அரசியல்
அலசல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

‘இன்ஃபார்மர்’ பரத்

குத்துவிளக்கு ஊரில் மீண்டும் சர்ச்சை அதிகாரி!

தஞ்சை மாவட்டத்தில், குத்துவிளக்குக்குப் பெயர்பெற்ற ஊரிலிருக்கும் காவல் நிலைய அதிகாரியாக, பழைய நடிகை பெயர்கொண்டவரே மீண்டும் பணியமர்த்தப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. ஓராண்டுக்கு முன்பு இவர் இந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, ‘மணல் கடத்தல்காரர்கள், கள்ளத்தனமாக மதுபானம் விற்பவர்கள் என்று சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் கட்டிங் வாங்கிக்கொண்டு, அவர்கள் என்ன செய்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை’ என்ற குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில், ‘ஒரு புகாரை அலட்சியமாகக் கையாண்டதன் காரணமாக, கொலை நடக்கக் காரணமாகிவிட்டார்’ என்று இவர்மீது குற்றச்சாட்டு எழ... சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்னர் பக்கத்து மாவட்ட காவல் நிலையம் ஒன்றில் பணியமர்த்தப்பட்டார். இருப்பினும், மாமூல் கொட்டும் குத்துவிளக்கு ஸ்டேஷன் மீது அவருக்கு ஒரு கண் இருந்திருக்கிறது. தற்போது, மாவட்ட காவல்துறையில் இடமாற்றப் பட்டியல் தயாராக, ஏரியா ஆளுங்கட்சிப் புள்ளி ஒருவரைப் பிடித்து மீண்டும் பழைய இடத்துக்கே வந்துவிட்டார்.

தலைநகர ஏட்டுவின் விசுவாச சேவைகள்!

அரசியல் தலைவர் பெயரைக்கொண்ட தலைநகர காவல் நிலையத்துக்கு, சமீபத்தில் திருப்பதி கடவுள் பெயரைக்கொண்ட ஏட்டு ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இடமாறுதலின் பின்னணியைக் கேட்டால் தலை கிறுகிறுக்கிறது. சென்னையில் மசாஜ் சென்டர்களுக்குப் புகழ்பெற்ற ‘வள’மான காவல் நிலையம் ஒன்றில்தான் அந்த ஏட்டு மூன்றாண்டுகளாகப் பணியாற்றிவந்தார். காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஏட்டுவின் மனைவியும் மசாஜ் சென்டர் நடத்திவருகிறார். அதனால், மசாஜ் சென்டர் மாமூல் டீலிங்குகள் முழுவதையும் கவனித்துவந்தவர், அனைவருக்கும் சமமாகப் பங்கு பிரித்துத் தந்துவிடுவாராம். அத்துடன் சினிமா உதவி இயக்குநராக இருக்கும் தன் நண்பர் ஒருவர் மூலம் பலான விஷயங்களிலும் ஈடுபட்டுவந்தவர், அவற்றை உயரதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்க, தொழிலில் உள்ளவர்களை வைத்தே அவர்களை கவனித்துவந்திருக்கிறார். இந்த நிலையில்தான், அவருடன் பணியாற்றிய பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கினார். ஏட்டுவின் விசுவாச சேவைகளின் காரணமாகவே, நடவடிக்கைகளிலிருந்து அவரைக் காப்பாற்றி, இடமாற்றம் செய்ததுடன் விவகாரத்தை முடித்துவைத்துவிட்டார்களாம் அதிகாரிகள்!

‘‘உன் வீட்டுக்காரர்கிட்ட சொல்லி வை!’’ - எஸ்.ஐ-யை இடம் மாற்றிய இன்ஸ்பெக்டர்...

புதுக்கோட்டை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றும் ‘கலை’யம்சம் பொருந்திய இன்ஸ்பெக்டர், சக போலீஸாருக்குக் கொடுக்கும் டார்ச்சர் எல்லை மீறிக்கொண்டிருக்கிறதாம். சில மாதங்களுக்கு முன்பு, குடும்ப நிகழ்ச்சிக்காகப் பெண் காவலர் ஒருவர் விடுமுறை கேட்டுக் கடிதம் கொடுக்க, அவரின் கண் முன்பே கடிதத்தைக் கிழித்து வீசியெறிந்தாராம். காவல் நிலைய எஸ்.ஐ ஒருவரின் கணவர், அரசியல் கட்சி ஒன்றின் நிர்வாகியாக இருக்கிறார். அவர் அடிக்கடி போலீஸாருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதால், ‘உன் வீட்டுக்காரர்கிட்ட சொல்லி வை’ என்று அந்த எஸ்.ஐ-யை இன்ஸ்பெக்டர் எச்சரித்திருக்கிறார். இருப்பினும் போராட்டங்கள் தொடர, எஸ்.ஐ-க்கு டார்ச்சர் தொடர்ந்திருக்கிறது. அதனால், மன உளைச்சலுக்கு ஆளான எஸ்.ஐ., ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டு மெடிக்கல் லீவில் இருந்திருக்கிறார். சந்தர்ப்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், மெடிக்கல் லீவில் இருக்கும்போதே உயரதிகாரிகளின் ஆதரவோடு எஸ்.ஐ-யை ரிலீவ் செய்யவைத்து, தூரத்திலுள்ள ஸ்டேஷனுக்கு மாற்றியிருக்கிறார். பல்வேறு புகார்கள் இன்ஸ்பெக்டர் மீது சென்றும், உயரதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், கெத்தாகச் சுற்றிக்கொண்டிருக்கிறாராம் இன்ஸ்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘‘தினுசு தினுசா கிளம்புறாங்களே...’’ - பெட்ரோல் திருடர்களால் புலம்பும் போலீஸ்!

ராக்கெட் வேகத்தில் எகிறிவரும் பெட்ரோல் விலை குறித்த கவலையில் இருக்கிறார்கள் மக்கள். ஆனால், அவர்களின் பைக்கிலிருக்கும் கொஞ்ச நஞ்ச பெட்ரோலையும் சத்தமில்லாமல் அபேஸ் செய்துவிட்டுப்போகிறது ஊட்டியிலுள்ள ஒரு கும்பல். சமீபகாலமாகவே, ‘பார்க்கிங்கில் நிறுத்திவிட்டுச் செல்லும் பைக்கில் பெட்ரோலைக் காணவில்லை’ என்று ஊட்டியிலிருக்கும் காவல் நிலையங்களுக்குப் புகார்கள் வருவது தொடர்கதையாகியிருக்கிறது. ‘இருக்குற பிரச்னையில இது வேறயா?’ என்று சலித்துக்கொண்ட ஊட்டி காக்கிகள், புகார் கொடுக்க வந்தவர்களைக் கண்டுகொள்ளாமல் திருப்பியனுப்பியிருக்கிறார்கள். ‘பெட்ரோல் திருட்டு எகிடுதகிடாக அதிகரிக்கவும், எஸ்.பி அலுவலகம் வரை புகார்கள் சென்றிருக்கின்றன. இதையடுத்து, ‘பெட்ரோல் திருட்டுக்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று நகரின் முக்கிய ஸ்டேஷனிலிருக்கும் காக்கிகளை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார்கள் உயரதிகாரிகள். இந்தப் புதுத் திருட்டுக் கும்பல் குறித்த எந்தத் துப்பும் கிடைக்காமல் விழிபிதுங்கிக் கிடக்கிறார்கள் ஊட்டி‌ காக்கிகள்.

‘‘என்னை இங்கிருந்து மாத்திடுங்க!’’ - தூக்கமில்லாத காவலர்கள்...

தலைநகரில் உளவு சொல்லும் பிரிவில் பணியாற்றும் உயரதிகாரி ஒருவர், விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டாராம். இன்னோர் உயரதிகாரியும் ‘அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை. அதனால், இங்கிருந்து வேறு இடத்துக்கு என்னை மாற்றிவிடுங்கள்’ என்று மேலதிகாரிகளிடம் கூறிவருகிறாராம். அந்த அளவுக்கு இந்தத் துறையில் வேலைப்பளு அதிகம் என்கிறார்கள் அங்கு பணியாற்றும் போலீஸார். இதற்கெல்லாம் காரணம் கேட்டால், இவர்தான் என்று மேலிட அதிகாரி ஒருவரைக் கை காட்டுகிறார்கள். ‘எந்தச் சிறு புகார் வந்தாலும், அது பற்றிய முழுமையான தகவல்கள் விரிவாக அதுவும் உடனடியாக வேண்டும்’ என்று கேட்கிறாராம். அதோடு, நேரங்காலம் பார்க்காமல் இரவு 10 மணியைத் தாண்டியும் அவர் அலுவலகத்திலேயே இருப்பதால், அவருக்குக் கீழ் பணியாற்றுபவர்களும் வீட்டுக்குச் செல்ல முடிவதில்லையாம். தூங்கிப் பல நாள்கள் ஆகின்றன என்கிறார்கள் பாவமாக.