அலசல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

அருள்வாக்கு இன்ஸ்பெக்டர்... அலறும் அதிகாரிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சப் டிவிஷனில் முருகப்பெருமான் பெயரைக்கொண்ட இன்ஸ்பெக்டர் ஒருவர் ‘சாமியாடாத’ குறையாக ஸ்டேஷனையே ஆட்டுவிக்கிறார். அதனால், இவரை, ‘பூசாரி இன்ஸ்பெக்டர்’ என்றே ஏரியாவில் அழைக்கிறார்கள். பழுத்த ஆன்மிகவாதியான இவர், காவல் நிலையத்துக்குப் புகார் கொடுக்க வருபவர்களை சாமி படங்களுக்கு முன் சூடம் ஏற்றச் சொல்லி சத்தியம் வாங்குகிறார். திடீரென்று அருள் வந்ததுபோல சிலிர்த்துக்கொண்டு, அருள்வாக்கு கூறுகிறார். இப்படித்தான் சமீபத்தில் ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போனவரை மீட்கக் கோரி அவரின் குடும்பத்தினர் புகார் கொடுக்க வந்தபோது, அருள் வந்ததுபோல ஆடியவர்... ‘‘அவன் செத்திருக்க மாட்டான். என் கண்ணுக்குத் தெரியறான். உயிரோடுதான் இருக்கான். சாமியைக் கும்பிடு. இந்தா... இந்த எலுமிச்சம்பழத்தை தலையைச் சுத்தி தூக்கி எறிஞ்சுடு. தானா வீடு வந்து சேர்வான்...” என்று அருள்வாக்கு கூறி அனுப்பியிருக்கிறார். ஆனால், அவரை மீட்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தநிலையில், காணாமல் போனவரின் உடல் சில தினங்களுக்குப் பிறகு சடலமாகத்தான் மீட்கப்பட்டது. இவர் செய்யும் பூசாரி வேலைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நான்கு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இடமாறுதல் கேட்டு ஓடிவிட்டார்கள் என்பது கூடுதல் தகவல்!

ஜூனியர் வாக்கி டாக்கி

“சோடா இங்கே... சரக்கு எங்கே?” - மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் அட்ராசிட்டி...


‘பெரிய பெரிய’ கோயில்கள் இருக்கும் மாவட்டத்தின் மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவர், டாஸ்மாக் கடை இருக்கும் ஏரியாக்களில் பெட்டிக்கடைகளுக்குச் சென்று, சோடா கேட்கிறார். சோடா கொடுத்தால், “மிக்ஸிங்குக்கு சரக்கு எங்கடா?” என்று எகிறுகிறாராம். அதாவது, ‘டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலுள்ள பெட்டிக்கடைகளில் மது விற்க வேண்டும்’ என்று கடை உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பது தான் இவரது நோக்கமாம். கடை உரிமையாளர்கள் மறுத்தால், ‘‘நீங்க வித்தாலும் விக்கலைன்னாலும் எனக்கு மாமூல் வந்துடணும்’’ என்று கூறி, கறாராக மாதமொரு தொகையை வசூல் செய்துவிடுகிறார். ‘‘தப்பு செய்யுறவங்ககிட்ட மாமூல் வாங்குற போலீஸைப் பார்த்திருக்கோம்... இவர் தப்பு செய்யவெச்சு மாமூல் வாங்குறாரே...’’ என்று புலம்புகிறார்கள் கடை உரிமையாளர்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

“வாங்குற காசுக்கு மேல கூவுறாரே!”


கோவை மாநகர உளவுத்துறையில் பணிபுரியும் எஸ்.ஐ ஒருவர், அறிவிக்கப்படாத அ.தி.மு.க பகுதிச் செயலாளராகவே வலம்வருகிறார். ‘இது பல இடங்கள்ல இருக்குறதுதானே?’ என்று கேட்டால், ‘இருக்கிறதுதான்... ஆனா, இவரு வாங்குற காசுக்கு மேலேயே கூவுறாரு...’ என்கிறார்கள் அப்பகுதியினர். எஸ்.ஐ-யின் தந்தை அ.தி.மு.க-வில் இருக்கிறார். அந்த வகையில் சிபாரிசு அடிப்படையில்தான் எஸ்.ஐ-க்குப் பணி கிடைத்ததாகச் சொல்கிறார்கள். அந்த விசுவாசத்தால் அ.தி.மு.க நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அந்த எஸ்.ஐ., தி.மு.க நிகழ்ச்சிகள் என்றால் மட்டும் ‘எடக்கு மடக்காக’ நோட் போட்டு ஐ.எஸ் ஏ.சி-க்கு ரிப்போர்ட் அனுப்பி, குடைச்சலைக் கொடுக்கிறாராம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

ஒரு கிலோ தங்கம்... பம்மும் லஞ்ச ஒழிப்புத்துறை!ஈரோடு டவுன் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டான வேல்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் சிக்கி சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார். இந்த விவகாரத்தை விசாரிக்கச் சென்றால், ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் அமைச்சர்கள் வரை தொடர்பு நீள்கிறது. வேல்குமார் லஞ்சமாக வாங்கிய பணத்தில் அபார்ட்மென்ட், தங்கம், நிலம் எனச் சொத்துகளாக வாங்கிக் குவித்திருப்பதைக் கண்டு ரெய்டுக்குப் போன அதிகாரிகளே மிரண்டுபோயிருக்கிறார்கள். உயரதிகாரிகள் சிலருடன் தனக்கிருந்த செல்வாக்கை வைத்துக்கொண்டு மேலதிகாரிகளையே அதிகாரம் செய்வது, லாட்டரித் தொழிலில் பங்குதாரராக இருந்து சிட்டிக்குள் லாட்டரியைப் புழங்கவிட்டது... என சர்வ பலத்துடன் உலாவந்த வேல்குமாருக்கு எதிராக லோக்கல் போலீஸாரே ஸ்கெட்ச் போட்டு, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் சொல்லி காலிசெய்திருக்கிறார்கள்.

ரெய்டுக்கு சில நாள்களுக்கு முன்பு ஈரோட்டிலுள்ள நகைக்கடை ஒன்றில் வேல்குமார் ஒரு கிலோ தங்கத்தை வாங்கியிருக்கிறார். அந்த சிசிடிவி காட்சிகளைவைத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குடைந்திருக்கிறார்கள். விசாரணையில், ஈரோட்டில் பணிபுரிந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவருக்கும் வேல்குமாருக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது தெரியவந்திருக்கிறது. அந்த ஐ.பி.எஸ் அதிகாரிக்காகத்தான் அந்த ஒரு கிலோ தங்கம் வாங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு மேல் அந்த விசாரணைப் படலத்தை லஞ்ச ஒழித்துத்துறை அதிகாரிகள் தொடரவில்லையாம். ‘அந்த ஐ.பி.எஸ் அதிகாரிக்கு அமைச்சர்கள் இருவரின் ஆசி இருப்பதால், விவகாரம் இனி விஸ்வரூபம் எடுக்காது’ என்கிறார்கள் காக்கிகள்!