தருவதாக இருக்கின்றன. கொரோனா பாதிப்பில் நம் மாநிலம் முதலிடம் பிடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா?'' என்று கேட்ட நீதிபதி, ''உங்களுக்கு 48 மணி நேரம் அவகாசம் தருகிறேன். அதற்குள் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் பற்றி முடிவெடுங்கள். அப்படி நீங்கள் முடிவெடுக்காவிட்டால், இந்த நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பிக்கும்' என ஆவேசம் காட்டியிருக்கிறார்.

கொரோனா பரவல்
கொரோனா பரவல்

பொதுநல வழக்குகளைக் கையில் எடுக்கும் நீதிமன்றங்கள், அவற்றின் மூலம் நிறைய விஷயங்களில் நீதி வழங்கியிருக்கின்றன. அதில் ஒரு சமூகப் பார்வை இருக்கும். எளிய மக்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறை இருக்கும்.

ஆனால், நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பிக்கும்போது, அதன் விளைவுகளைப் பரிசீலிக்க வேண்டும். சிக்கலான விஷயங்களை அணுகும்போது, துறைரீதியான நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்கலாம். இப்படி நீதிபதிகள் செய்ததற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் உண்டு.

இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, 'கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு என்ற முடிவுக்கு நீதிபதிகள் எப்படி வந்தார்கள்?' என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவில் ஊரடங்கு ஏற்படுத்திய மோசமான பொருளாதார விளைவுகளைப் பார்த்துவிட்டு, 'இனி இப்படிப்பட்ட விஷப்பரீட்சைகள் கூடாது' என்ற மனநிலைக்கு அரசும் வந்துவிட்டது; மக்களும் வந்துவிட்டார்கள்.
சொல்லும் காலம்: கொரோனா இரண்டாம் அலை... நாம் என்ன செய்ய வேண்டும்?

'கொரோனா தொற்று குறைவாக இருந்த நேரத்தில் ஊரடங்கு போட்டது சரி. அது நோய்ப்பரவலைக் குறைத்தது. ஆனால், இப்போது இவ்வளவு தீவிரமாகப் பரவியிருக்கும் நிலையில், இந்தியா போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த நாடுகளில் ஊரடங்கு எந்த வகையிலும் உதவாது' என பெரும்பாலான நிபுணர்கள் சொல்கிறார்கள். கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதற்கு தனி அறை போன்ற வசதிகள் கூட இல்லாத வீடுகள்தான் பெருநகரங்களில் நிறைய உள்ளன. ஊரடங்கு போட்டு வீடுகளுக்குள் அடைத்துவைத்தால், மக்கள் என்ன செய்வார்கள்?

தேசிய தொற்றுநோயியல் நிலையத்தின் அறிவியல் ஆலோசனைக் குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் முலியில், ''கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி பற்றாக்குறையை சரி செய்வதே தீர்வு. ஊரடங்குத் தீர்வல்ல. மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது, இரவு நேர நடமாட்டத்தைக் குறைப்பது போன்ற கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே போதும்'' என்கிறார்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனமும் நேஷனல் இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் இன்ஸ்டிட்யூட் நிறுவனமும் இணைந்து ஓர் ஆய்வு நடத்தின. ''இந்தியா முழுக்க 130 மாவட்டங்களில்தான் கடந்த முறை கொரோனா அச்சுறுத்தியது. இரண்டாவது அலையிலும் இவையே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் முழுமையாகத் தடுப்பூசி போட்டால், கொரோனா கட்டுக்குள் வரும்'' என அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

இதுபோன்ற விஷயங்களில் அரசின் கவனத்தை ஈர்க்கும் பணியை நீதிமன்றங்கள் மட்டுமே செய்ய முடியும். அதை விட்டுவிட்டு ஊரடங்கால் மக்களை வதைக்க நீதிமன்றங்கள் எதற்கு?
அடுத்த கட்டுரைக்கு