
‘இன்ஃபார்மர்’ பரத்
“பாதியில விட்டுட்டுப் போக முடியுமா?
தஞ்சாவூர் மாவட்டத்தில், பெரிய ஊரணியின் பெயர் கொண்ட காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த ‘மன்னர்’ அதிகாரி கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் கும்பல்களிடம் மாமூல் வாங்கியதால், பனிஷ்மென்ட் டூட்டியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். பிறகு நாகை மாவட்டத்துக்குப் பணிக்குச் சென்றவர், தற்போது, ஏற்கெனவே தான் பணிபுரிந்த பழைய காவல் நிலையத்துக்கு அருகிலுள்ள ஸ்டேஷனுக்கே மீண்டும் வந்துவிட்டார். சக போலீஸாரிடம் அவர், ``ஏரியாவுல ஏகப்பட்ட பிசினஸ் பண்றேன்ப்பா... பாதியில விட்டுட்டுப் போக முடியுமா? கவனிக்க வேண்டிய இடத்துல கவனிச்சேன். பக்கத்து ஸ்டேஷனுக்கு வந்துட்டேன்” என்றாராம் கூலாக!

‘‘போலீஸாரும் குற்றவாளிகள்தானே?’’ - எகிறும் ஹெலிகாப்டர் பிரதர்ஸ்...
கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் 600 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், 6 கோடி ரூபாய் லஞ்சப் பணம் போலீஸாருக்குக் கைமாறியதாக சர்ச்சை எழுந்து, இரண்டு போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். ஹெலிகாப்டர் சகோதரர்களை நான்கு நாள்கள் கஸ்டடி எடுத்து போலீஸார் விசாரித்தபோது, ‘‘நாங்கள் குற்றவாளிகள் என்றால், எங்களிடம் லஞ்சம் வாங்கிய போலீஸாரும் குற்றவாளிகள்தானே... அவர்களையும் கைதுசெய்ய வேண்டும” என்று எகிறியிருக்கிறார்கள். இது லஞ்சம் வாங்கிய அதிகாரிகளுக்கு ஏகத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதாம். ‘இந்தப் பிரச்னையிலிருந்து எப்படி வெளியே வருவது?’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்ட டிரான்ஸ்ஃபர் அதிகாரிகள் இருவரும், சகோதரர்களைச் சமாதானம் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள். இருவரில் ஒருவர் கும்பகோணத்திலேயே முகாமிட்டு அதற்கான பணிகளில் ஜரூர் காட்டிவருகிறாராம்.
வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் - வாட்ஸ்அப்பில் கசிந்த எஃப்.ஐ.ஆர்!
தமிழகம் முழுவதும் கடந்த 2015 முதல் 2019 வரை வாக்கி டாக்கி, சிசிடிவி கேமரா, போலீஸ் துறைக்கான ரேடியோ ஆகியவற்றைக் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றன. இது தொடர்பாக காவல் தொழில்நுட்பப் பிரிவில் எஸ்.பி-யாக இருந்த அன்புச்செழியன் உட்பட 14 பேர் மற்றும் டெண்டர் எடுத்த இரண்டு தனியார் நிறுவனங்கள்மீது 2020, பிப்ரவரி மாதம் வழக்கு பதிவுசெய்தது லஞ்ச ஒழிப்புத்துறை. வழக்கமாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கைகள் அந்தத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்படும். ஆனால், மேற்கண்ட முதல் தகவல் அறிக்கையை மட்டும் இணையத்தில் வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தார்கள். இந்தநிலையில்தான், தற்போது இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடையிலான ஈகோ காரணமாக இந்த முதல் தகவல் அறிக்கையை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சிலர் கசியவிட்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில், மத்திய மண்டல அதிகாரி ஒருவர் சிக்குவார் என்று எதிர்பார்க்கிறது அவருக்கு எதிரான காக்கி டீம்.
காக்கிகளை வெளுக்கும் ஏ.எஸ்.பி!
வேலூர் நகரின் சத்துவாச்சாரி காவல் நிலையம், சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாதது. தற்போது பணியிலுள்ள காவலர்கள் மீதும் பல்வேறு புகார்கள் பறக்க... ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜான் கடுப்பாகியிருக்கிறார். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் தினசரி காலையில் ‘ரோல் கால்’ நடக்கும். அதில் அனைவரையும் ஒருங்கிணைத்து, யாருக்கு என்னென்ன பணி என்று பிரித்துக் கொடுப்பது இன்ஸ்பெக்டரின் வேலை. அது குறித்து ஏ.எஸ்.பி-க்கும் வாக்கி டாக்கியில் தகவல் தெரிவித்து, வாட்ஸ்அப்பிலும் போட்டோவைப் பகிர வேண்டும். இதை சத்துவாச்சாரி போலீஸார் ஒழுங்காகச் செய்யவில்லையாம். இதனால், வாக்கி டாக்கியிலேயே அனைவரும் கேட்கும்படி காக்கிகளை வறுத்தெடுத்திருக்கிறார். அத்துடன், இனிமேல் தினமும் காலையில் தனது அலுவலகத்தில் ஆஜராகிவிட்டுத்தான் பணிக்குச் செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். இதையெல்லாம் கேட்டு மாநகரின் மொத்த காவல்துறையினரும் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்.

மதுவிலக்கு போலீஸாரா... மது விற்கும் போலீஸாரா?
புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், மொரட்டாண்டி டோல்கேட்டில் இருக்கும் மதுவிலக்கு தடுப்பு போலீஸார், மது விற்கும் போலீஸாராக மாறிவிட்டார்களாம். தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிலர், மது பாட்டில்களை வாங்கிச் செல்வது வழக்கம். அப்படி வாங்கிச் செல்பவர்களை டோல்கேட்டில் வழிமறித்து மது பாட்டில்களைப் பறிமுதல் செய்பவர்கள், காஸ்ட்லி மதுபானங்களைக் குடித்துத் தீர்த்துவிடுவதுடன், மது பாட்டில்களில் ஒருபகுதியை மட்டும் நீதிமன்றத்தில் கணக்கில் காட்டிவிட்டு, மீதியை புதுச்சேரியிலும் தமிழகத்திலும் பிளாக்கில் விற்றுவிடுகிறார்களாம். இவர்களிடம் மது வாங்குவதற்கென்றே ரெகுலர் கஸ்டமர்கள் இருப்பதால், தடையின்றி ஓடுகிறது பிசினஸ்!
“நாங்க இருக்கும்போதே பெருந்தனமா?”
புதுக்கோட்டையில் முதற்கடவுளின் பெயர்கொண்ட காவல் நிலையத்தில் தன் மகளைக் காணவில்லை என்று பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் அந்தப் பெண்ணையும், அவரின் காதலனையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்திருக்கின்றனர். இரு வீட்டாருடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது, பெண்ணின் சித்தப்பா கோபத்தில் அந்தப் பெண்ணை அறைந்துவிட்டார். இதைப் பார்த்த எஸ்.ஐ அழகிரிராஜா உள்ளிட்ட போலீஸார், “நாங்க இருக்கும்போதே பெருந்தனமா?” என்று பெண்ணின் சித்தப்பாவை அறைக்குள் அழைத்துச் சென்று லாடம் கட்டிவிட்டனர். கடைசியில், ‘மேஜரான பெண்ணை அடிக்கக் கூடாது’ என்று அன்பாக அறிவுரை சொல்லி, ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்துள்ளனர். அடி வாங்கியதோடு, பாக்கெட்டில் வைத்திருந்த 10,000 ரூபாய் காணாமல் போய்விட்டதாகப் புலம்புகிறாராம் சம்பந்தப்பட்டவர்.