
ஜூ.வி ஃபாலோ-அப்
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கிராமத்திலுள்ள ‘ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி’ மாணவர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகள் குறித்து கடந்த 16-10-2022 தேதியிட்ட ஜூ.வி இதழில் ‘போதை, வன்முறை, மிரட்டல்...’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்!
அதன் எதிரொலியாக தொகுதி எம்.எல்.ஏ-வும், புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சருமான சந்திர பிரியங்கா அந்தப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். இதையடுத்து அங்கு பணியாற்றிய துணை முதல்வர் சித்ரா உள்ளிட்ட ஒன்பது ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாகப் புதிதாக ஒன்பது ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

“இது மட்டும் போதாது. தவறு செய்யும் மாணவர்களை போதைப் பழக்கத்திலிருந்து விடுவிக்க, சிறந்த மனநல மருத்துவர்களைக்கொண்டு கவுன்சலிங் கொடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
‘‘காலம் உள்ள வரைக்கும் மறக்க மாட்டோம்!” - நெகிழும் சிறுவர்களின் தாய்
தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது இரண்டு மகன்களை வைத்துக்கொண்டு வறுமையில் தவிக்கும் தம்பதி குறித்து கடந்த 27.11.2022 ஜூ.வி இதழில், ‘வீல்சேர் தான் வாழ்க்கை... தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள்... மகன்களுக்காக மருகும் தாய்!’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தோம்.
கட்டுரை வெளியான நவம்பர் 23-ம் தேதியே, ஆவணத்தாங்கோட்டைக்குச் சென்ற புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகள், ஏற்கெனவே கிடைக்கிற உதவித்தொகையுடன் கூடுதல் உதவித்தொகை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றனர். சிறுவர்களில் ஒருவருக்கு வீல்சேர் இருக்கும் நிலையில், மற்றொருவருக்கும் வீல்சேர் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், அறந்தாங்கி சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் சார்பில், வாரம் ஒரு முறை அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று பிசியோதெரபி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடாகியிருக்கிறது. இதற்கிடையே சிறுவர்களின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தன்னால் முயன்ற அனைத்து உதவிகளையும் செய்துகொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். அதோடு, நம் விகடன் வாசகர்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வந்திருக்கின்றனர்.
அடுத்தடுத்த உதவிகளால் நெகிழ்ந்துபோயிருந்த லோகநாதன்-கோமதி தம்பதியிடம் பேசினோம். “முகம் தெரியாத உறவுகள் போனில் ஆறுதல் சொல்லி, எங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்யறதா சொல்றாங்க. இன்னும் சந்தோஷமா பிள்ளைகளைப் பார்த்துக்கணும்கிற வைராக்கியத்தையும் கொடுத்துருக்காங்க... கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கொடுப்பதாக அறந்தாங்கி பி.டி.ஓ சொல்லியிருக்கார். எங்க கஷ்டத்தை வெளிக் கொண்டுவந்த ஜூ.வி-யையும், உதவி செய்கிறவர்களையும் காலம் உள்ள வரைக்கும் மறக்க மாட்டோம்” என்றனர்.