அலசல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

மாயமாகும் மது பாட்டில்கள்!

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து, கர்நாடகாவிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்கு கக்கநள்ளா வழியாக லோடு லாரிகளில் மூட்டை மூட்டையாக வெளிமாநில மது வகைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. கக்கநள்ளா சோதனைச்சாவடி காக்கிகள், அவ்வப்போது பறிமுதல் செய்த மது வகைகளை மசினகுடி காவல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கிறார்கள். அப்படி அனுப்பிவைக்கப்படும் மது பாட்டில்கள் மசினகுடி காவல்நிலையத்திலிருந்து மாயமாவதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கணக்கு காண்பிக்கப் பட்டதற்கும், கையிருப்பில் இருந்ததற்கும் ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்க, ‘‘என்ன பண்ணுவீங்களோ தெரியாது... என்னோட அடுத்த விசிட்ல பறிமுதல் செஞ்ச அத்தனை பாட்டில்களும் கணக்குல வரணும்’’ என்று கடுகடுத்துள்ளார் நீலகிரி எஸ்.பி. சரக்குக் கணக்கு, பிணக்கானதில் கையைப் பிசைந்துகொண்டிருக்கிறார்கள் மசினகுடி காக்கிகள்!

உயரதிகாரிகளின் சாதிப்பாசம்!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு முக்கியமான பகுதியில், இறந்துபோன ஒருவரின் 16-ம் நாள் காரியத்துக்காகச் சாலையை அடைத்து, டேபிள் சேர்கள் போடப்பட்டு தடபுடலாகக் கறி விருந்து நடந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கை மீறி நடத்தப்பட்ட இந்த விருந்தில், அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இது குறித்து காவல்துறைக்குப் புகார் தெரிவிக்கப்பட, உடனடியாக இரண்டு காவலர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள். கூடவே, மீடியாக்காரர்கள் சிலரும் சென்றிருக்கிறார்கள். கறி விருந்து நடத்தியவர்கள், இரண்டு காவலர்களையும் சிறைப்பிடித்ததுடன், வாக்கி டாக்கி மற்றும் செல்போன்களையும் பறித்துக்கொண்டிருக்கிறார்கள். மீடியாக்காரர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்த, ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என எஸ்கேப் ஆகி, அந்தப் பகுதியின் டி.எஸ்.பி-க்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார்கள். ‘கடுமையான நடவடிக்கை இருக்கும். குறைந்தபட்சம் 10 நபர்களையாவது கைதுசெய்வார்கள்’ என எதிர்பார்த்த மீடியாக்காரர்களுக்குப் பெருந்த ஏமாற்றம். கறி விருந்து நடத்தியவர்களிடம் மிகவும் கூலாகச் சமாதானம் பேசிய டி.எஸ்.பி., சிறைப்பிடிக்கப்பட்ட அந்த இரண்டு காவலர்களையும் மீட்டு வந்திருக்கிறார். ஒருவர் மீதுகூட வழக்கு பதிவுசெய்யப்படவில்லை. என்னதான் காரணம் என நாம் விசாரித்தபோது, காவல் உயரதிகாரிகளின் சாதிப்பாசம்தான் என்று காக்கிகளே கண்சிமிட்டுகிறார்கள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

``லாரியை எடுத்துக்கோ, கம்ப்யூட்டர் வாங்கிக் கொடு!’’

புதுக்கோட்டை மாவட்டத்திலிருக்கும் முத்தான டி.எஸ்.பி ஒருவர், வசூல் வேட்டைக்கென்று தனி டெக்னிக் வைத்திருக்கிறாராம். திருட்டுத்தனமாக மணல் அள்ளிச் சிக்கும் லாரிகளைப் பிடிப்பவர், அதை விடுவிக்கப் பணமாக லஞ்சம் வாங்க மாட்டாராம். ‘‘ரொம்ப நாளா ஆபீஸ்ல இருக்குற கம்ப்யூட்டர் வேலை செய்யலை. அதை வாங்கிக் கொடுங்க போதும்’’ என்று சொல்லி அனுப்பிவிடுவாராம். அவர்களும் “அடடா, எவ்வளவு நல்ல மனுஷன்... ஆபீஸ் மேல எவ்வளவு அக்கறை... தப்பு பண்ணாலும் சரியா பண்றாரு...’’ என நெகிழ்ந்துபோவார்களாம். அப்படி இதுவரைக்கும் 10-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை வாங்கியிருக்கிறாராம். ஆனா, கதையில ட்விஸ்ட் என்னன்னா... அந்த கம்ப்யூட்டர் ஆபீஸுக்கு வந்த அடுத்த நாளே விற்பனைக்குப் போய், அந்த அமௌண்ட் அவரது அக்கவுன்ட்டுக்குப் போய்விடுமாம். இப்படித் தன்னிடம் சிக்குபவர்களிடம், பலே ‘நேர்மையாக’ தகிடுதத்தம் செய்துகொண்டிருக்கிறார் டி.எஸ்.பி.

‘பாதுகாப்பான நெல்லை’ இப்போது இல்லை!

முந்தைய அரசு செயல்படுத்திய திட்டங்களைக் கிடப்பில் போடுவது என்பது அரசியல் கட்சிகளுக்கு வாடிக்கை. தாங்களும் அதற்குக் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நெல்லை மாநகரக் காவல்துறை நிரூபித்திருக்கிறது. பள்ளி மாணவர்கள் முதல் முதியோர் வரை அனைத்துத் தரப்பினரையும் பாதுகாக்கும் வகையில் ‘வேர்களைத் தேடி’, ‘மக்களை நோக்கி மாநகரக் காவல்’, ‘நமது நெல்லை பாதுகாப்பான நெல்லை’, ‘மதிப்புமிகு மாணவன்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நெல்லை மாநகரக் காவல்துறையால் செயல்படுத்தப்பட்டுவந்தன. இந்தத் திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தக் காரணமாக இருந்த துணை ஆணையர் சரவணன் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். அதோடு அனைத்துத் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. இந்தத் திட்டங்கள் கைவிடப்பட்டதால், கூடுதல் பணிச்சுமையிலிருந்து விடுபட்டதாக போலீஸார் நிம்மதிப் பெருமூச்சுவிட்டபோதிலும், பொதுமக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

சூதாட்டத்தில் கோலோச்சும் கேடி!

வேலூர் மாநகரத்தில், காக்கிகளின் துணையோடு சட்டவிரோதமாகச் சூதாட்டம் நடைபெறுவதாகப் புலம்புகிறார்கள் பொதுமக்கள். அதிலும், ஆர்.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த கேடி சேட்டு என்பவரின் தலைமையில் மட்டும் 15 இடங்களில் லாட்டரி விற்பனை, காட்டன் சூதாட்டம் கொடிகட்டிப் பறக்கின்றனவாம். கேடி சேட்டு மீது ஏற்கெனவே ரௌடியிசம், கட்டப்பஞ்சாயத்து எனப் பல்வேறு புகார்கள் உள்ளன. வழக்கு விசாரணைக்கு அடிக்கடி சென்றுவந்ததில், போலீஸாருடன் அவருக்கு ‘நல்ல’ நட்பு ஏற்பட்டுவிட்டது. இதனால், டோல்கேட் பகுதியில் கிளப் நடத்தும் அளவுக்குச் சூதாட்டத்தில் கோலோச்சுகிறார் கேடி சேட்டு. தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தைச் சேர்ந்த காமெடி நடிகரின் பெயரைக்கொண்ட ஏட்டு ஒருவரின் மூலம், மேல்மட்ட அதிகாரி ஒருவருக்கு கேடி சேட்டு மாதந்தோறும் கப்பம் கட்டிவருவதால், அவரை யாரும் கண்டுகொள்வதில்லையாம்.