அரசியல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

சட்டமன்றத் தேர்தலையொட்டி, சென்னையிலிருந்து டெல்டா மாவட்டத்துக்கு மாற்றப்பட்ட ஐ.ஜி அந்தஸ்தில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி மீண்டும் மன்மத சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ஏற்கெனவே திருநங்கை ஒருவர் இவரது பெயரைக் கையில் பச்சை குத்திய விவகாரம் காவல்துறையைக் கலங்கடித்தது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள ஜிம்முக்குச் சென்றபோது ஒரெழுத்து பெயர்கொண்ட மாடர்ன் இளம்பெண்ணின் அழகில் மயங்கியவர், அவரிடம் ‘ஐஸ்க்ரீம்’ கணக்காக உருகியிருக்கிறார்.

ஜூனியர் வாக்கி டாக்கி

இந்தப் பழக்கம், படுநெருக்கமாக வளரவே, டெல்டாவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டாலும் அதிகாரியின் வாகனம் அடிக்கடி கிளம்பி கிழக்கு கடற்கரை சாலைக்கு வந்துவிடுகிறதாம். இதையடுத்து, பல லட்சங்கள் செலவு செய்து அந்தப் பெண்ணுக்கு மயிலாப்பூரில் ஃபிட்னெஸ் சென்டர் வைத்துக் கொடுத்திருக்கிறார் அதிகாரி. இந்தநிலையில்தான், சமீபத்தில் அந்த ஃபிட்னெஸ் சென்டரில் போலீஸார் ரெய்டுக்கு நுழைந்தபோது, சம்பந்தப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியிடம் ரெய்டுக்குச் சென்ற அதிகாரிக்கு அழைப்பு வந்திருக்கிறது. இதையடுத்து, போலீஸார் அமைதியாக வெளியேறி யிருக்கிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

“பாதிக்குப் பாதி...” நீலகிரி காக்கிகள் டீல்!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர், தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு காரில் கட்டுக்கட்டாகப் பணம்வைத்து, பட்டுவாடா செய்திருக்கிறார். அதை மோப்பம் பிடித்த தி.மு.க-வினர் காரை மடக்கிப்பிடித்து, காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தி.மு.க-வினரை அனுப்பிவிட்டு, காரை ஓரமாக நகர்த்திக்கொண்டு போய் ‘பாதிக்குப் பாதி பங்கிட்டுக்கொள்ளலாம். தேர்தல் கமிஷனிடம் சென்றால் மொத்தப் பணமும் அம்பேல்’ என்று டீல் பேசியிருக்கிறார்கள். டீல் ஓகே ஆனதையடுத்து, கரன்சியைக் கறந்துவிட்டு, வேட்பாளரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இது குறித்து தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க-வினர் புகார் கூறியதையடுத்து, விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. இதில், ‘காருக்குள் பணம் எதுவும் இல்லை... வேட்பாளரின் கைச்செலவுக்காக 2,000 ரூபாய் மட்டுமே இருந்தது’ என்று முழுப்பூசணிக்காயை கரன்சியில் மறைத்திருக்கிறார்கள் போலீஸார்!

ஜூனியர் வாக்கி டாக்கி

டிரான்ஸ்ஃபருக்கே கேன்சல்!

ஈரோடு தனிப்பிரிவில் உயரதிகாரியாகப் பணியாற்றிய பிரகாசமானவர், கரன்சிக்கு ஏற்ப ரிப்போர்ட்டை மாற்றிக் கொடுப்பதில் கில்லாடியாம். இவரது தவறான அறிக்கை காரணமாக பல்வேறு உண்மைத் தகவல்கள் எஸ்.பி அலுவலகத்தில் மூடி மறைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் பிரகாசமான அதிகாரி 20 நாள்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப் பட்டிருக்கிறார். ஆனால், இடமாற்றம் செய்யப்பட்ட ஊருக்குச் செல்லாமல், ஈரோட்டிலிருந்தபடியே ‘ஒரு வாரத்தில் ஆர்டரை கேன்சல் செய்யவைக்கிறேன்’ என்று சக அதிகாரிகளிடம் ‘சத்தியம்’ செய்யாத குறையாக சவால்விட்டிருக்கிறார். சொன்னதுபோலவே ஒரு வாரத்தில் இடமாற்ற உத்தரவும் ரத்தாகிவிடவே, மீண்டும் செல்வாக்குடன் அந்த அதிகாரி தனிப்பிரிவில் வலம்வருகிறார். முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவரின் நெருக்கம்தான், பிரகாசமானவரின் செல்வாக்குக்குக் காரணம் என்கிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

கேரியரில் மட்டன் சுக்கா... கவனிப்பு பக்கா!

வெயில் மாவட்டத்தில் மணல் கொள்ளை தங்கு தடையின்றி நடக்கிறது. அமைச்சரின் உதவியாளர் ஒருவர்தான் மணல் மாஃபியாக்களின் தலைவனாகச் செயல்படுகிறார். இவரது ஆசியுடன், மணல் மாஃபியாக்களுக்குச் சகல வசதிகளையும் செய்து கொடுப்பது பழைய வில்லன் நடிகரின் பெயரைக்கொண்ட டி.எஸ்.பி ஒருவர்தான். இவரது வீட்டிலிருந்து பெரிய அடுக்கு டிபன் கேரியர் நிறைய வாரம் இரு நாள்கள் இளம் ஆட்டுக்கறிக் குழம்பு, மட்டன் சுக்கா, ஆட்டுக்கால் பாயா, ரத்தப் பொரியலுடன் அதே கேரியரின் ஒரு டிபன் பாக்ஸில் சுடச்சுட கரன்சியும் சப்ளையாகிறது. இதைச் சப்புக்கொட்டி சாப்பிடும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள், அமைச்சரின் உதவியாளர் மற்றும் டி.எஸ்.பி இருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்குத் தயக்கம் காட்டிவருகிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

காவல்துறை கழிவறையில் சாதி!

சென்னையில் பிரபல சிவன் கோயில் அமைந்திருக்கும் நகரில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கழிவறை படுமோசமாக இருந்திருக்கிறது. அதனால், இன்ஸ்பெக்டரின் கழிவறையைப் பெண் காவலர் ஒருவர் பயன்படுத்தியிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர், சம்பந்தப்பட்ட பெண் காவலரைக் கூப்பிட்டு, கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்திருக்கிறார். சாதி குறித்தும் வார்த்தை தடித்து வரவே... கோபமடைந்த பெண் காவலர், “கழிவறையைப் பயன்படுத்தக்கூட சாதி பார்க்கிறீர்களே?” என்று இன்ஸ்பெக்டரிடம் கேட்டிருக்கிறார். இதில் கடுப்பான இன்ஸ்பெக்டர் தனது மேலிட செல்வாக்கைப் பயன்படுத்தி, பெண் காவலரை இடமாற்றம் செய்துவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றியபோது, அதே துறையின் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், பாலியல் புகாரை மற்றோர் உயரதிகாரி மீது கொடுத்தார். தற்போதும் கிடப்பிலிருக்கும் அந்த வழக்கில் இந்த இன்ஸ்பெக்டர்தான் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்குச் சாட்சியமாக இருக்கிறார். அந்தக் கருணையால், இவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறாராம் பெண் உயரதிகாரி!