``ஒவ்வொரு நாளும் நம் கட்சியினர், மூத்தவர்கள், அமைச்சர்கள் என்னப் பிரச்னைகளைச் செய்யவிருக்கிறார்களோ என்ற அச்சத்தில்தான் கண்விழிக்கிறேன்!” என்று பொதுக்குழுவில் தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மனமுருகப் பேசியிருந்தார். பொன்முடி, நேரு, ஆ.ராசா, வில்வநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் பேச்சுக்களால் ஏற்பட்டப் பிரச்னையை மையப்படுத்திதான் ஸ்டாலின் அப்படிப் பேசியிருந்தார். இந்தச் சூழலில், 16.10.2022 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘ஆள் கடத்தல் புகாரில் வட்டச் செயலாளர்... எஃப்.ஐ.ஆர் போட மறுக்கிறதா காவல்துறை?’ என்கிற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், நிலப் பிரச்னைக்காக, வடமாநிலத்தைச் சேர்ந்த மார்வாடி ஒருவரைக் கடத்தி, வலுக்கட்டாயமாகக் கையெழுத்துப் பெற்ற, சென்னை தென்மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட, 124-அ வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அவரின் மனைவியும், 124-வது வார்டு கவுன்சிலருமான விமலா உள்ளிட்டச் சிலர் மீது கடத்தலுக்கு ஆளான மார்வாடி அமரராம் ஆன்லைனில் புகாரளித்தார்.


அதன்பேரில், மெரினா காவல்துறைக்கு புகார் அனுப்பட்டது. புகார் கொடுத்ததற்கு அத்தாட்சியான சி.எஸ்.ஆர் பெறுவதற்கே கிட்டத்தட்ட மூன்று நாள்களுக்கு மேலாகிவிட்டது. செப்டம்பர் 16-ம் தேதி கடத்தல் சம்பவம் நடைபெற்றது. 3 வாரங்கள் தாண்டியும் எஃப்.ஐ.ஆர் போடப்படாததால், நாம் ஜூ.வி-யில் செய்தி வெளியிட்டோம். அக்டோபர் 12-ம் தேதி, கடந்த புதன்கிழமை இதழ் வெளியானது. ‘வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மீது ‘பிரமாஃபேஸி எவிடன்ஸ்’ அதாவது, குற்றம் புரிந்ததற்கான அடிப்படைக் காரணங்கள் இருப்பதாக மெரினா காவல் நிலைய ஆய்வாளர் பாலசுப்ரமணியன் நம்மிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 14-ம் தேதி சனிக்கிழமை அன்று, தி.மு.க வட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் விமலா, செந்தமிழ், மனோகரன் மற்றும் 10 அடையாளம் தெரியாத நபர்கள்மீது, மெரினா காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதவிசெய்திருக்கிறது.

கடத்தப்பட்ட அமரராமின் அண்ணன் மகன் பூண்டராம் நம்மிடம், “ஒரு மாதம் கழித்து இப்போதுதான் எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள். இத்தனை நாள்கள் ஆனதால், நீதிமன்றம் மூலம் டைரக்ஷன் வாங்கலாம் என்பதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தோம். வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதைத் தெரிந்துகொண்டுதான், இப்போது எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரை உடனடியாகக் கைதுசெய்தாக வேண்டும். ஆனால், அதற்கு இன்னும் எத்தனை நாள்கள் இழுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. எனினும், நியாயத்தின் பக்கம் நின்று செய்தி வெளியிட்டதற்கு நன்றி!” என்றார்.
நம்மிடம் பேசிய மயிலாப்பூர் தி.மு.க-வினர், ``மெரினா காவல் நிலையத்தில், கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப் பதியப்படாமல் இருந்தது. அமரராம் தரப்பு நீதிமன்றம் சென்றதும் வேறு வழியின்றி எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுவிட்டது. எனினும், கிருஷ்ணமூர்த்தியைக் கைதுசெய்யவிடாமல், சிலர் காப்பாற்றி வருகிறார்கள். இதன் பின்னணியில் மயிலை வேலு இருப்பதாகவும் பேசிக் கொள்கிறார்கள்" என்றனர்.

இது தொடர்பாக மயிலை வேலுவிடம் பேசியபோது, “நான் அந்த விஷயத்தை ஃபாலோ செய்யவில்லை, அதனால் எஃப்.ஐ.ஆர் போட்டது எனக்குத் தெரியாது. தொகுதிக்குள் எது நடந்தாலும் என்னைத்தான் சொல்கிறார்கள். அதுவும் எங்கள் கட்சிக்குள் இருப்பவர்கள்தான் சொல்கிறார்கள். உட்கட்சித் தேர்தல் வந்ததல்லவா, அதில் பொறுப்புக் கிடைக்காதவர்கள் அப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் காவல்துறை விஷயங்களில் எப்போதுமே தலையிடுவதில்லை. கிருஷ்ணமூர்த்தியைக் காப்பாற்ற வேண்டிய அவசியமும் எனக்கில்லை. இது காவல்துறைக்கும், உளவுத்துறைக்கும் தெரியும். என்னைப் பற்றி தலைமைக்கு நன்றாகத் தெரியும். புகாரில் உண்மையிருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுங்கள் என்றுதான் நான் சொல்லிவருகிறேன்” என்று முடித்தார்.