சமூகம்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

சென்னையில் பணிபுரிந்துவரும் அந்த அண்ணன், தம்பி அதிகாரிகளுக்கிடையே ஊழலில் கடும் போட்டி நிலவுகிறது.

ஜூனியர் வாக்கி டாக்கி

மாதம்தோறும் லட்டுகளை உருட்டும் அதிகாரி!

சென்னையில் அரசியல் கட்சித் தலைவரின் பெயரைக்கொண்ட காவல் நிலையத்தில், ‘என் பைக்கைக் காணவில்லை’ என்று ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார். ஸ்டேஷன் அதிகாரியும் காணாமல்போன பைக்கைத் தேடி விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார். காணாமல்போன பைக், அந்தப் பகுதியிலுள்ள அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் நடத்தும் பழைய இரும்புக்கடையில் விற்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, காயலான் கடை அரசியல் புள்ளியையும், பைக் திருடர்களையும் கொத்தாகப் பிடித்துத் தூக்கிய அதிகாரி, ‘யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்...’ என மாதம் சில லட்டுகளை மாமூலாகத் தந்தே ஆக வேண்டும் என டீல் பேசி முடித்துவிட்டாராம். விஷயம் ஷாப்பிங் ஏரியா காவல்துறை அதிகாரியின் கவனத்துக்குப் போக... ‘லோக்கல் அதிகாரியே மாதத்துக்கு இத்தனை லட்டுகளை உருட்டுகிறாரா...’ எனத் தலை கிறுகிறுத்துப்போனாராம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

வசூல் சக்கரவர்த்திகளான அண்ணன் - தம்பி ஆபீஸர்ஸ்!

சென்னையில் பணிபுரிந்துவரும் அந்த அண்ணன், தம்பி அதிகாரிகளுக்கிடையே ஊழலில் கடும் போட்டி நிலவுகிறது. நகைக்கடையில் ஆட்டையைப்போட்ட பிரபல கொள்ளையனிடமிருந்து லட்சக்கணக்கான மதிப்பிலான நகைகளை மாமூலாக வாங்கிய குற்றச்சாட்டில் அண்ணன் அதிகாரிமீது விசாரணை நடத்தப்பட்டது. அண்ணன் பாய்ந்த எட்டடியை ஓவர்டேக் செய்ய நினைத்த தம்பி அதிகாரி, தற்போது பணிபுரிந்துவரும் பெரிய சந்தைப் பகுதியில் முழுநேரக் கட்டப்பஞ்சாயத்தில் களமிறங்கி கல்லாகட்டி வருகிறாராம். யாராலும் அசைக்க முடியாத வசூல் சக்ரவர்த்திகளாக வலம்வரும் இந்த பிரதர்ஸைப் பார்த்து, சக காக்கிகளே வாய் பிளக்கின்றனர்.

ஜூனியர் வாக்கி டாக்கி

‘ஆசிட்’ அதிகாரியும் நில அபகரிப்பு புகாரும்!

தீப மாவட்டத்திலுள்ள மூன்றெழுத்து தாலுகா காவல் நிலைய அதிகாரிமீது ஏற்கெனவே ‘ஆசிட்’ வீசிய வழக்கு ஒன்று நீதிமன்ற நிலுவையில் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வெயில் மாவட்டத்தில் உதவி அதிகாரியாகப் பணிபுரிந்தபோது, சாராயக் கும்பலிடம் மாமூல் வாங்கியிருக்கிறார். இந்த விஷயத்தை இன்ஃபார்மர் ஒருவர் போட்டுக்கொடுத்துவிடவே... ஆத்திரமடைந்தவர், இன்ஃபார்மர் மீது ‘ஆசிட்’ வீசி, உடலை உருக்குலையச் செய்துவிட்டார். இது தொடர்பாக அதிகாரிமீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆனாலும் என்ன... தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மீண்டும் பணிக்குத் திரும்பியவர், உதவி அதிகாரியிலிருந்து அதிகாரியாகப் பதவி உயர்வும் பெற்றார். இப்போது ஐயா, நில அபகரிப்பு குண்டர்களுடன் கைகோத்துக்கொண்டு நில உரிமையாளர்களை மிரட்டுவதாகப் புகார்கள் குவிகின்றன. அவருக்கு மேல் இருக்கும் அதிகாரிகள் எப்போதுதான், என்னதான் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

பிரியாணி கேட்டு கடுப்பான காவல் தெய்வம்!

மாங்கனி மாநகரத்திலுள்ள காவல் நிலையம் ஒன்றில், காவல் தெய்வம் பெயரைக்கொண்டவர் காவல் மூத்த உதவியாளராக இருக்கிறார். சமீபத்தில், ‘தனது மேலதிகாரிகளுக்கு பிரியாணி வாங்கிக்கொடுக்க வேண்டும்’ என்று கடை கடையாக வசூல்வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது ஒரு கடைக்காரர், ‘பணமெல்லாம் கொடுக்க முடியாது... வேண்டுமானால் எவ்வளவு பிரியாணி என்று சொல்லுங்கள். வாங்கித்தருகிறேன்’ என டீல் பேசியிருக்கிறார். கடுப்பான காவல் தெய்வம், ‘நீ இங்கதானே கடை வெச்சுருக்க... எப்படிக் கடையை நடத்துறேனு பாத்துடுறேன்’ என்று மீசையை முறுக்கியவாறே மிரட்டியிருக்கிறார். இந்தத் தகவல், உயரதிகாரிகளின் காதுகளுக்குச் செல்ல... சம்பந்தப்பட்ட காவல் தெய்வமும், வசூல் செய்யச் சொன்ன அதிகாரிகளும் துறைரீதியான விசாரணைக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

லட்டுகளை பூந்தியாக்கிய காக்கிகள்!

‘ஜில்’ மாவட்டத் தலைநகரில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரின் உருவப்படத்தை வைத்து, தம்பிகள் பிறந்தநாள் விழா எடுப்பதாகத் தகவல் தீயாகப் பரவியிருக்கிறது. அவ்வளவுதான்... நிகழ்ச்சியில், தம்பிகளைவிடவும் அதிக எண்ணிக்கையில் காக்கிகளைக் குவித்துவிட்டார்களாம். சுதாரித்துக்கொண்ட தம்பிகள், கட்சிக்கொடியை மட்டும் ஏற்றிவிட்டு, வந்திருந்தவர்களுக்கு லட்டுகளைப் பரிமாறியிருக்கிறார்கள். லட்டு பாக்ஸைக் கண்டதும் எச்சிலூற, காக்கிகள் வந்த வேலையை மறந்துவிட்டு லட்டுக்காக முட்டிமோத... லட்டெல்லாம் பூந்தியாகிப்போயிருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ‘மன்னன்’ பட ரஜினிகாந்த் - கவுண்டமணி காமெடிபோல, வெற்றிக்களிப்போடு நடுரோட்டில் நின்று பூந்தியைச் சுவைத்துக்கொண்டிருந்த காக்கிகளைக் கண்ட பொதுமக்கள் வாய்விட்டுச் சிரித்திருக்கிறார்கள்!