அரசியல்
அலசல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

‘ஹனி’ மாவட்டத்தின் தனிப்பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரியாக இருக்கிறார், தமிழ்க் கடவுள் பெயர்கொண்டவர். இருக்கும் இடமும் அடையாளமும் வெளியில் தெரியாமல் வேலையைச் செய்வதுதான் இந்தத் துறையின் முக்கிய அம்சம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

“பர்டிகுலர்ஸ் எல்லாம் வந்தாச்சா..?” - கலெக்‌ஷனில் காக்கி உயரதிகாரி!

மஞ்சள் மாவட்டத்தின் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில், தனிப்பிரிவு ஏட்டுகளாகப் பணிபுரிவோர் வாரம்தோறும் மாவட்டத் தலைநகரில் நடைபெறும் மீட்டிங்கில் கலந்துகொள்வது வழக்கமாம். அந்த வாரம் முழுக்க லாட்டரி, சீட்டாட்ட கிளப், பிளாக்கில் விற்கும் மது மற்றும் போதை வஸ்துகளுக்காக வசூலிக்கப்பட்ட கலெக்‌ஷனை அப்போது ‘கருமை நிறக் கடவுளின்’ பெயரைக்கொண்ட தனிப்பிரிவு உயரதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டுமாம். அந்த வசூலை நேரடியாக முன்னின்று நடத்தித் தர ‘நம்பர் கடவுள்’ பேர்கொண்ட எஸ்.ஐ ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறாராம். அவரிடம் ஒவ்வொரு மீட்டிங்கின் முடிவிலும், “பர்டிகுலர்ஸ் எல்லாம் வந்தாச்சா...” என்று ‘கருமை நிறக் கடவுள்’ அதிகாரி கேட்பாராம். அதாவது எல்லோரிடமும் கலெக்‌ஷன் முடிந்ததா... என்பதுதான் அதன் அர்த்தமாம். இதில், கை சுத்தம் பார்க்கும் யாராவது கொஞ்சம் முரண்டு பிடித்தால், மாவட்டக் காவல் உயரதிகாரியிடம் அவர்களைப் பற்றி இல்லாதது பொல்லாததைப் பற்றவைத்து அலைக்கழிக்கிறாராம். பொறுத்துப் பொறுத்துப் பொங்கியெழுந்தவர்கள், தற்போது காவல்துறை தலைமையிடத்துக்குப் புகாரைத் தட்டிவிட்டிருக்கிறார்களாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

ஏ.சி லெவல் அதிகாரிகள் 5 லட்டுகள்... இன்ஸ். லெவல் அதிகாரிகள் 2 லட்டுகள்..!

மாங்கனி மாநகரில் ‘நாட்டார் தெய்வ’ பெயரைக்கொண்டவர் காவல்துறை மேலதிகாரியாக இருந்துவருகிறார். இவருக்குக் கீழ் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு பயங்கரமான டாஸ்க் விதித்திருக்கிறாராம். ஏ.சி லெவல் அதிகாரிகள் மாதம் 5 லட்டுகளும், இன்ஸ்பெக்டர் லெவல் அதிகாரிகள் மாதம் இரண்டு லட்டுகளும் கலெக்‌ஷன் செய்து தனக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த ‘டாஸ்க்’காம். இதனால், அந்த அதிகாரி பேரைச் சொன்னாலே ஏ.சி-களும் இன்ஸ்களும் அலறுகிறார்களாம். இந்த கேப்பில் மாநகருக்குள் லாட்டரியும் போதையும் கன்னா பின்னாவென களைகட்டத் தொடங்கியிருக் கிறதாம். யாரையாவது கைதுசெய்யப் போனால், ‘நாட்டார் தெய்வம்’ போன் போட்டு தடுக்கிறாராம். “ஒன்று, நாம் மாறுதல் வாங்கிப் போக வேண்டும் அல்லது இவரை மாற்றுவதற்கு ஒரு வழி பண்ண வேண்டும்” என்று வெளிப்படையாகவே புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் மாநகரக் காக்கிகள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘ஓசி ஷோ’வுக்கு ஓடிய காக்கிகள்... உள்ளேவிட மறுத்த ஊழியர்கள்!

‘ஜில்’ மாவட்டத்தில் `வாரிசு’ பட ரிலீஸின்போது பாதுகாப்புப் பணிக்குச் சென்ற காக்கிகள் சிலர், யூனிஃபார்மில் இருந்ததையும் மறந்து ரசிகர்களோடு ரசிகர்களாக முதல்நாள் முதல் ஷோவுக்கு முண்டியடித்து பால்கனியில் இடம்பிடித்திருக்கிறார்கள். தொப்பியைக் கழற்றிவைத்துவிட்டு படம் பார்க்க குஷியானவர்கள், வெளியே மஃப்டியிலிருந்த சக காக்கிகளுக்கும் போன் போட்டு தியேட்டருக்குள் வரச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஓசி ஷோ’ பார்க்கும் உற்சாகத்தில் உள்ளே போக முயன்ற மஃப்டி காக்கிகளை “டிக்கெட் இல்லாமல் உள்ளே விட முடியாது” என்று கறாராகச் சொல்லி விரட்டியிருக்கிறது தியேட்டர் நிர்வாகம். “போலீஸையே உள்ளவிட முடியாதா... உன் தியேட்டர் எப்படி ஓடுதுன்னு பாத்துக்குறோம்” என மீசையில் மண் ஒட்டாத தொனியில் ஊழியர்களை மிரட்டிவிட்டுச் சென்றார்களாம் அந்தக் கடமை தவறாத கண்ணியவான்கள்.

ஜூனியர் வாக்கி டாக்கி

மூணு ஸ்டார்ஸ் அதிகாரிகளுக்கு மசாஜ் புள்ளிகளின் கவனிப்பு!

‘டாலர் சிட்டி’யில் இயங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அனுமதியில்லாத மசாஜ் சென்டர்களை நோக்கி, தொழிலதிபர்களும் இளைஞர்கள் பட்டாளமும் படையெடுப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. ஆனால், இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வசூல்வேட்டையிலேயே குறியாக இருக்கிறார்களாம் மாவட்டக் காக்கிகள். ‘தற்போது புதிதாக வந்திருக்கும் உயரதிகாரியாவது ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்’ என்று சின்சியரான காக்கிகள் எதிர்பார்த்தார்களாம். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. காரணம், உயரதிகாரிக்கு மாவட்ட ‘அப்டேட்’களைத் தெரிவிக்கும் மூணு ஸ்டார்ஸ் கொண்ட இரண்டு அதிகாரிகளை, மசாஜ் சென்டர்களுடன் இணக்கமாக இருக்கும் உள்ளூர் காக்கிகள் ‘செமையாக’ கவனித்துவிடுவதுதான் என்று பேச்சு அடிபடுகிறது!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘ஓரம் போ... ஓரம் போ... பப்ளிசிட்டி போலீஸ் வருது!’

‘ஹனி’ மாவட்டத்தின் தனிப்பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரியாக இருக்கிறார், தமிழ்க் கடவுள் பெயர்கொண்டவர். இருக்கும் இடமும் அடையாளமும் வெளியில் தெரியாமல் வேலையைச் செய்வதுதான் இந்தத் துறையின் முக்கிய அம்சம். ஆனால் இவரோ, அதற்கு நேர்மாறாகச் செயல்படுகிறார். சமீபத்தில், துணிவான எதிர்க்கட்சித் தலைவர் மாவட்டத்துக்கு விசிட் அடித்தபோது, அவரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிக்கொண்டு செல்வது, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, வாகனங்களுக்கு வழி ஏற்படுத்துவது என்று துணிவானவர் கண்ணில் படும்படி ஓடியாடி ஃபிலிம் காட்டிக்கொண்டிருந்தார். “யாருய்யா இது போலீஸா இல்ல கட்சி விசுவாசியா..?” என்று கரைவேட்டிகள் சிலர் காக்கிகளிடம் விசாரித்தபோது, “இவரைத் தெரியலையா... போன தடவை அமைச்சர் துரைமுருகன் வந்தப்போ ஆளில்லாத இடத்துல ‘ஓரம்போ... ஓரம்போ...’னு சவுண்டைக் கொடுத்தாருல்ல, இவருதான் அவரு. உள்ளூர்ப் பக்கம் பெரிய அரசியல் தலைகள் யார் வந்தாலும், இவரு இப்படி பப்ளிசிட்டி கதகளி ஆட ஆரம்பிச்சுடுவாரு” என்று போலீஸ் வட்டாரமே சிரித்திருக்கிறது!