அரசியல்
அலசல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- இன்ஃபார்மர் பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

பெட்டிஷனும் துப்பாக்கியும்!

‘பெட்டிஷன் மன்னன்’ எனப் பெயரெடுத்த தமிழ்க் கடவுளின் ஆயுதத்தைப் பெயராகக்கொண்ட அந்த இன்ஸை, ஐ.ஜி-க்கு எதிராக பெட்டிஷன் அடித்த விவகாரத்தில் ஜில் மாவட்டத்துக்குத் தூக்கியடித்திருக்கிறார்களாம். அடிக்கடி ‘மூட்அவுட்’டாகி லீவு போடும் இவர், துப்பாக்கியை ஸ்டேஷனில் ஒப்படைக்காமல் விடுப்பு நாள்களிலும் கையில் வைத்துக்கொண்டே சுற்றிக்கொண்டிருந்தாராம். இதை மோப்பம் பிடித்த உளவுத்துறை, மேலிடத்தில் போட்டுக்கொடுத்துவிட, உஷாரான காக்கி, யாருக்கும் தெரியாமல் ஸ்டேஷனுக்கு வந்து நைசாகத் துப்பாக்கியை வைத்துவிட்டு ஓடிவிட்டாராம். இதில் வேடிக்கை என்னவென்றால், போட்டுக்கொடுத்த உளவுத்துறை மீதே இப்போது பெட்டிஷன் அடித்துவிட்டு, பல மாதங்களுக்கு லீவு போட்டிருக்கிறாராம் ஐயா!

ஜூனியர் வாக்கி டாக்கி

பறிமுதலும் பதுக்கலும்!

உப்பு மாவட்டத்திலுள்ள கடலைமிட்டாய் நகரத்தில், ரேஷன் அரிசிக் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதேசமயம், அங்குள்ள ஒரு காவல் நிலையத்தின் ஆய்வாளர், ரேஷன் அரிசிக் கடத்தலைப் பிடித்து ‘ஃபுட் செல்’ அதிகாரிகளிடம் ஒப்படைப்பதில் ‘கிங்’ என்கிறார்கள். அவர் இதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதற்குக் காரணமும் சொல்கிறார்கள். சோதனையில் பிடிபடும் அரிசியின் அளவில் பாதியை இவர் நடத்திவரும் மாட்டுப்பண்ணைக்கு அனுப்பிவிடுகிறாராம். மீதிதான் ஃபுட் செல் அதிகாரிகளுக்குக் கணக்கு காட்டப்படுகிறதாம். இவருக்கு உதவிவரும் அதிகாரிகளையும் ‘கவனித்து’விடுவதால் பறிமுதலும் பதுக்கலும் அமோகமாக நடக்கின்றனவாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

போலீஸா... புரோக்கரா?

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகக் கட்டுப்பாட்டிலிருக்கும் அந்தக் காவல் நிலையம், எப்போதும் இல்லாத ‘புது’மையாக, மாலை நேரங்களில் ரியல் எஸ்டேட் அலுவலகமாக மாறிவிடுகிறதாம். ஏனெனில், அங்கு சில மாதங்களுக்கு முன்பு இடமாறுதலில் வந்த லீலை கடவுளின் பெயரைக்கொண்ட இன்ஸ்பெக்டர் ஒருவர், ரியல் எஸ்டேட் புரோக்கர்களைக் காவல் நிலையத்துக்கே வரவழைத்து பிசினஸ் பேசிவருகிறாராம். இவர் இதற்கு முன்பு பணியாற்றிய காவல் நிலையங்களிலும் இதே வேலையைத்தான் செய்துவந்தாராம். பசையுள்ள அந்த இன்ஸ்பெக்டர், ஏற்கெனவே பினாமி பெயர்களில் சொத்துகளை வாங்கிக் குவித்துவைத்திருக்கிறாராம். மேலும், தன்னுடைய உயரதிகாரிகள் என்ன சொன்னாலும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல், கச்சிதமாக வேலையைச் செய்து முடித்துவிடுவாராம். ரியல் எஸ்டேட் பிசினஸில் ஒத்துவராதவர்களை மிரட்ட, புட்அப் கேஸ்களைப் போடுவதிலும் திறமையானவராம் இன்ஸ்பெக்டர்!

ஜூனியர் வாக்கி டாக்கி

வசூல் ராஜாக்கள்!

பக்கத்து மாநில காவல்துறையில், பெண் உயரதிகாரி ஒருவர் பணியிலிருக்கிறார். மாதம் ஒரு முறை காரைக்காலுக்கு வருகை தரும் இவர், சுற்றுலா மாளிகையில் தங்கிக்கொண்டு முக்கிய அரசியல் புள்ளிகளைச் சந்திப்பார். அதன் பிறகு நண்பர்களுடன் விருந்து, கேளிக்கை எனப் பொழுதைப் போக்குவாராம். அதற்குள் அவருடன் வரும் வசூல் ராஜாக்கள் ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் பங்க்குகள், பேக்கரிகள், ஹோட்டல்கள், ‘கடத்தல்’ வியாபாரிகள் என அனைவரிடமும் மாத மாமூலை வசூலித்துவிட்டு வந்துவிடுவார்களாம். மாதம்தோறும் பெரும் தொகையைக் கல்லாகட்ட மட்டுமே இந்த அதிகாரி வருவதால், இந்தத் துறையில் ஊழல் கொடிக்கட்டிப் பறக்கிறதாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

திருடர்களிடமே திருடிய அதிகாரி!

சென்னையை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதியில், 20 சவரன் நகைக் கொள்ளை வழக்கு தொடர்பாக மூன்று பேரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார் நக்கல் இயக்குநர் பெயர்கொண்ட அந்த அதிகாரி. இதில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்ட அதிகாரி, சம்பவ இடத்துக்குத் தனியாகச் சென்று 10 சவரன் தங்க நகைகளை மட்டும் பறிமுதல் செய்திருக்கிறார். பின்னர், குற்றவாளிகள் மூவரிடமும், ‘நகைகளைப் பறிமுதல் செய்த தகவலை யாரிடமும் சொல்லக் கூடாது’ என்று செல்லமாக மிரட்டி அனுப்பினாராம். தற்போது இன்னொரு வழக்கில், அந்த மூன்று பேரும் சிக்கிய பிறகுதான், 10 சவரன் தங்க நகைகளை அபேஸ் செய்த அதிகாரியின் விவரம் காவல்துறை உயரதிகாரிகளுக்குத் தெரியவந்திருக்கிறது. இப்போது அதிகாரியிடம் விசாரணை நடத்த உயரதிகாரிகளின் சிக்னலுக்காகக் காத்திருக்கிறார் உதவி கமிஷனர்!