அலசல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

- இன்ஃபார்மர் பரத்

ஜூனியர் வாக்கி டாக்கி

கண்ணசைவில் கள்ளச்சாராயம்... மிரட்டல் புகாரில் சிக்கிய அதிகாரி!

டெல்டா மாவட்டம் ஒன்றில் ‘வேல்’ கடவுள் பெயர்கொண்ட ஒருவர் எஸ்.எஸ்.ஐ-ஆக இருக்கிறார். சீருடை அணியும் கட்டாயம் இல்லாத சிறப்புப் படையில் சுமார் 12 ஆண்டுக்காலம் பணிபுரிந்துவரும் சாதனைக்குச் சொந்தக்காரர் இவர். இவரின் கண்ணசைவில்தான் அந்தச் சரகத்தில் கள்ளச்சாராயம், குட்கா, கஞ்சா, மணல் கொள்ளை எனச் சட்டவிரோதச் செயல்கள் ஜோராக நடைபெறுகின்றனவாம். சிலரின் ஆதரவோடு கல்லாகட்டும் இவரின் லஞ்ச லாவண்யம் பற்றிக் காவல்துறை தலைமைக்கு ஒருவர் புகார் அனுப்பியிருக்கிறார். இதை அறிந்த ‘வேல்’ அதிகாரி, அந்த நபருக்குக் கொலை மிரட்டல் விடுத்தாராம். தற்போது கொலை மிரட்டல் விவகாரம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘போலீஸா... இல்ல புரோக்கரா?!’

உப்பு விளையும் மாவட்டத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில் முருகப் பெருமானின் பெயர்கொண்டவர் தனிப்பிரிவு ஏட்டாகப் பணிபுரிந்துவருகிறார். இவர் போலீஸ் வேலையைவிட, அந்தக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியின் ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலையில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறாராம். அதே நேரத்தில், நிலம் சம்பந்தமான புகார் வந்தால் மட்டும் ஐயாவுக்குச் சமூக அக்கறை குப்புறப் பாய்கிறதாம். அந்தப் புகாரில் ‘சிறப்பு’ கவனம் செலுத்தி இரு தரப்பில் யார் அதிக ‘ஸ்வீட்’ தருகிறாரோ அந்தத் தரப்புக்கு டீலிங்கைச் சுமுகமாக முடித்துக் கொடுப்பதில் வல்லவர் என்கிறார்கள். ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரைவிட அதிக வசதி வாய்ப்போடு வாழும் இவருக்கு, எஸ்.பி அலுவலகத்திலும் செல்வாக்கு பெருமளவு இருப்பதால் ‘என்னை யாரும் அசைச்சுக்க முடியாது’ என்றபடியே சைட் விசிட் அடிக்கிறாராம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

டி.எஸ்.பி பெயரில் வசூல்... ஓரங்கட்டப்பட்ட எஸ்.எஸ்.ஐ!

‘ஹனி’ மாவட்ட டி.எஸ்.பி அலுவலகத்தில் ரைட்டராகப் பணியாற்றும் எஸ்.எஸ்.ஐ ஒருவரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறதாம். அந்த சப்-டிவிஷனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களிலிருந்து வரும் ரைட்டர்கள், எஸ்.ஐ-க்கள் யாரையும் இவர் மதிப்பதே இல்லையாம். அவர்கள் கொண்டுவரும் வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஃபைல்களை அலட்சியமாகத் தூக்கி எறிகிறாராம். பண்டிகைக் காலங்களில் குவாரி, டாஸ்மாக் பார் உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களிடம் டி.எஸ்.பி பெயரைச் சொல்லி ‘பரிசு’ வேட்டையாடுவாராம். கடந்த தீபாவளிப் பண்டிகையின்போது குவாரி ஒன்றில் தன் பெயரைச் சொல்லி 30 ஆயிரம் ரூபாயை வாங்கிய தகவல் டி.எஸ்.பி-க்குத் தெரியவந்ததாம். இதனால், `அலுவலகத்தில் அவர் எந்த வேலையும் பார்க்க வேண்டாம். ஓர் ஓரமாக சும்மா உக்கார வையுங்கள்’ என்று சொல்லிவிட்டாராம் டி.எஸ்.பி. இதில், அதிருப்தியான எஸ்.எஸ்.ஐ 25 நாள்கள் மெடிக்கல் விடுமுறை எடுத்துக்கொண்டு முக்கியப் பதவிக்காகப் பெரிய பெரிய ஆட்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறாராம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

புகார் கொடுத்த பெண்மணியை ஸ்பெஷல் டீம் போட்டுத் தேடும் இன்ஸ்பெக்டர்!

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றிய லீலைகளின் கடவுள் பெயரைக்கொண்ட இன்ஸ்பெக்டர், முற்பகல் செய்த வினைக்கான பலனை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறாராம். காரணம், அவர் பணியாற்றிய காலகட்டத்தில் பழிவாங்கும் நோக்கத்திலும், பணம் வசூலிக்கவும் சிலபல எஃப்.ஐ.ஆர்-களைப் போட்டுத் தீட்டியிருந்தாராம். அவற்றில் பல பொய் வழக்குகள் என்பதால், அந்த வழக்குகளுக்கான சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாமல் போலீஸார் சிரமப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அவர் பதிவுசெய்த ஒரு வழக்கில், புகார் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்ட பெண்மணியையே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லையாம். ‘அப்படி ஒரு பெண்மணியை’ ஸ்பெஷல் டீம் போட்டு இன்ஸ்பெக்டர் தேடிக்கொண்டிருப்பதாகத் தகவல்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘ஆணினமே உன்னை வணங்குமே?!’

டெல்டா மாவட்டம் ஒன்றில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இசையின் பெயரைக் கொண்ட பெண் இன்ஸ்பெக்டர் பணியிலிருக்கிறார். இவர் பெரும்பாலான வழக்குகளைக் கட்டப்பஞ்சாயத்து மூலமே தீர்த்துவிடுகிறார் என்கிறார்கள். விஜிலன்ஸ் ரெய்டு அடிக்கடி வருவதால், எதற்கு வம்பு என்று ‘போக்கு-வரத்தை’யெல்லாம் வீட்டிலேயே வைத்துக்

கொள்கிறாராம். இதற்கென்றே மன்னர் பெயரைக்கொண்ட ஒருவர் இவருக்கு புரோக்கராக இருப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள். குறுகிய காலத்திலேயே சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கியிருக்கும் அம்மணியின் சாமர்த்தியத்தைப் பார்த்து, ஆண் இன்ஸ்பெக்டர்களே ஆச்சர்யப்படுகிறார்களாம்.