அலசல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

எஸ்.பி ஆபீஸுக்கே போன் அடித்த சாராயக் கும்பல்!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள சாத்கர் மலை, தமிழக-ஆந்திர மாநில எல்லையில் அமைந்திருப்பதால், இங்கு சாராயக் கும்பல் தனி ராஜ்யமே நடத்திவருகிறது. பேரணாம்பட்டு காவலர் ஒருவர், தனக்கு வேண்டப்பட்ட சாராயக் கும்பலுடன் கைகோத்துக்கொண்டு, வேறு சில சாராயக் கும்பலுக்குக் குடைச்சல் கொடுத்திருக்கிறார். இதனால், கடுப்படைந்த அவர்கள், வேலூர் எஸ்.பி அலுவலகத்துக்கு போன் செய்து காவலரைப் பற்றி போட்டுக் கொடுத்துவிட்டார்கள். இதையடுத்து, அந்தக் காவலர் ஆயுதப்படைக்குத் தூக்கியடிக்கப்பட்டார். அதன் பிறகு நடந்ததுதான் ட்விஸ்ட்... தனக்கு வேண்டப்பட்ட சாராயக் கும்பலைவைத்து அதே எஸ்.பி அலுவலகத்தில் சிலரை ‘வெயிட்டாக’ சரிக்கட்டியிருக்கிறார் காவலர். இதையடுத்து, மீண்டும் பேரணாம்பட்டு காவல் நிலையத்துக்கே அவரை அமர்த்தியிருக்கிறார்கள். இப்போது ‘என்னை எவனும் அசைச்சுக்க முடியாது!’ என்று சவால்விட்டுவருகிறாராம் அந்தக் காவலர்!

‘‘நுண்ணறிவுப் பிரிவில் இவரா?’’

திருச்சி நுண்ணறிவுப் பிரிவில் முக்கிய அதிகாரியாகப் பொறுப்பேற்றிருக்கும் முருகப்பெருமான் பெயரைக்கொண்டவரைப் பார்த்து, ‘இவரை எப்படி இந்தப் பதவிக்கு நியமித்தார்கள்?’ என்று மாநகர காக்கி வட்டாரத்தினர் ஆச்சர்யத்துடன் பேசிக்கொள்கிறார்கள். கடந்த 2007-ல் இவர் திருச்சி மாவட்டத்தில் பணியிலிருந்தபோது, ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியை மாற்றி வழக்கு பதிவுசெய்து சர்ச்சைக்குள்ளானவர். இந்த விவகாரம் உயரதிகாரிகளுக்குச் சென்றதும், ‘பசையாக’ கவனித்து விவகாரத்தை அமுக்கியதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. அதேபோல், 2012-ல் கடலூர் மாவட்டத்தில் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றியபோது, ரேஷன் அரிசிக் கடத்தல் கும்பலுடன் தொடர்பிலிருந்த காரணத்துக்காக அவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட பின்புலத்தைக்கொண்டவர்தான், தற்போது மூத்த அமைச்சர் ஒருவர் மூலமாக மாநகர் நுண்ணறிவுப் பிரிவுக்கு வந்திருக்கிறார் என்று அங்கலாய்க்கிறார்கள் காக்கிகள்!

காம்பவுண்ட் சுவர் பெயரில் பலே வசூல்!

தஞ்சாவூர் மாவட்டத்தில், நீர்நிலை பெயரைக்கொண்ட காவல் நிலையத்தில் வசந்தமான பெண் ஆய்வாளர் பணியாற்றிவருகிறார். சில வாரங்களுக்கு முன்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வணிகர்கள் பலரையும் இவர் தனித்தனியாகச் சந்தித்திருக்கிறார். ‘‘உங்களுக்கெல்லாம் பாதுகாப்பு கொடுக்குற போலீஸ் ஸ்டேஷனுக்கு காம்பவுண்ட் சுவர் இல்லாததால, பாதுகாப்பு இல்லாம போச்சு. நீங்களெல்லாம் பணம் கொடுத்து உதவினா காம்பவுண்ட் சுவர் அமைச்சுடலாம்’’ என்று சொன்னாராம். ‘‘ஆஹா... அதிகாரிக்குத்தான் ஸ்டேஷன் மேல என்னவொரு அக்கறை’’ என்று வணிகர்களும் 20,000 தொடங்கி 50,000 ரூபாய் வரை நன்கொடை கொடுத்திருக்கிறார்கள். இப்படி வசூல் செய்த தொகையைக்கொண்டு சிம்பிளாக காம்பவுண்ட் சுவரும் அமைத்துவிட்டார் அதிகாரி. சமீபத்தில் வணிகர்கள் தங்களுக்குள் ஒன்றுகூடிப் பேசியபோதுதான், ஒருவருக்குத் தெரியாமல் மற்றவரிடம் அதிக பணம் வசூலித்து லட்சக்கணக்கில் அந்த அதிகாரி சுருட்டிவிட்டது தெரிந்து நொந்துபோயிருக்கிறார்கள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘ஆமா... இங்கேதான் நடந்தது!’’

புழல் மத்தியச் சிறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் பொன்னான கிளைச் சிறையில் லஞ்சப் புகார்கள் வரிசைகட்டுகின்றன. கைதிகளைச் சந்திக்க வரும் உறவினர்களிடம், காவலர்கள் 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டே உள்ளே அனுமதிக்கிறார்களாம். தப்பித் தவறி கையில் காசில்லாமல் கைதிகளைச் சந்திக்கச் சென்றுவிட்டால், அவர்களை அலைக்கழித்து விரட்டிவிடுகிறார்கள். சமீபத்தில் சிறையிலுள்ள தன் உறவினரைப் பார்க்கச் சென்ற பெண் ஒருவரிடம் கறார் காக்கிகள் 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள். அவ்வளவு பணம் இல்லாததால், 500 ரூபாய் கொடுத்துவிட்டு வந்த அந்தப் பெண், காவலர்களின் பண வேட்டை குறித்து புலம்பித் தள்ளி, வீடியோவாக வெளியிட்டுவிட்டார். சிவன் பெயர்கொண்ட உயரதிகாரி ஒருவரின் தலைமையில்தான் இந்த வசூல் வேட்டை நடைபெறுகிறது என்கிறார்கள். வீடியோ பற்றி சிவன் அதிகாரியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டால், `ஆமாம்... இங்கேதான் நடந்தது... ஆனா, நான் பதில் சொல்லத் தேவையில்லை’ என்று மிரட்டல் தொனியில் பதில் சொல்கிறார்.

எம்.எல்.ஏ-க்கள் வீட்டில் தவம்!

மயிலாடுதுறை சப் டிவிஷனுக்குள் வரும் சில காவல் நிலையங்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட எல்லையிலும், மணல் கொள்ளை நடைபெறும் கொள்ளிடம் ஆற்றங்கரையோரத்திலும் அமைந்திருக்கின்றன. இந்த இடங்களில் மதுபான கடத்தல் மற்றும் மணல் கடத்தல் மாஃபியாக்கள் மூலம் மாதந்தோறும் பல லகரங்கள் மாமூல் மழை கொட்டுவது வழக்கம். கடந்த சட்டமன்றத் தேர்தல் காரணமாக, இந்தக் காவல் நிலையங்களில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். ஆனால், மாமூல் ருசிகண்ட அந்த இன்ஸ்பெக்டர்கள் மீண்டும் அதே காவல் நிலையங்களில் பணிபுரிவதற்காக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் வீட்டில் தவம்கிடக்கிறார்களாம். இவர்கள் இப்படியென்றால், தற்போது மாமூல் மழையில் கொழிக்கும் அந்த ஸ்டேஷன்களின் சிட்டிங் இன்ஸ்பெக்டர்கள் தங்களை இடமாற்றம் செய்துவிட வேண்டாம் என்று அதே எம்.எல்.ஏ-க்களை கரன்சி மாலையுடன் சுற்றிச் சுற்றி வருகிறார்களாம்.