அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

ஜூனியர் வாக்கி டாக்கி

ஜூனியர் வாக்கி டாக்கி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூனியர் வாக்கி டாக்கி

தன் அதிகார வரம்புக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் செங்கல்சூளைகளில் வளைத்து வளைத்து மாமூல் பெறுவதில் இவர் கில்லாடியாம்.

ஜூனியர் வாக்கி டாக்கி

டைரியில் கணக்கெழுதும் ‘மன்னர்’ போலீஸ்!

அவார்டு மாவட்டத்தில் ‘சேவு’க்குப் பெயர்பெற்ற ஊரின் காவல் நிலைய எல்லைக்குள், புகையிலை ரெய்டு நடத்தப்பட்டது. இதில் சிக்கிய முக்கிய, பண பலம் படைத்தவர்களின் பெயர்களை வழக்கில் சேர்க்காமல் இருப்பதற்காக, திரைக்குப் பின்னால் கனஜோராக டீலிங் நடந்ததாம். ரெய்டு வழக்கை விசாரித்த ‘மன்னர்’ போலீஸ் அதிகாரி, பிடிபட்ட புகையிலை பண்டல்களின் அளவுக்கு ஏற்ப அஞ்சு, பத்து என்று பூந்திகளை அள்ளி வாயில் போட்டுக்கொண்டாராம். அதுமட்டுமல்ல, ஊரில் மறைமுகமாக விற்பனையாகும் ‘நம்பர் லாட்டரி’யைக் கண்டுகொள்ளாமல் இருக்க லாட்டரி முகவர்களிடம் வசூலில் இறங்குவதுடன், அடிதடி வழக்குகளில் சிக்கும் சிறார்கள், கணவன்-மனைவி பஞ்சாயத்து, விபத்து என்று ஒவ்வொரு வழக்குக்கும் `தனக்கு எவ்வளவு, ஸ்டேஷனுக்கு எவ்வளவு’ என்று வாங்கிய பூந்திகளையெல்லாம் டைரியில் கணக்கு எழுதி வைத்துக்கொள்ளும் அளவுக்கு ரொம்பவே கறாராக வேலை செய்கிறாராம் ‘மன்னர்’ போலீஸ்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘அண்ணன் சொல்லாம அணுவும் அசையாது!’

மேற்குப் பகுதியிலிருக்கும் மூன்றெழுத்து மாவட்டத்தில், கடவுளின் ஆயுதத்தைப் பெயராகக்கொண்ட ஊரின் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் ‘ஜெயமான’ உயரதிகாரி. இவர், ‘என் ஸ்டேஷன் லிமிட்டுக்குள் என்ன வேணுமானாலும் பண்ணிக்க... ஆனா, மாமூல் மட்டும் ரெகுலரா வந்துடணும்’ என்று வாய்மொழி உத்தரவே போட்டுவைத்திருக்கிறாராம். அங்கிருக்கும் ‘புகழ்பெற்ற’ நகராட்சியின் தலைவரான ஆளுங்கட்சிக்காரர் என்ன சொல்கிறாரோ அதுதான் ‘ஜெயமான’ அதிகாரிக்கு வேதவாக்காம். அவர் ‘யெஸ்’ சொன்னால் எஃப்.ஐ.ஆர் போடுவதும், ‘நோ’ சொன்னால் புகார் மனுவைக் குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதுமாக, `அண்ணன் சொல்லாம இங்கே அணுவும் அசையாது’ என்று மட்டையாக மடங்குகிறாராம். இதனால், புகாரில் சிக்குபவர்கள் ஆளுங்கட்சி ‘அண்ணனை’ சுற்றிச் சுற்றி வந்து ‘மரியாதை’ செய்கிறார்களாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

‘பெரிய அதிகாரி... கொஞ்சம் எட்டிப்பாக்கணும்!’

‘தூங்காத’ மாவட்டத்திலிருக்கும் ‘டாப்’பான ஊரில், 24 மணி நேரமும் மணல் கடத்தல், சரக்கு சப்ளை, கள்ள லாட்டரி, போதைப்பொருள் விற்பனை என்று சட்டவிரோதச் சமாசாரங்கள் களைகட்டுகின்றன. இருந்தும் ‘பிரிட்டன் மன்னர் குடும்பத்துப் பெயர்கொண்ட’ காவல் உயரதிகாரி எதையும் கண்டுகொள்வதில்லையாம். சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என்று யாராவது இது தொடர்பாக மாவட்டக் காவல் தலைமையிடம் புகார் மனு அளித்தாலும், அங்கிருந்தும் எந்த அசைவும் இல்லையாம். இதற்குக் காரணம், ‘டாப்’பான ஊரின் உளவுத்துறை காக்கிகளையும், மாவட்டக் காவல் தலைமை அலுவலகக் காக்கிகளையும் ‘பிரிட்டன்’ அதிகாரி நன்கு கவனித்துவருவதால், ரிப்போர்ட்டில் எந்தக் கறும்புள்ளியும் இருக்காதாம். தென்மண்டலப் பெரிய அதிகாரி இந்தப் பக்கம் கொஞ்சம் எட்டிப்பாக்கணும் என்று எதிர்பார்க்கிறார்கள் மக்கள்!

ஜூனியர் வாக்கி டாக்கி

என்.ஓ.சி வாங்கலையோ என்.ஓ.சி!’’

மாங்கனி மாநகரின் இதயப் பகுதியிலிருக்கும் காவல் நிலையத்தில், ராஜபதவியின் பெயர்கொண்டவர் காவல் உயரதிகாரியாக இருக்கிறார். இவரது அதிகார எல்லைக்குள் தரைக்கடைகள், பெட்டிக்கடைகள் என ஏகப்பட்ட குறு வியாபாரிகள் இருப்பதால், தினமும் அவர்களிடம் மாமூல் வசூலிப்பதற்காக, தனியாக இரண்டு காக்கிகள் அல்லாத நபர்களை நியமித்திருக்கிறாராம். குறு வியாபாரிகள் யாரும் ஒழுங்காக மாமூல் தரவில்லையென்றால், அடுத்த நாளே அங்கு கடைபோட முடியாத அளவுக்கு அராஜகம் செய்கிறார்களாம் அந்த இருவரும். இது ஒருபுறமிருக்க, அந்தக் காவல் உயரதிகாரியின் காவல் நிலையத்தில், “சொத்துப் பத்திரத்தைக் காணவில்லை” என்று யாராவது புகாரோடு வந்தால், ‘லக்கி பிரைஸ்’ அடித்ததுபோல அவர்களை அலேக்காக அமுக்கி, பத்திரத்துக்குத் தலா 60 பூந்திகளை வாங்கிக்கொண்டு, என்.ஓ.சி சான்று வழங்குகிறாராம். சமீபத்தில், அவரின் எல்லைக்குள்ளேயே வராத சொத்துப் பத்திரப் புகாரை, பூந்திகளுக்கு ஆசைப்பட்டு வழக்கு பதிவுசெய்தாராம். இப்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஐந்து பத்திரங்களுக்கு என்.ஓ.சி சான்று கொடுக்கப்பட்டிருக்கிறதாம்!

ஜூனியர் வாக்கி டாக்கி

“மாமூல், வசூல், டீலிங், டிரான்ஸ்ஃபர்..!”

பிரமாண்ட இயக்குநரின் பெயர்கொண்டவர் அந்தக் காவலர். அல்வா மாவட்டத்தின் எல்லையில் ‘பணம்’ கொழிக்கும் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ‘அதிகாரிகளுக்கு உளவு சொல்லும் பணியில் இருந்துவந்தார். தன் அதிகார வரம்புக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் செங்கல்சூளைகளில் வளைத்து வளைத்து மாமூல் பெறுவதில் இவர் கில்லாடியாம். பை-பாஸ் சாலை வழியாகக் கடந்துசெல்லும் கனிம வள லாரிகளைத் தனியாகச் சென்று மறித்து, அவர்களிடமும் வசூல் நடத்துவதில் வல்லவராம். புகையிலைக் கடத்தல் நடைபெறுவது குறித்து முன்கூட்டியே தகவல் திரட்டவேண்டிய அவர், அந்தத் தகவலை வைத்துக்கொண்டே சம்பந்தப்பட்ட நபரிடம் டீலிங் பேசி, வாங்க வேண்டியதை வாங்கிவிடுவாராம். அடங்காத இவரின் அடாவடி வசூல்வேட்டை குறித்து தொடர்ச்சியாகப் புகார் வந்ததால், சமீபத்தில் அருகிலிருக்கும் ‘பழங்கள்’ நிறைந்த காவல் நிலைய எல்லைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கே வசூலுக்குப் பெரிதாக வாய்ப்பில்லை என்பதால், மாறுதல் கேட்டு, மேலிடத்திலிருப்பவர்களிடம் முட்டிமோதிக்கொண்டிருக்கிறாராம்!“