அலசல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- ‘இன்ஃபார்மர்’ பரத்

பாசமான அமைச்சரிடம் பவ்யம்... சாதித்துக் காட்டிய இன்ஸ்பெக்டர்!

திருச்சி மாவட்டத்தின் மங்கலமான காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் தங்கையின் கணவர் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். கடந்த ஆட்சியில் இதே மாவட்டத்தில் வேறொரு காவல் நிலையத்தில் பணியாற்றியவர், அமைச்சர்களின் நெருக்கத்தால் சகல வசதிகளுடன் வலம்வந்தார். அப்போது வெளிமாநில கும்பல் ஒன்று கொள்ளையடித்த விவகாரத்தில் எழுந்த சர்ச்சையில், இவர் வெளிமாவட்டத்துக்குத் தூக்கியடிக்கப்பட்டார். டிரான்ஸ்ஃபரில் கிளம்பும்போதே, ‘திரும்பவும் திருச்சிக்கு வந்துகாட்டுகிறேன் பார்’ என்று சவால்விட்டிருக்கிறார். சொன்னபடியே தற்போது மீண்டும் திருச்சிக்கு வந்திருக்கிறார். “பாசமான அமைச்சரிடம் பவ்யம் காட்டியே காரியத்தைச் சாதித்துக்கொண்டார் இன்ஸ்பெக்டர்” என்று முணுமுணுக்கிறார்கள் சக காக்கிகள்!

காவல்துறையே வேண்டாம்... தெறித்து ஓடும் நெல்லை காக்கிகள்!


நெல்லை மாநகரத்தில் நிறைய காவலர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், பணிச்சுமையால் காவலர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். போதாததற்கு உயரதிகாரிகள் டார்ச்சரால் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக மூன்று போலீஸார் ஆடியோ வெளியிட்டும் பரபரப்பைக் கிளப்பினார்கள். இந்த நிலையில்தான், நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த பத்து மாதங்களில் ஒரு இன்ஸ்பெக்டர், 24 எஸ்.எஸ்.ஐ-கள் உட்பட 30 பேர் விருப்ப ஓய்வுபெற்று, ‘காவல்துறையே வேண்டாம்’ என்று ஓடிவிட்டார்கள். இன்னும் சிலர் விருப்ப ஓய்வு கேட்டுக் காத்திருக்கிறார்கள்!

மொய் விருந்துக்கு வசூல் வேட்டை!

தஞ்சை மாவட்டத்திலிருக்கும் ‘நீர்நிலை’ காவல் நிலைய எஸ்.ஐ-யின் ஆட்டம் தாங்க முடியவில்லையாம். அவரது ஏரியாவில் மொய் விருந்து வைபவம் மிகவும் பிரபலம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக மொய் விருந்து நடத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ‘‘மொய் விருந்து நடத்துறவங்க தாராளமா நடத்திக்கோங்க’’ என்று ஆஃப் தி ரிக்கார்டாக அனுமதி கொடுத்திக்கும் எஸ்.ஐ., ஒரு மொய் விருந்துக்கு 40,000 ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறார். கடந்த சில மாதங்களில் மட்டுமே இவர் வசூலித்த தொகையைக் கண்டு சக காவலர்களே, “மொய் விருந்து வசூலைவிட இவரோட வசூல் அதிகம்!” என்று மிரண்டுபோயிருக்கிறார்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

தலைநகரம் வரைக்கும் செல்வாக்கு... மீண்டும் வந்த வசூல் இன்ஸ்பெக்டர்!

கோவை மாவட்டத்தில் கருமையான காவல் நிலையத்தில் ராஜாவாக வலம்வந்த இன்ஸ்பெக்டர், வழக்கு விவரங்களை உயரதிகாரிகளிடம் மறைத்துவந்தார் என்று புகார் எழுந்தது. தொடர்ந்து அவர் வசூல், கமிஷன், கட்டப்பஞ்சாயத்து என கொடிகட்டிப் பறப்பதாக எழுந்த புகாரில், ஒரு மாதத்துக்கு முன்பு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அப்போதே அவர், “என்னைப் பத்தி தெரியாம தூக்கியடிக்குறாங்க... ஒரே மாசத்துல வந்து காட்டுறேன் பாருங்க!” என்று சொல்லிவிட்டே கிளம்பினார். இப்போதும் சொன்னதுபோலவே ஒரு மாதத்தில் அதே காவல் நிலையத்துக்கு ஆய்வாளராக வந்து அமர்ந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் உயரதிகாரிகள். விசாரித்தால், “இன்ஸ்பெக்டருக்கு தலைநகரம் வரைக்கும் செல்வாக்கு இருக்கு!” என்று விழிவிரிக்கிறார்கள் சக காக்கிகள்!

மாயமான கஞ்சா! - மாட்டிக்கொண்ட ரைட்டர்...

விசாகப்பட்டினத்திலிருந்து திருச்செந்தூருக்குக் கடத்திவரப்பட்ட 110 கிலோ கஞ்சாவை கடந்த ஜூலை மாதம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீஸார் பறிமுதல் செய்து, நான்கு பேரைக் கைதுசெய்தனர். இந்த நிலையில்தான், கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தக் கஞ்சாவில் 18 கிலோ மட்டும் காணாமல்போயிருக்கிறது. ஸ்டேஷனிலிருந்து கஞ்சா காணாமல்போனது எப்படி என்று இன்ஸ்பெக்டர் முதல் ஏ.எஸ்.பி வரை விசாரணை நடத்தியிருக்கிறார்கள். இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை... அதே ஸ்டேஷனின் ரைட்டர், ஒன்பது கிலோ கஞ்சாவை மட்டும் கொண்டுவந்து ஒப்படைத்திருக்கிறார். மீதமுள்ள ஒன்பது கிலோ கஞ்சாவை ஒப்படைக்க அந்த ரைட்டருக்கு விடுமுறையுடன் அவகாசமும் அளிக்கப்பட்டிருக்கிறது!

வேட்டைக்குச் சென்ற நீலகிரி போலீஸ்! - கைதுசெய்த கேரள வனத்துறை...

சமீபத்தில் கேரள வனத்துக்குள் வேட்டையாட வந்ததாகச் சொல்லி நீலகிரி மாவட்டம், எருமாடு காவல் நிலையக் காவலரான சிஜூ என்பவரை கேரள வனத்துறையினர் கைதுசெய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, நீலகிரிக்கு வந்த கேரள வனத்துறையினர், தேயிலைத் தோட்டம் ஒன்றில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நாட்டுத்துப்பாக்கியைக் கைப்பற்றி, மற்றொரு துப்பாக்கியைத் தேடிவருகிறார்கள். “எங்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் எப்படி நீலகிரிக்குள் வந்து துப்பாக்கியைக் கைப்பற்றலாம்?” என்று நீலகிரி காக்கிகள் கேள்வி எழுப்ப... கேரள வனத்துறையினரோ, “அவரைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் செய்யும் முயற்சிகளையெல்லாம் உங்கள் மேலதிகாரிகளிடம் சொல்லிவிட்டோம்” என்று வாயடைக்கவைத்திருக்கிறார்கள்!