புதுக்கோட்டை மாவட்டம், ஆவணந்தாங்கோட்டையில் வசித்துவருபவர்கள் லோகநாதன்-கோமதி. இந்தத் தம்பதியின் மகன்கள் சூர்யா (15), விஜய் (14). ஓடி, ஆடி விளையாடிக்கொண்டிருக்க வேண்டிய சிறுவர்கள் இருவரும், தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். இந்த நோயை குணப்படுத்த முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்ட நிலையில், மகன்கள் உயிரோடு இருக்கப்போகும் மிகக்குறுகிய காலத்தை மகிழ்ச்சியுடன் கடத்த வேண்டும் என்று பெற்றோர் இருவரும், அவர்கள் அருகிலிருந்து கவனித்துவந்தனர்.
இவர்களின் நிலைமையை அறிந்த நாம், வறுமையுடன் இவர்கள் படும் சிரமத்தை கடந்த நவம்பர் 27-ம் தேதி ஜூனியர் விகடன் இதழில், "வீல்சேர் தான் வாழ்க்கை! - தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள்... மகன்களுக்காக மருகும் தாய்!" என்ற தலைப்பில் விவரித்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். அரசின் கவனத்தை ஈர்த்த இந்தக் கட்டுரையால், சிறுவர்களின் குடும்பத்துக்குத் தேவையான பல உதவிகள் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் தலைமையில், மக்களைத் தேடி மருத்துவம் குழுவினர் சிறுவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று பரிசோதனை செய்ததுடன், பிசியோதெரபி சிகிச்சையும் அளித்திருக்கின்றனர்.
தொடர்ந்து, பிசியோதெரபி சிகிச்சை கொடுப்பதாகவும் உறுதியளித்திருக்கின்றனர். அதோடு, அரசு மருத்துவக் கல்லூரியில் நோயின் தன்மை குறித்து ஆலோசனை மற்றும் சிகிச்சை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றனர். வீல் சேர் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நேரடியாக வந்த அதிகாரிகள் ஏற்கெனவே கிடைக்கும் உதவிகளுடன் மேலும் தேவையான உதவிகளைச் செய்துகொடுப்பதாக உறுதியளித்திருக்கின்றனர். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அந்தக் குடும்பத்தினருடன் பேசியதுடன், சிறுவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாக பெற்றோரிடம் உறுதியளித்திருக்கிறார்.
சமூக ஆர்வலர்கள் சிலர் காய்கறி, மளிகைப் பொருள்கள் கொடுத்திருக்கின்றனர். அதோடு, ``எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து கரம் கொடுக்கிறோம்" எனக் கூறி விகடன் வாசகர்கள் நம் அலுவலகத்தைத் தொடர்புகொண்டிருக்கின்றனர்.

அடுத்தடுத்த உதவிகளால் நெகிழ்ந்துபோயிருக்கும் லோகநாதன்- கோமதியிடம் பேசினோம். "பிள்ளைகளின் நோயை குணப்படுத்த முடியாதுனு தெரிஞ்சதும், மனசுக்குள்ள தோணுனதெல்லாம், இருக்கறவரைக்கும் அவங்களை சந்தோஷமாவெச்சுக்கிடனுங்கிறது மட்டும்தான்.
ரெண்டு பேருக்கும் நிறைய சொந்த பந்தம் இருந்தாலும், பெருசா எந்த உதவியும் செய்யலை. ஆனா, இன்னைக்கு முகம் தெரியாதவங்க பலரும் போனில் பேசி எனக்கு ஆறுதல் சொல்றாங்க. சிலர், நேரடியாக வந்து உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்றோம்னு சொல்லிவிட்டுப் போறாங்க. அரசு அதிகாரிங்க தினமும் வந்து விசாரிக்கிறாங்க. டாக்டர், நர்ஸுங்க பிசியோதெரபி கொடுத்துட்டுப் போயிருக்காங்க. இப்படியெல்லாம் நடக்கும்னு நாங்க நெனச்சே பார்க்கலை. எங்க கஷ்டத்தை வெளியே கொண்டுவந்த ஜூனியர் விகடனையும், உதவி செய்யறவங்களையும் என்னைக்கும் நாங்க மறக்க மாட்டோம். இன்னும் சந்தோஷமா பிள்ளைகளை பார்த்துக்கணும்கிற உத்வேகத்தை உதவி செஞ்சவங்க கொடுத்திருக்காங்க" என்றனர் நெகிழ்ச்சியுடன்.