
- 'இன்ஃபார்மர்’ பரத்
‘‘ஸ்ட்ராபெரியால் டிராஜிடி!’’
எந்த ஏரியாவுக்கு டூட்டிக்குப் போனாலும், கையில் பை இல்லாமல் போகமாட்டார் காமெடி நடிகர் பெயரைக்கொண்ட குன்னூர் டவுன் போலீஸ்காரர் ஒருவர். வாகன சோதனை என்ற பெயரில் ஊட்டி வர்க்கி முதல் கேரட் வரை கண்ணில் பட்டதையெல்லாம் பையில் அள்ளிப்போட்டு நிரப்பிக்கொண்டுதான் வீடு திரும்புவார்.
குன்னூரில் ஸ்ட்ராபெரி விவசாயம் செய்யும் இளைஞர் ஒருவர், ஊரடங்கு காரணமாக விற்பனையாகாத ஸ்ட்ராபெரிகளை பைக்கில் ஏற்றி விற்பனை செய்யக் கிளப்பியுள்ளார். வாகனச் சோதனை என்ற பெயரில் அந்த விவசாயிடமும் தனது கைவரிசையைக் காட்டிய போலீஸ்காரர், ஓசியில் ஸ்ட்ராபெரி பாக்கெட்டுகளைக் கைப்பற்றி யுள்ளார். ஏற்கெனவே விரக்தியிலிருந்த அந்த இளைஞர், போகிறபோக்கில் பலரின் காதுகளிலும் இந்த விஷயத்தைப் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். இந்த விஷயம் நீலகிரி எஸ்.பி பாண்டியராஜனின் காதுகளைச் சென்றடைய, அந்த போலீஸ்காரரை ஆயுதப்படைக்குத் தூக்கியடித்துள்ளார். ‘‘தேவையா இந்த மானங்கெட்ட பொழப்பு?’’ என சகக் காக்கிகளே கிண்டலடிக்க... ஸ்ட்ராபெரி விவசாயியைத் தேடிச்சென்ற போலீஸ்காரர் அவரிடம் கெஞ்சிக் கதறி, ‘பணம் கொடுத்துதான் போலீஸ்காரர் ஸ்ட்ராபெரி வாங்கினார்’ என்று எழுதிவாங்கி அதை மேலிடத்தில் கொடுத்து, மீண்டும் பழைய இடத்துக்கே சென்றுவிட்டார்.

நோ கேஸ்... ஒன்லி கேஷ்!
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், மதுப்பிரியர்கள் ஆந்திராவுக்குப் படையெடுத்தவண்ணம் இருக்கிறார்கள். சைக்கிள்களிலும் நடைப்பயணமாகவும் சென்று ஆந்திர எல்லைகளிலிருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கிவருகிறார்கள். அவர்களைக் கண்காணித்து மடக்கிப் பிடிக்கும் எல்லையோரக் காவல்நிலைய போலீஸார், கேஸ் எதுவும் போடாமல் மது பாட்டில்களை மட்டும் பறிமுதல் செய்துவிட்டு அனுப்பிவிடுகிறார்கள். பின்னர், ‘ஒரு பெட்டி ஆந்திரா சரக்கு 5,500 ரூபாய்’ என்று மொத்த விலைக்குக் கள்ளசந்தைப் பேர்வழிகளிடம் விற்பனை செய்துவிடுகிறார்கள். இன்னொருபுறம், இதையெல்லாம் உளவறிந்து மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்ப வேண்டிய போலீஸ்காரர் ஒருவரும், கள்ளச்சந்தைப் பேர்வழிகளிடம் கறாராகக் கட்டிங்கைக் கேட்டுப் பெற்றுவிடுகிறாராம்!
‘‘இப்பவும் அண்ணன்தான் எம்.எல்.ஏ!’’
தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும், ‘கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் முழுவதுமுள்ள அ.தி.மு.க விசுவாசக் காக்கிகள் களையெடுக்கப்படுவார்கள்’ என்று ஒரு செய்தி காவல்துறை வட்டாரத்தில் வேக வேகமாகப் பரவியது. இதனால், அ.தி.மு.க விசுவாசக் காக்கிகள் தூக்கம் கெட்டுப்போயிருந்தார்கள். கொரோனாப் பரவல் காரணமாக, இப்போது உயரதிகாரிகளை மட்டுமே மாற்றியுள்ளார்கள். கீழ்மட்ட அளவில் இடமாற்றங்கள் ஏதுமில்லை. அதனால், ஊர்ப் பெயரை அடைமொழியாகக்கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சரின் வலதுகரமாக இருந்த இன்ஸ்பெக்டருக்கு செம குஷியாம். ‘‘இப்பவும் இங்க அண்ணன்தான் எம்.எல்.ஏ... நாங்கதான் எல்லாம்’’ என்று சொன்னபடி, வழக்கம்போல வசூல் வேட்டையில் தூள்கிளப்பி வருகிறாராம்!

‘‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!’’
சென்னை கமிஷனர் அலுவலகத்திலிருந்து பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் இடமாறுதல் செய்யப்பட்டு, அந்தப் பதவிக்கு இன்னொரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது பணியமர்த்தப்பட்டிருப்பவர், ஏற்கெனவே அதே பதவியில் இருந்தவர்தான். ஃபைல்களை பைசல் செய்வதில் வல்லவரான அவர், சில காரணங்களுக்காக இடமாறுதல் செய்யப்பட்டார். மீண்டும் அவரே நியமிக்கப்பட்டிருப்பதால், கமிஷனர் அலுவலகக் காக்கிகள் சிலர் குஷியாகவும் சிலர் அப்செட்டாகவும் இருக்கிறார்கள். குஷியிலிருக்கும் காக்கிகள் இடமாறுதல் உத்தரவைப் பார்த்ததும் போன் போட்டு வாழ்த்து கூறியிருக்கிறார்கள். அப்போது அவர், ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என கெத்தாக டயலாக் பேசினாராம்!
‘‘தேவை கடுமையான நடவடிக்கை!’’
லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குநராக இருந்த ஐ.ஜி முருகன்மீது அதே துறையில் பணியாற்றிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் பாலியல் அத்துமீறல் புகார் கொடுத்தது மூன்றாண்டுகளுக்கு முந்தைய பரபரப்புச் செய்தி. அப்போதைய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனிடம் ஆதாரங்களுடன் அளிக்கப்பட்ட புகார் தொடர்பான விவரங்கள் வெளியானபோது, தமிழகக் காவல்துறையே கிடுகிடுத்துப்போனது. ஆனாலும், அவர்மீது அன்று முதல் இன்று வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தென்மண்டல ஐ.ஜி., சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ‘போலீஸ் நவீனமாக்குதல்’ பிரிவின் ஐ.ஜி என்று முக்கிய பதவிகளிலேயே நியமிக்கப்பட்டார். இப்போது அவரை ஈரோட்டு சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி-யாக தி.மு.க அரசு நியமித்திருக்கும் நிலையில், ‘‘இப்போதாவது அவரை டம்மி பதவிக்கு மாற்றினார்களே...’’ என்று நிம்மதிப் பெருமூச்சுவிடும் மகளிர் அமைப்புகள், ‘‘இது போதாது... அவர்மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.