அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

தலைநகரில், பெண்களுக்குப் பிடித்த ஆடையின் பெயரைக்கொண்ட காவல் சரகத்தில் பணியாற்றிவருபவர் தமிழ்க்கடவுள் பெயரைக்கொண்ட ‘உதவி’ அதிகாரி

ஜூனியர் வாக்கி டாக்கி

அதிகாரிகளுக்குக் கொடுக்கணும்...’ - அட்ராசிட்டி செய்யும் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’!

கொங்கு மண்டல மூன்றெழுத்து மாவட்டத்தின் காவிரிக்கரையை ஒட்டியிருக்கும் ‘ஸ்வீட்’ காவல் நிலையம் அது. இங்கு பிளாக் அண்ட் வொயிட் காலத்து பாடகர் பெயரைக்கொண்டவர் தலைமைக்குக் கண்காணியாக இருக்கிறார். காவல்துறை உயரதிகாரி, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ‘மீடியேட்டராக’ இருந்துவரும் இவர், தன் லிமிட்டுக்குள் எங்கு, என்ன பிரச்னை என்றாலும் முந்திக்கொண்டு முதல் ஆளாக ஆஜராகிவிடுகிறாராம். எடுத்ததுமே, ‘அதிகாரிகளுக்குக் கொடுக்கணும்...’ என்று கப்பம் கேட்டுவிட்டே பேச்சை ஆரம்பிக்கும் இவர், சந்துக்கடை, மணல் கொள்ளை, சட்டவிரோத லாட்டரி விற்பனை என எந்தப் பிரச்னை என்றாலும் கட்டப்பஞ்சாயத்து அளவிலேயே முடித்துவைத்து கல்லாகட்டுகிறாராம். போட்டுக்கொடுக்கும் இடத்திலிருப்பவர் என்பதால், இந்த ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வின் சேட்டைகள் குறித்து, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அல்லாடி வருகிறாராம் ஸ்டேஷன் ஆய்வாளர்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘சென்டிமென்ட் டச்... பர்சனல் கேர்...’ - கெட்ட ஆட்டம் போடும் ‘உதவி’ அதிகாரி!

தலைநகரில், பெண்களுக்குப் பிடித்த ஆடையின் பெயரைக்கொண்ட காவல் சரகத்தில் பணியாற்றிவருபவர் தமிழ்க்கடவுள் பெயரைக்கொண்ட ‘உதவி’ அதிகாரி. இவர்மீது பாலியல் புகார்கள் வட்டமடிக்கின்றன. தன்னை நேரில் சந்தித்துப் புகாரளிக்கும் பெண்களிடம், அன்பும் அக்கறையுமாகப் பேசுபவர், தன் பர்சனல் செல்போன் நம்பரையும் கொடுத்து, அவர்களின் நம்பிக்கையை ஸ்ட்ராங் செய்துவிடுகிறாராம். அப்புறமென்ன... புகார் தொடர்பான அப்டேட்டுகளைச் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு உடனுக்குடன் ‘ஜொள்’ளுவதோடு, அவர்களின் ‘நலன், குடும்பப் பின்னணி’ ஆகியவற்றிலும் ‘பர்சனல் கேர்’ எடுத்து அக்கறையாகப் பேசுவாராம். அதிகாரியின் இந்த சென்டிமென்ட் ‘டச்’சில் ஏமாந்து, எதிர்த்தரப்பும் ‘கிரீன் சிக்னல்’ காட்டிவிட்டால் உடனே கெட்ட ஆட்டம் போடக் களத்தில் குதித்துவிடுகிறாராம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

போலீஸ் ஸ்டேஷனுக்கு பில்லி, சூனியம்... வதந்தி கொளுத்திய முன்னாள் இன்ஸ்!

‘சன் ரைஸ்’ மாவட்டத்தின் ‘சிதிலமான பழைய அரண்மனையைக்’ கொண்ட ஊரின் காவல் நிலையத்தில், கடந்த சில மாதங்களாகவே உயரதிகாரி சீட் காலியாக இருந்தது. முன்னர் அங்கு பணியிலிருந்த உயரதிகாரிக்கு வழக்கறிஞர்களுடன் மோதல் வெடித்தது. பிறகு துறைரீதியாகவும், குடும்பத் தரப்பிலும் அடுத்தடுத்து அதிகாரிக்குப் பிரச்னைகள் ஏற்பட்டன. ‘சோதனை மேல் சோதனைகளால் நொந்துபோன உயரதிகாரி, “இந்த ஸ்டேஷனுக்கு யாரோ பில்லி, சூனியம் வைத்துவிட்டார்கள்” எனச் சக காக்கிகளிடம் புலம்பியபடியே இடமாற்றம் வாங்கிக்கொண்டு போனாராம். அவர் கொளுத்திப்போட்ட வதந்தியால் புதிதாக நியமிக்கப்பட்டவரும், ‘இதோ, அதோ’ என சாக்குச் சொல்லி சார்ஜ் எடுக்காமல் இழுத்தடிக்கொண்டே இருந்திருக்கிறார். கடைசியில், வேறு வழியின்றி டூட்டிக்கு வந்தவர், எப்போதும் சீட்டின் நுனியிலேயே ஒட்டிக்கொண்டிருக்கிறாராம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

விரும்பும் ஸ்டேஷனுக்கு போஸ்ட்டிங்... விலைப்பட்டியல் நீட்டும் பணியாளர்!

டெல்டாவில் புதிதாக உருவான மாவட்டத்திலுள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில், ‘காதலை’ பெயராகக்கொண்டவர் அமைச்சுப் பணியாளராக இருக்கிறார். தன் அதிகாரத்தின்கீழ் வரும் காவல்துறையினருக்கு திடீர் திடீரென இடமாறுதல் அறிவித்து அவர்களைத் தவிக்கவிடுவாராம். பிறகு சம்பந்தப்பட்டவர்களை நேரில் வரவழைத்து, அவர்கள் ‘விரும்பும் ஸ்டேஷனுக்கு மாறுதல் போட்டுத் தருகிறேன்’ என்று டீல் பேச ஆரம்பிப்பாராம். இதற்காக, சில்லறை பூந்திகளில் ஆரம்பித்து சிலபல லட்டுகள் வரை விலைப்பட்டியல் வைத்து இவர் வசூலிப்பது குறித்து பாதிக்கப்பட்டோர் தரப்பு மேலிடத்துக்குப் புகார் தட்டியிருக்கிறது. ஆனாலும் ஐயா மீது எந்த நடவடிக்கையும் பாயாததால், ‘காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு’ கெத்தாக நடமாடுகிறாராம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

இது வேறுவிதமான நட்பு... மல்லுக்கட்டும் ‘லீலை’ இன்ஸ்பெக்டர்!

குறள் மாவட்டத்தைச் சேர்ந்த கமிஷனர் அலுவலக லிமிட்டில் பணியாற்றிவருபவர், லீலை கடவுளின் பெயர்கொண்ட ஆய்வாளர். இவர் பணி மாறிச் செல்லும் இடங்களுக்கெல்லாம் ‘பருவகால’த்தின் பெயரைக்கொண்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரையும் கூடவே அழைத்துச் சென்றுவிடுவாராம். சமீபத்தில், ஆய்வாளருக்கு மாவட்டத்தில் விரைவாக வளர்ந்துவரும் நகரப் பகுதியிலுள்ள ஸ்டேஷனுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைத்திருக்கிறது. இதனால், பெண் சப்-இன்ஸையும் கையோடு கூட்டிக்கொண்டுபோக, உயரதிகாரிகளிடமும் அமைச்சர் ஒருவரிடமும் சிபாரிசுக்கு முட்டிமோதுகிறாராம் ‘லீலை’ ஆய்வாளர். அதற்குக் காரணம், அவர் போடும் பொய் கேஸ்களுக்குத் திரைக்கதை எழுதித் தருவதில் ‘பருவகால’ பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலே கில்லாடியாம். அதனாலேயே இவ்வளவு மல்லுக்கட்டுகிறார் என்று கமிஷனர் அலுவலகக் காக்கிகள் முணுமுணுக்க, அதெல்லாம் இல்லை... இது வேறுவிதமான ‘நட்பு’ என்று கண்ணடிக்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்!